வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்ததால் நீதிமன்றத்தில் ஆஜரான உள்துறைச் செயலர் நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால் தமிழக அரசின் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று மாலை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த 2015-ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு அதே ஆண்டு முடித்து வைக்கப்பட்டு வி்ட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் தமிழக அரசின் உள்துறைச் செயலர் நேற்று (ஜன.31) நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறைச் செயலர் நேரில் ஆஜராக விலக்கு அளி்க்க வேண்டுமென அரசு தரப்பில் கோரப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதி, மாலை 4.30 மணிக்குள் உள்துறைச் செயலர் நேரில் ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும், என எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் உள்துறைச் செயலரான தீரஜ்குமார் நேற்று மாலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவரது சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக போலீஸாருக்கு உரிய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்படும் என்றார்.
அதையடுத்து , நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறைச் செயலருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அனைவராலும் நீதிமன்றத்துக்கு வந்து பரிகாரம் தேட முடியாது என்பதால் ஏழை. எளிய மக்களுக்கு உதவும் வகையில் குற்ற வழக்குகளில் விரைவாக தீர்வு காண்பது அவசியம் என வலியுறுத்தினார். மேலும் உள்துறைச் செயலரிடம் உங்களை நேரில் வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கமல்ல. காவல்துறையில் நடைபெறும் சட்டவிரோதங்களை தெரியப்படுத்தவே ஆஜராக உத்தரவிட்டேன். இதுபோன்ற செயல்கள் காவல்துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது என தெரிவி்த்து வழக்கை முடித்து வைத்துள்ளார்.