உப்பின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம் !

by sakana1

உப்பின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம் ! on Saturday, February 01, 2025

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இம்மாதம் உப்பின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 120 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் உப்பு பக்கெட்டின் விலை 180 ரூபாவாகவும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய சீரற்ற காலநிலை காரணமாக உள்ளுர் உப்பளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அதற்கமைய இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1485 மெட்ரிக் தொன் முதல் தொகுதி உப்பு கடந்த ஜனவரி 27ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டது.

அதற்குத் தீர்வாக தயார் செய்து சந்தைக்கு விநியோகிப்பதற்கான தீர்வை வரி வீதத்திற்கமைய பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்