புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகின்றது -நீதிபதி இளஞ்செழியன் ! on Sunday, February 02, 2025
புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில்இ வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (01) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன் போது ” தான் வவுனியாவில் நீதவானாக 9 ஆண்டுகளும், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக 3 ஆண்டுகளும் கடமை புரிந்துள்ளதாகவும், 2012 – 2014இல் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராகவும், 2018-2022 மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் 8 ஆண்டுகள் திருகோணமலையில் கடமை புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாகவும், ஒன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் என 3 ஆண்டுகள் கல்முனையில் கடமையாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாது தான் பிறந்த யாழ்ப்பாணத்தில் 2015-2018 வரை மூன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியதாகத் தெரிவித்த அவர் மட்டக்களப்பில் சிவில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஒராண்டு கடமை புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது 28 ஆண்டுகள் நீதித்துறை வாழ்க்கை புரியாத புதிராக முடிவுறுவதாகத் தெரிவித்த அவர் இன்னும் சாதிக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டு என்ற உணர்வு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.