பொதுஜன பெரமுனவின் கிராமத்துக்கு கிராமம் பொதுமக்கள் சந்திப்பு இன்று அனுராதபுரத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘கிராமத்துக்கு கிராமம்’ பொதுமக்கள் சந்திப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை (2) அநுராதபுரம் நொச்சியாக பகுதியில் முன்னெடுக்கவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இன்று அநுராதபுரம் ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெளிசாய விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் கிராமத்துக்கு – கிராமம் என்ற தொனிப்பொருளில் மக்களை தெளிவுப்படுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கிராமத்துக்கு கிராமம் பொதுமக்கள் சந்திப்பை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை இந்த வாரம் முதல் முன்னெடுப்பதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்ததன் பின்னர் வேட்புமனுத்தாக்கலுக்கான நேர்காணலை நடத்தவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.