அரசாங்கம் தனது கொள்கை பிரகடனத்திலும் தேர்தல் மேடைகளிலும் நெல் மாஃபியாவை முடிவுக்குக் கொண்டு வந்து, விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு உயர்ந்த விலை வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் இவை அனைத்தும் பொய் வார்த்தைகளாக மாற்றப்பட்டு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு மாத காலத்திற்குள் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி அப்பாவி விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (2) அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு குற்றஞ்சுமத்தியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் பெரும்போக நெல் விளைச்சலுக்கு சரியான விலையை நிர்ணயிக்காமல் செய்யும் நாடகத்தைப் பார்க்கும்போது இது தெளிவாகிறது. பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பெரும்போக நெல் அறுவடைக்கு முன்னர், உற்பத்திச் செலவுடன் மேலும் மூன்றில் ஒரு பங்கை சேர்த்து நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறினார்.
அதன் பின்னர் கடந்த ஜனவரி 11ஆம் திகதி விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதி அமைச்சர், இம்முறை நெல்லுக்கு உத்தரவாத விலையல்ல, குறைந்தபட்ச விலை வழங்கப்படும் என்று கூறினார். ஜனவரி 27 அன்று அவரே மீண்டும் கூறுகையில், நெல்லுக்கு இதுவரை அரசாங்கம் விலையை நிர்ணயிக்காதது வேண்டுமென்றே என்றும், இதுவரை நெல் விற்பனையில் விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
எனினும் ஈரப்பதமான நெல்லுக்கு 80-95 ரூபாவுக்கும், உலர்ந்த நெல்லுக்கு 100 ரூபாவுக்கும் இடைத்தரகர்கள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டும் விதம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கேட்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடைத்தரகர்களால் கொள்முதல் செய்யப்படும் நெல், பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களால் ஈரப்பதமான நாட்டரிசி நெல் 110 ரூபாவுக்கும், உலர்ந்த நாட்டரிசி நெல் 135 ரூபாவுக்கும், ஈரப்பதமான சம்பா அரிசி நெல் 115 ரூபாவுக்கும், உலர்ந்த சம்பா அரிசி நெல் 140 ரூபாவுக்கும் கொள்முதல் செய்யப்படுவது தெரிய வருகிறது.
அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையோ அல்லது குறைந்தபட்ச விலையோ வழங்காததால், இப்போது இலாபம் அடைபவர்கள் இடைத்தரகர்களும் பெரிய ஆலை உரிமையாளர்களும் என்பதை நன்கு புரிந்து கொள்ள இந்த விவரங்கள் போதுமானவை.
இதற்கிடையில் அமைச்சரும் பிரதி அமைச்சரும் விவசாயிகளுக்கு அச்சுறுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டதையும் நாம் காண முடிந்தது. 2025.01.28 அன்று நாமல் கருணாரத்ன பிரதி அமைச்சர் கூறுகையில், தாம் பயிரிட ஊக்குவித்த பின்னர் விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற போராட்டக் கோஷங்களுக்கு எதிர்காலத்தில் இடமிருக்காது என்றார். ஆனால் அன்று அந்தக் கோஷங்களை வயலுக்குக் கொண்டு சென்றவர்கள் இன்று அதற்கு எதிராக இருப்பது விதியின் விளையாட்டு போன்றுள்ளது.
மேலும், வழங்கப்படும் உர மானியத்திற்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட அளவு நெல்லை அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறி, 2025.01.29 அன்று விவசாய அமைச்சர் லால் காந்த விவசாயிகளுக்கு மேலும் ஒரு அச்சுறுத்தலை விடுத்தார். இவற்றைப் பார்க்கும்போது அரசாங்கத்தின் நோக்கமும் நடக்கவிருக்கும் செயல்முறையும் தெளிவாகத் தெரிகிறது.
அதாவது இந்த அச்சுறுத்தல்களால் பயந்து, அறுவடை செய்யப்படும் நெல்லை வைத்திருக்க முடியாமல் விவசாயிகள் அவற்றை இடைத்தரகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பதை இப்போதே செய்து வருகின்றனர். விரைவில் விவசாயிகள் கேட்ட விலைக்கு சமமான குறைந்தபட்ச விலையை அரசாங்கம் அறிவிக்கும், ஆனால் அப்போது அந்த விலைக்கு கொடுக்க விவசாயிகளிடம் நெல் இருக்காது. அப்போது ஊடகங்கள் முன் வரும் அரசாங்கம் ‘பாருங்கள் நாங்கள் நல்ல விலை கொடுத்தோம் ஆனால் விவசாயிகள் எங்களுக்கு நெல் கொடுக்கவில்லை’ என்று கூறி புதிய வடிவில் நாடகத்தைக்காட்டும் அது நிச்சயம்.
சமீபத்தில் இதற்கான மேடை அமைக்கப்படுவதை சமூக ஊடகங்கள் மூலம் காண முடிந்தது. அரசாங்கத்திற்கு ஆதரவான விவசாய அமைப்பின் விவசாய தலைவர் ஒருவர் ‘இப்போது தனியார் துறையில் நெல்லுக்கு உயர்ந்த விலை கிடைப்பதால் நாங்கள் ஒரு நெல் மணியைக்கூட அரசாங்கத்திற்கு கொடுக்க மாட்டோம்’ என்று கூறினார். இந்த நாடகம் மூலம் மீண்டும் பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு குறைந்த விலைக்கு பெரும்போக நெல் விளைச்சலை வாங்க வாய்ப்பளித்த அரசாங்கம், மற்றொரு பக்கத்தில் பெரும்போக நெல் கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 5 பில்லியன் ரூபாய் நிதியையும் சேமிக்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு நாட்டிற்கு சோறு வழங்கும் அப்பாவி விவசாயிகளை பல்வேறு கனவு உலகங்களில் சிக்க வைத்து, அநாதரவாக விடாமல், தேர்தலின் போது கூறியபடி உற்பத்திச் செலவுடன் 30மூ சேர்த்து விரைவாக நெல்லுக்கு விவசாயிகள் கோரும் 140 ரூபா நியாயமான விலையை வழங்குமாறு எதிர்க்கட்சியாக நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம்.
மேலும் இந்த நாடகத்தை நிறுத்தி, ஜனாதிபதி கூறியபடி தனியார் துறையுடன் போட்டியிட அரசாங்கம் தலையிட்டு, நெல் கொள்முதல் பொறிமுறையை செயல்படுத்துமாறும், ஒவ்வொரு கிலோ நெல்லுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்ட மேலதிக 2 ரூபா தொகையை வழங்குமாறும் நாங்கள் இறுதியாக அரசாங்கத்திற்கு நினைவூட்டுகிறோம்.