சாலையோரம் வசிக்கும் வீடற்றோர் குறித்து கணக்கெடுக்கும் மாநகராட்சி: வீட்டு வசதியை ஏற்படுத்த நடவடிக்கை சாலையோரம் வசிக்கும் வீடற்றோருக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் வீடற்றோர் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வீடற்றோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கழிவறை, குளியலறை வசதி, மின்சார வசதி உள்ளிட்டபோதிய அடிப்படை சுகாதார வசதிகள் இன்றியும், தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் சாலையோரங்களில் படுத்து உறங்கும்போது, இவர்கள் மீது வாகனங்கள் மோதி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அவர்களிடம் சேமிப்பு பழக்கமும் பெரியதாக இல்லை.
அவர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க முன்வந்தாலும், தற்போது உள்ள நடைமுறைகளின்படி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பெற, பயனாளியின் பங்களிப்பாக சுமார் ரூ.6.50 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது.
அந்த அளவுக்கு அவர்களுக்கு பொருளாதார வசதி இல்லாததால், இதுவரை அரசு வழங்கும் குடியிருப்புகளை பெற முடியாமல் இருந்து வருகின்றனர். இதற்கு முன்பு பெரும்பாக்கம், கண்ணகிநகர், எண்ணூர் போன்ற பகுதிகளில் மட்டுமே குடியிருப்பு திட்டப் பகுதிகள் இருந்ததால், வேலைவாய்ப்பை சென்டரல் ரயில் நிலையத்தை சுற்றி வைத்துக்கொண்டு, பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு நீண்ட தூரம் சென்று வர சிரமப்பட்டதால், அரசின் குடியிருப்பு வழங்கும் திட்டங்களை இவர்கள் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.
மாநகரில் வீடற்றோர் எத்தனை பேர் உள்ளனர் என் உறுதியான விவரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் இல்லை. குறிப்பாக ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி, வால்டாக்ஸ் சாலை, என்எஸ்சி போஸ் சாலை, பிராட்வே உள்ளிட்ட ஜார்ஜ் டவுன் பகுதியில் அதிக அளவில் வீடற்றோர் வசித்து வருகின்றனர்.
மேலும் பல இடங்களில் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை வீடற்றோர் காப்பகங்களுக்கு அழைத்து, 3 வேளை உணவு இலவசமாக வழங்குவதாக தெரிவித்தாலும், அவர்கள் வருவதில்லை. இந்நிலையில் இவர்களின் நடைமுறை சிக்கல்களை தீர்த்து இவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறும்போது “இவர்களுக்கு குடியிருப்புகள் இருந்தால் தான் இவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இவர்களின் குழந்தைகள் போதிய வெளிச்சத்தில் படித்து வாழ்வில் உயர முடியும். அதனால் மாநகரப் பகுதியில் வசிக்கும் வீடற்றோர் குறித்து, மாநகராட்சி சார்பில் மெட்ராஸ் சமூகப் பணி கல்லூரியுடன் இணைந்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 6 வாரங்களில் கணக்கெடுப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளின் அடிப்படையில் அவர்களின் வீட்டு வசதியை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.