பிப்.20 முதல் எந்த நேரத்திலும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என அண்ணா தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 22 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன் கூறியதாவது: வரும் 5-ம் தேதி போக்குவரத்து செயலரை சந்தித்து வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கவிருக்கிறோம். இதையடுத்து 20-ம் தேதி முதல் எந்த நேரத்திலும் வேலைநிறுத்தம் நடைபெறும். தொமுசவை தவிர்த்து அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
அதிமுக ஆட்சியில் 3 ஆண்டு காலமாக இருந்த ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக்கினர். தற்போது 6-ம் ஆண்டை கடந்தும் ஊதிய பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
அங்கீகார தேர்தல் நடத்தி, 51 சதவீதம் வாக்கு பெறும் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஆளுங்கட்சித்தொழிற்சங்கம் உத்தரவு பெற்றிருக்கின்றது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அண்ணா தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
அனைத்து சங்கங்களையும் இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு அங்கீகார தேர்தல் நடத்தட்டும். ஊதிய உயர்வு வழங்குவதை தவிர்க்க அங்கீகார தேர்தல் போன்ற நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர்.
சிஐடியு மனவருத்தம்: தொமுச செய்யும் தவறுகளால் அவர்களுடன் இருந்த சிஐடியு உள்ளிட்ட சங்கங்களால் தொழிலாளர்களை சந்திக்க முடியவில்லை. மனவருத்தத்தில் இருக்கின்றனர். அண்ணா தொழிற்சங்கம் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலையில், எங்களுக்கு ஆதரவு கொடுக்க அனைத்து சங்கங்களும் தயாராக இருக்கின்றனர். இவ்வாறு ஆர்.கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.