அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் எம்.பி பதவிக்கு எதிராக மனு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறுக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதியால் பிரதிவாதியான ஆனந்த விஜேபால பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதாக மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில், ஆனந்த விஜேபால ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியாக நியமிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்ததாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியாக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 91வது பிரிவில் பொது சேவையில் ஈடுபடும் ஒருவர் பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க தகுதியற்றவர் என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி பதவி என்பது ஒரு அரச பதவி என்றும், அதன்படி, அமைச்சர் ஆனந்த விஜேபால அத்தகைய பதவியை வகிக்கும் அதேவேளையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, அரசியலமைப்பின்படி அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று தீர்ப்பளித்து, அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்