by wamdiness

கோவை அல்லது சென்னைக்கு மேயராக வரலாம்..! – விருப்பத்தைச் சொல்லும் திவ்யா சத்யராஜ் நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தது பலரையும் வியந்து பார்க்க வைத்தது. ஏகப்பட்ட கனவுகளுடன் தான் கொங்கு அரசியலில் கால் பதித்திருக்கிறார் திவ்யா.

கோவை மாவட்டம் மாதம்​பட்டியை பூர்வி​க​மாகக் கொண்ட நடிகர் சத்யராஜ், சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை இன்றைக்கும் தக்கவைத்​திருப்​பவர். அவரின் கலை வாரிசாக மகன் சிபி சத்யராஜும் சினிமாவில் வலம் வருகிறார். அரசியல் வாரிசாக மகள் இப்போது திமுக-வில் இணைந்​திருக்​கிறார். திவ்யாவை வானதி சீனிவாசனுக்கு எதிராக கோவை தெற்கில் களமிறக்கப் போகிறது திமுக என்று பேச்சுகள் கிளம்பி இருக்கும் நிலையில் திவ்யா​விடமே இதுபற்றி பேசினோம்.

“கரோனா தொற்றுக்கு முன்பே அம்மாவின் பெயரில் ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, பொருளா​தாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச ஊட்டச்​சத்து வழங்கி வந்தேன். சிறு வயது முதலே எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. 2024 மக்களவைத் தேர்தலின் போது நிறையக் கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், அம்மாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக அரசியல் வருகையை அப்போது ஒத்திப் போட்டேன்.

பள்ளி மாணவர்​களுக்கு காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்​களும், திமுக-வின் கொள்கைகளும் பிடித்​திருந்​ததால் எனது சாய்ஸ் திமுக-வாக இருந்தது. அரசியலில் எனக்கு நிறைய கனவுகளும் ஆசைகளும் உண்டு. 2026-ல் எனக்கு சீட் கொடுங்கள் என்று நான் கேட்க​வில்லை. ஆனால், தலைவர் ஸ்டாலின் முடிவு செய்து சீட் கொடுத்தால் கண்டிப்பாக கொங்கு மண்டலத்தில் கோவையில் போட்டியிட விருப்பம். கோவையில் மகிழ்மதி இயக்கம் சார்பில் ஏராளமான நலத்திட்​டங்களை செய்துள்ளோம். இனி திமுக உடன் இணைந்து அந்தப் பணிகளைத் தொடர்​வோம்.

எங்களது பூர்விக ஊரான கோவையில் போட்டிட வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷமான விஷயம் தான். ஆனாலும், தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்வேன். பொருளாதார ரீதியாக நான் என்றுமே யாரையும் சார்ந்து இருந்​த​தில்லை. அப்பாவின் பெயரையும் எங்கும் பயன்படுத்​தியது கிடையாது. இது என் விளையாட்டு, நான் தான் விளையாடு​வேன்” என்றார்.

சகோதரர் சிபி சத்யராஜ் தவெக ஆதரவு நிலைப்​பாட்டில் இருப்பது குறித்து கேட்டதற்கு, “நானும் எனது அண்ணன் சிபியும் சிறந்த நண்பர்கள். அவர் தனக்குப் பிடித்த கட்சியின் தலைவர் குறித்து கருத்து தெரிவித்​துள்ளார். நான் எனக்குப் பிடித்த கட்சியில் சேர்ந்​துள்ளேன். எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது. நாங்கள் சந்தோஷமான சகோதர, சகோதரியாக உள்ளோம்.

நடிகர் விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்க்க​வில்லை. மக்கள் பணி செய்ய அரசியலில் இருக்க வேண்டிய​தில்லை. அதேபோல தமிழ், தமிழ் எனப் பேசும் விஜய், தன்னுடன் நடிப்​ப​தற்கு தமிழ்​நாட்டு நடிகைகளுக்கு வாய்ப்புக் கொடுத்​திருக்க வேண்டும். இங்கும் சிறந்த நடிகைகள் இருக்கையில் ஏன் தமிழ் பொண்ணு உங்கள் படத்தில் நாயகியாக நடிப்​ப​தில்லை?” என்றார். அண்ணா​மலையின் சாட்டையடி போராட்​டத்​தையும் விமர்​சித்த திவ்யா, “மணிப்பூர் வன்முறை பற்றி அண்ணாமலை வாயே திறக்க​வில்லை.

அப்படிப்பட்டவர் சாட்டையடி போராட்டம் நடத்தியதன் மூலம் அடுத்த தலைமுறை​யினருக்கு என்ன சொல்ல வருகிறார் என்று தெரிய​வில்லை. திமுக ஆட்சி இருக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்கிறார். அவருக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து செருப்பு அணிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில், காலில் முள் ஏதாவது குத்தினால் அதற்கும் திமுக தான் காரணம் என்பீர்கள்” என்று அப்பா ஸ்டைலில் நையாண்டி செய்தார். நிறைவாக, கட்சியில் இணைந்​தா​யிற்று உங்களின் அடுத்த இலக்கு தான் என்ன என்று கேட்டதற்கு, “கோவை மேயராகவோ, (இடஒதுக்கீடு மாறினால்) சென்னை மேயராகவோ வருவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று சொல்லி முடித்தார் திவ்யா சத்யராஜ்.

தொடர்புடைய செய்திகள்