மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உட்பட பொதுப் போக்குவரத்து பேருந்து, பொருள் விநியோக போக்குவரத்து வாகனங்கள் மற்றும் ஏனைய மோட்டார் எஞ்ஜின் பாவனையற்ற பொறிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அதிசொகுசு வரிக்கு அமைவாக இம்முறை முதன் முறையாக வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய 20 சதவீதமாக காணப்பட்ட தீர்வை வரி 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சலுகை வரி வட்டி வீதத்தின் அடிப்படையில் மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்வதற்காக விநியோகிக்கப்படும் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கும் அல்லது சுங்கத்தில் இருந்து விடுவிப்பதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
சட்டத்துக்கு முரணாக வாகனம் இறக்குமதி செய்யப்பட்டால் குறித்த இறக்குமதியாளர் தனது சொந்த செலவில் அந்த வாகனத்தை 90 நாட்களுக்குள் மீள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
தனியார் மோட்டார் வாகனம்,மின்சார மோட்டார் வாகனம்,மற்றும் மோட்டார் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இரத்துச் செய்யும் வகையில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை (31) வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்திருந்தார். இந்த வாகன இறக்குமதிக்கு உரியவகையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாளருக்கு விசேட ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கார், வேன்,பஸ்,முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், பொது போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேரூந்து,மற்றும் மோட்டார் வாகனம், விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனம்,ஏனைய மோட்டார் எஞ்சின் பாவனையற்ற பொறிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கபப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டின் 304 ஆம் பிரிவுக்கமைய தனிப்பட்ட பாவனைக்காக வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வாகன இறக்குமதிக்காக நிதியமைச்சு 09 நிபந்தனைகளை விதித்துள்ளது. வெளிநாட்டு கையிறுப்பை பாதுகாத்தல், பெருமளவிலான வாகனங்களை இறக்குமதி செய்வதை தவிர்த்தல்,அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதிய ஒன்பது நிபந்தனைகள் வருமாறு,
1-மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்கள் அரச நிறுவனங்களினால் விதிக்கப்படும் ஒழுங்குவிதிகளுக்கமைய வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
2- பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்களை தவிர்த்து ஏனைய இறக்குமதியாளர்கள் 12 மாத காலத்துக்குள் ஒரு மோட்டார் வாகனத்தை மாத்திரமே இறக்குமதி செய்ய வேண்டும்.
3- அந்த இறக்குமதியாளர் இரண்டாவது வாகனத்தை இறக்குமதி செய்யும் போது , முதலாவது வாகனம் இறக்குமதி செய்யப்பட்ட தினத்தில் இருந்து 12 மாத காலத்துக்குள் வேறு வாகனத்தை இறக்குமதி செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தி சத்திய பிரமாண பத்திரத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
4-இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனத்தை பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரிடமிருந்து கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் கொள்வனவாளர் பெயரில் அல்லது இறக்குமதியாளரின் பெயரில் 90 நாட்களுக்குள் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
5-அந்த பதிவுக்காக இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர் வரிச் செலுத்துவோர் அடையாள எண் ( TIN ) உள்ளடக்கிய சத்திய பிரமாண பத்திரம் மற்றும் இதர ஆவணங்களை மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
6-எவரேனும் இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்த மோட்டார் வாகனத்தை மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்ய தவறும் பட்சத்தில், அந்த வாகனம் பதிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் மோட்டார் வாகனத்தின் கிரயம், காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணம், ஆகியவற்றில் 45 சதவீதத்தை வரையறைக்குள்ளும், மாதாந்தம் 3 சதவீதத்தை மாததக்கட்டணமாகவும் செலுத்தல் வேண்டும்.
7- எச்சந்தர்ப்பத்திலும் மாத தாமதக் கட்டணம் செலுத்தல் தொடர்பில் கட்டணம் செலுத்தாமலிருக்க விலக்களிக்கப்படமாட்டாது.
8- மோட்டார் வாகனத்தை ஆயட்காலத்தை நிர்ணயிக்கையில் அந்த மோட்டார் வாகனம் உற்பத்தி செய்யப்பட்ட திகதி, கப்பலில் ஏற்றிய திகதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணித்தல் வேண்டும்.
9-சலுகை வரி வட்டி வீதத்தின் அடிப்படையில் மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்வதற்காக விநியோகிக்கப்படும் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கும் அல்லது சுங்கத்தில் இருந்து விடுவிப்பதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
தற்போது அமுலில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றுக்கு முரணாக மோட்டார் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டால், அந்த வாகனம் இறக்குமதி செய்யப்பட்ட தினத்தில் இருந்து 90 நாட்களுக்குள் குறித்த இறக்குமதியாளரின் தனிப்பட்ட செலவில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட வேண்டும் என்று நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டுள்ள போதிலும், வாகனங்களுக்கு அறவிடப்படும் வரி எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பது சிக்கலானதான காணப்படுகிறது. இதனை தெளிவுப்படுத்தும் வகையில் வாகனங்களுக்குரிய வரிகளை நிதியமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
வாகன இறக்குமதியின் போது அதிசொகுசு வரி, என்ஜின் கொள்ளளவு அடிப்படையில் அறவிடப்படும் சிசி வரி, சுங்க வரி, சேர்பெறுமதி வரி (வெற்) ஆகிய நான்கு வரிகள் பிரதானவையாக காணப்படும். இதில் அதிசொகுசு வரி இம்முறை பிரதானதாக காணப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிசொகுசு வரி 2019 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்டாலும் அந்த வரியின் கீழ் வாகனம் இறக்குமதி செய்யப்படவில்லை.
இதற்கமைய இந்த புதிய அதிசொகுசு வரி சட்டத்துக்கமைய முதன்முறையாக இந்த ஆண்டு வாகனம் இறக்குமதி செய்யப்படுகிறது. 500 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய வாகனத்துக்காக பல தொகுதிகளின் கீழ் அதிசொகுசு வரி அறவிடப்படும். அதற்கமைய அறவிடப்படும் அதிக பட்ச வரிவீதம் 120 ஆக காணப்படுகிறது.
எஞ்ஜின் இயலுமையின் அடிப்படையில் அறவிடப்படும் (cc) வரியான உற்பத்தி வரி வாகனங்களின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு வேறுப்படும்.தீர்வை வரி விடுவிப்பு சுங்க கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, 2023 ஆம் ஆண்டு வரி விலக்களிக்கப்பட்ட வாகனங்களுக்கு மீண்டும் தீர்வை வரி அறவிடப்படும். அத்துடன் புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 20 சதவீதமாக காணப்பட்ட தீர்வை வரி 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.