கேரளாவில் பள்ளி மாணவர் தற்கொலை: ‘உடல் ரீதியாக தாக்கி ராகிங்’ செய்ததாக தாய் புகார் – முக்கிய செய்திகள்
இன்றைய (03/02/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
கேரளாவில் கொச்சியிலுள்ள தனியார் பள்ளியில் ராகிங் சம்பவத்தால் 14 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து உயிரிழந்த சிறுவனின் தாய் முதலமைச்சர் அலுவலகத்துக்கும் மாநில காவல்துறை தலைமையகத்துக்கும் புகார் அனுப்பி உள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் “அவர் அனுப்பிய புகார் கடிதத்தில், சிறுவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனியார் பள்ளிகள் சேர்ந்த நிலையில், அவர் பள்ளி வளாகத்திலும் பள்ளி பேருந்திலும் ராகிங் செய்யப்பட்டுள்ளார், உடல் ரீதியாக தாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக கழிவறைக்குக் கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் ஜனவரி 15 ஆம் தேதி மாலை தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக அச்செய்தி கூறுகிறது.
சிறுவனின் ஆன்லைன் குறுஞ்செய்திகளை பார்க்கும்போது அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மறைக்க முயற்சிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. விசாரணை தடையின்றி நடைபெறுவதற்காக பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை சனிக்கிழமை நேரில் பார்வையிட்டனர். கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து கையிலெடுத்துள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன உளைச்சல், தற்கொலை எண்ணங்கள் இருந்தால், தமிழக அரசின் 104 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பெண் யானைக்காக சண்டையிட்ட ஆண் யானை உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானைக்காக இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டதாகவும், அதில் ஒரு ஆண் யானை உயிரிழந்ததாகவும் தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில், மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக நேற்று காப்பக துணை இயக்குநர் தேவராஜூக்கு செய்தி கிடைத்ததாகவும், அதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது இந்த தகவல் தெரியவந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வனத்துறையினர் சென்று பார்த்தபோது, மரங்கள், செடிகள், கொடிகள் சாய்ந்து போர்க்களம் போல காட்சியளித்தது. ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. மதுரையில் இருந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு அங்கே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது வனத்துறையினர் கூறுகையில் பெண் யானைக்காக இரண்டு காட்டு ஆண் யானைகள் கடுமையாக சண்டையிட்டுள்ளன.
சுமார் 5 மணி நேரம் வரை இந்த சண்டை நடந்திருக்கலாம், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சண்டை நடந்ததற்கான தடயங்கள் உள்ளன. இதில் 50 வயது ஆண் யானை படுகாயமடைந்து இறந்திருக்கிறது. யானைகள் சண்டை நடைபெற்றபோது காட்டுக்குள் நீண்ட நேரம் பயங்கரமாக பிளிறல் சத்தம் கேட்டதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர் என தெரிவித்தனர்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் மக்கள் சக்தியுடன் கை கோர்ப்போம் : தவெக தலைவர் விஜய்
நடைபெறவிருக்கும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சக்தியுடன் கை கோர்ப்போம் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார் என்று தினத்தந்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி பிப்ரவரி 2ம் தேதியுடன் ஓராண்டு முடிந்திருக்கும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விஜய் வெளியிட்ட அறிக்கையில், “இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. இதோ, இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலில், மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோத்து, அந்த அரசியல் பேரிலக்கை நோக்கி, நீங்கள் இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும். மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்தால்தான், தமிழக அரசியலின் கிழக்குத் திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக் கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றியே காட்ட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயில் தலித் பெண்ணின் சடலம் மீட்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், இளம் பெண் காணாமல் போனதாக பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய கிராமத்துக்கு அருகே உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து அவருடைய உடல் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ‘எங்களது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய உடலில் ஆழமான காயங்களும், எழும்பு முறிவும் ஏற்பட்டிருந்ததோடு, அவருடைய இரு கண்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று அந்த இளம்பெண்ணின் பெற்றோர் புகாா் தெரிவித்தனா். இந்நிலையில், மாநிலத்தில் தலித் விரோத ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அயோத்தியில் தலித் பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறாா். மகள் காணாமல் போனதாக பெற்றோா் புகாா் அளித்தும், கடந்த மூன்று நாள்களாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம் – நாமல் ராஜபஷ
கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணையலாம் என்று நாமல் ராஜபஷ தெரிவித்துள்ளதாக இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம். பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளோம். அரசாங்கத்தின் பலவீனத்தை கிராமத்துக்கு கிராமம் சென்று எடுத்துரைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அரசியல் கைதுகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. எனக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலும் எமக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும் எந்த குற்றச்சாட்டுக்களும் சட்டத்தின் முன் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் தொடர்ச்சியாகவே இந்த அரசாங்கத்தை கருதுகிறோம்.
அரசியல் பழிவாங்களுக்கு அவதானம் செலுத்துவதை விடுத்து மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம். ஆகவே பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு