மற்றொரு வாகன மோசடியாளர் கைது போலி இயந்திரம் மற்றும் செஸி இலக்கங்களை உருவாக்கி, போலி ஆவணங்களைத் தயாரித்து வாகனங்களை விற்பனை செய்து வந்த “கலவானை போல்கொட்டுவே கடா” என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் கார் விற்பனையாளர் ஒருவர், வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவலின் அடிப்படையில், இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டு, இரத்தினபுரி கலவானை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது சுமார் 70 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5 போலி வாகனங்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கலவானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட வாகனங்களில், பழுதடைந்த நிலையிலும், ஓட்ட முடியாத நிலையிலும் இருந்த ஜப்பானிய கால்டஸ் காரின் செஸி பகுதி, மோசடியாக காரில் இருந்து அகற்றப்பட்டு, அந்த இடத்திலிருந்த மற்றொரு ஜப்பானிய சுசுகி காரின் செஸி பகுதியில் வெல்டிங் செய்யப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக சந்தேகநபர் இரத்தினபுரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது