by wp_shnn

வழக்கறிஞர்கள் மீது ஏற்றப்படும் சுமை நல நிதி முத்திரைத்தாள் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் நல நிதி முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வழக்கறிஞர்கள் மீது ஏற்றப்படும் சுமை, எனவே அதை ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் சட்டப்பணி சேவை ஆற்றும் காலத்தில் மரணமடையும் வழக்கறிஞர் குடும்ப நல நிதியை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும், வழக்கறிஞர் அலுவல் உதவியாளர்களுக்கு (குமாஸ்தாக்கள்) குடும்ப நல நிதி ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாகவும் உயர்த்தி அதற்கான சட்டங்களில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்தது. இது சட்டப்பணித்துறையில் பணியாற்றி வரும் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றது.

ஆனால் இதில் வழக்கறிஞர் நல முத்திரைத்தாள் கட்டணத்தை ரூ.30-ல் இருந்து ரூ.120 ஆகவும், வழக்கறிஞர் அலுவல் உதவியாளர் நல முத்திரைத்தாள் கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தில் முத்திரைத் தாள்கள் வக்காலத்து மனுக்களில் ஒட்டப்படும் நடைமுறையில், முத்திரைத்தாள் கட்டண உயர்வு சுமை வழக்கறிஞர்கள் தலையில் தான் விழுகின்றன.

எனவே முத்திரைத்தாள் கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற்று, குடும்ப நலநிதிக்கான ஆதாரத்தை வேறு வழியில் தேடவேண்டும். அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கரன், தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடகு வைத்து பெற்ற கடனை அடைக்க தவணை செலுத்த முடியாத நிலையில், அவரது வீட்டை ஜப்தி செய்ய, நிறுவன அதிகாரிகளும், முறப்பாடு காவல்துறையினரும் முயன்றனர்.

அப்போது சஙகரனும், அவரது மனைவியும் விஷம் குடித்ததில் சங்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி உயிருக்கு போராடி வருகிறார். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இவற்றை தடுக்கும் வகையில் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் முறைக்கு பொருத்தமான, சட்டத்தை நிறைவேற்றி விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்