- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புனேவில் நேற்று நடந்த நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இதுவரை தொடரை இழக்காமல் இந்திய அணி பயனித்துள்ளது.
அது மட்டுமின்றி 2019ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரைத் தொடர்ந்து 17வது முறையாக இந்திய அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு 3 விக்கெட், 79 ரன்களுக்கு 5 விக்கெட் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இடையிலான பார்ட்னர்ஷிப்தான் அணியை பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது.
ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும், ஷிவம் துபே 33 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு உதவினர்.
பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா, ரவி பிஸ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
குறிப்பாக களத்தில் வலுவாகக் காலூன்றிய ஹேரி ப்ரூக் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியபோது, அவரின் விக்கெட்டை வருண் வீழ்த்தியதோடு, அதே ஓவரில் கார்ஸ் விக்கெட்டை சாய்த்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தியபோது இங்கிலாந்து தோல்விப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கியது.
மேலும், 19வது ஓவரின் இறுதிவரை களத்தில் நின்று 53 ரன்கள் சேர்த்த ஷிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்திய அணியின் வெற்றி
ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றதில்தான் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஓவர்டன் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்டபோது, 143 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட 5வது பந்து ஷிவம் துபேவின் தலைக் கவசத்தில் பட்டு பந்து தெறித்தது. இதுபோன்ற நேரத்தில் உரிய முதலுதவியும், தேவைப்பட்டால் வீரரின் உடல்நிலைக்கு ஏற்ப மாற்று வீரர் விளையாடுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்பது ஐசிசி விதி.
இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் சென்றபின் ஷிவம் துபேவுக்கு ஃபீல்டிங் செய்ய முடியாததால் அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கன்கசன் மாற்றுவீரராகக் களமிறக்கப்பட்டு பந்துவீச வைக்கப்பட்டார். ராணா எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகளும் வெற்றிக்கு முக்கியமானவையாக, திருப்புமுனையாக மாறின.
ஐசிசி விதிப்படி, காயமடைந்த ஒரு வீரர் எந்தத் தகுதியில் இருக்கிறாரோ அதே தகுதியில்தான் கன்கசன் மாற்றுவீரரையும் களமிறக்க வேண்டும். ஒரு பேட்டர் கன்கசனில் வெளியேறினால் பேட்டரை களமிறக்கலாம், பந்துவீச்சால் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரையும், ஆல்ரவுண்டருக்கு பதிலாக ஆல்ரவுண்டரையும் களமிறக்கலாம்.
இந்நிலையில் ஷிவம் துபே ஒரு பேட்டர், ஆனால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரான ஹர்சித் ராணாவை களமிறக்கி விளையாட வைத்து இந்திய அணி பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என வர்ணனையாளர்களும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டென் மெக்கலமும் போட்டி முடிந்தபின் நடுவர்களுடன் மைதானத்தில் நீண்ட ஆலோசனை நடத்தினார்.
இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “எங்கள் தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், கன்கசனில் லைக் டூ லைக் மாற்றுவீரர் சரியானதாக எனக்குத் தெரியவில்லை, அதில் விருப்பமும் இல்லை,” என்று தெரிவித்தார்.
அதோடு, “இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஷிவம் துபேவால் 25 கி.மீ வேகத்தில்கூட பந்துவீச முடியாது. ஆனால், ஹர்சித் ராணா 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர், பேட்டிங் சரியாக வராது. ஆனால், துபே சிறந்த பேட்டர். எப்படி இது சரியான கன்கசன் மாற்று வீரராக இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் உண்மையாக வென்றிருக்க வேண்டும். கன்கசனில் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்ட முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்றும் கூறினார்.
மாற்று வீரராக இதுபோன்ற வீரரைக் களமிறக்கும் முன்பாக எதிரணியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் ஆனால் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை எனவும் ஜோஸ் பட்லர் குறிப்பிட்டார்.
“நான் பேட்டிங் செய்ய வந்தபோது, திடீரென ஹர்சித் ராணா பந்துவீச வருகிறார். இவர் எப்படி பந்து வீசுகிறார் என்று எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இது உண்மையில் ஏற்க முடியாத முடிவு. சரியான மாற்று வீரர் முடிவும் அல்ல. இது போட்டி நடுவர் ஸ்ரீநாத் எடுத்த முடிவு என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் போட்டி நடுவரிடம் சில கேள்விகளை எழுப்பி நாங்கள் எங்கள் நிலையைத் தெளிவுபடுத்துவோம். எங்களுக்கு வெற்றி பெறுவதற்குப் பல வாய்ப்புகள் இந்த ஆட்டத்தில் இருந்தன. ஆனால், பயன்படுத்த முடியாததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் இதுவும் ஒன்று” எனத் தெரிவித்தார்.
இந்திய அணி கூறியது என்ன?
இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் மோர்கல் கூறுகையில், “இது முற்றிலும் எங்களின் முடிவல்ல. கன்கசன் மாற்றுவீரராக ராமன்தீப் சிங், ஹர்சித் ராணா இருவர் பெயரைக் கொடுத்தபோது, போட்டி நடுவர் ஸ்ரீநாத் தேர்வு செய்ததுதான் இறுதி முடிவு. ராணாவின் பெயரைத் தேர்வு செய்தபோது, அவர் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார் உடனடியாகக் களமிறங்க அவரை அவசரப்படுத்தினோம். இந்த முடிவு எங்களை மீறியது, பெயரை மட்டுமே நாங்கள் அளிக்க முடியும், முடிவெடுப்பது போட்டி நடுவர்தான்” எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி வர்ணணனையாளர்களாக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன், நிக் நைட் இருவரும், இந்திய அணி கன்கசன் மாற்றுவீரராக துபேவுக்கு பதிலாக ஹர்சித் ராணா களமிறங்கியது குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர்.
கன்சனில் செல்லும் வீரரின் தகுதிக்கு நிகரான மாற்றுவீரரைக் களமிறக்க வேண்டும், மாற்றுவீரரை களமிறக்கும் முன் எதிரணியினரிடம் ஆலோசிக்கலாம் என்ற இரு ஐசிசி விதிகளுமே நேற்று கடைபிடிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.
ஒருவேளை ஐசிசி விதியின்படி துபேவுக்கு மாற்றாக ராமன்தீப் சிங் அல்லது பேட்டரை களமிறக்கி இருந்தால், நேற்றைய ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியிருக்கக் கூடும்.
ஏனென்றால், ஹர்சித் ராணா கடைசி நேரத்தில் எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தது. அப்படியிருக்கையில் ஹர்சித் ராணாவால் வெற்றி பறிபோனதை, இங்கிலாந்து வீரர்கள் ஏற்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற்ற விதம் சரியானதா, இது நேர்மையானதா என்ற கேள்விகள், விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது.
இந்திய அணியின் டாப் ஆர்டர் தோல்வி
இந்திய அணியின் பேட்டிங்கில் நேற்றும் வழக்கம்போல் டாப் ஆர்டர் தோல்வி அடைந்தனர். சாம்ஸன் தொடர்ந்து 4வது போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினாலும் 29 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக டக்அவுட்டில் வெளியேறினார், இவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. ரிங்கு சிங் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி, 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் இருந்தது. 6வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இருவரும் சேர்ந்து ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கி இருவரும், சரிந்திருந்த ரன்ரேட்டை உயர்த்தினர். ஹர்திக் 27 பந்துகளிலும், துபே 31 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.
ஆறாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிவரை களத்தில் இருந்த துபே 53 ரன்களில் ரன்அவுட் ஆனார். கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி அக்ஸர் படேல், அர்ஷ்தீப், துபே ஆகிய 3 விக்கெட்டுகளை இழந்தது. 180 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என இருந்த இந்திய அணி ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆட்டம் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பக்கம் இருந்தது. 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக், துபேவின் ஆட்டம்தான் திருப்புமுனையாக மாறியது. அதேநேரம் இருவரும் பிரிந்த பிறகு களமிறங்கிய எந்த பேட்டரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இந்தத் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.
‘சரியான திசையில் செல்கிறோம்’
வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், “அணியில் உள்ள ஒவ்வொருவரும் தொடக்கம் முதல் கடைசி வரை சிறப்பாகச் செயல்பட்டோம். 12 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த தருணத்தில்கூட நம்பிக்கையை இழக்காமல் அதிரடியாகவே பேட் செய்தோம். துபே, பாண்டியா தங்களின் அனுபவத்தை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தியது சிறப்பு. இதைத்தான் வலைப்பயிற்சியில் பேசினோம், அதைச் செய்துள்ளனர்.
சரியான திசையில் நாங்கள் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பவர்ப்ளேவுக்கு அடுத்து வரும் ஓவர்கள் முக்கியமானவை என்று எனக்குத் தெரியும், அந்த நேரத்தில் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. சில விக்கெட்டுகளை வீழ்த்தினோம், ராணா 3வது பந்துவீச்சாளராக வந்து சிறப்பாகப் பந்துவீசினார்” எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்து தோல்விக்கு என்ன காரணம்?
இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் அற்புதமாக இருந்தது, நடுவரிசையில் ஹேரி ப்ரூக்கின் ஆட்டமும் வெற்றியின் அருகே கொண்டு சென்றது. ஆனால், முக்கியமான தருணத்தை கைப்பற்றத் தவறியதே இங்கிலாந்து அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
பென் டக்கெட், பில் சால்ட் இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். இந்தத் தொடரில் இதுவரை அதிரடியாக ஆடாத சால்ட் இந்த ஆட்டத்தில் நிதானமாக ஆடி பவுண்டரிகளை அடித்தார். பவர்ப்ளே முடிவில் 62 ரன்கள் சேர்த்து ட்கெட்(39) விக்கெட்டை பிஸ்னாயிடம் இங்கிலாந்து இழந்திருந்தது.
இங்கிலாந்து அணி வெற்றிக்கு 120 ரன்கள் தேவைப்பட்டது, 14 ஓவர்கள் இருந்தன, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன.
அந்த நிலையில், அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரில் சால்ட்(23) போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 ரன்னில் பிஸ்னாய் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
லிவிங்ஸ்டோன், ஹேரி ப்ரூக் இருவரும் களத்தில் நிலைக்கத் தொடங்கினர். ஹேரி பரூக் வழக்கத்துக்கு மாறாக இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக ராணா பந்துவீச்சில் 6 சிக்ஸர்கள், பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்து, 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ராணா பந்துவீச்சில் 9 ரன்னில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். விக்கெட் சரிந்தபோதிலும் இங்கிலாந்து அணியை ஹேரி ப்ரூக் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
வருண் 15-வது ஓவரை வீசினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. களத்தில் செட்டில் ஆன பேட்டர் ஹேரி ப்ரூக்கை(51) வீழ்த்தி, அதே ஓவரில் பிரைடன் கார்ஸும் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து சற்று ஆட்டம் கண்டது.
அதன் பிறகு கடைசி வரிசை வீரர்கள் பெரிதாக பேட்டிங்கில் பங்களிக்கவில்லை, ஓவர்டன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த பின், யாரேனும் ஒரு பேட்டர் பொறுப்பெடுத்து பேட் செய்திருந்தால் வெற்றி இங்கிலாந்து அணியின் கையிலிருந்து நழுவிச் சென்றிருக்காது.
கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்களும், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்களும் தேவைப்பட்டன. இது டி20 போட்டிகளில் நிச்சயமாக அடைந்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், இங்கிலாந்து அணியில் கடைசி வரிசை பேட்டர்கள் பொறுப்பெடுத்து பேட் செய்யாமல் இருந்தது தோல்விக்கான காரணங்களில் ஒன்று.
பந்துவீ்ச்சில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்திய நிலையில் அதன் பிறகு நெருக்கடி கொடுக்கத் தவறியதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. ஹர்திக் – துபே பார்ட்னர்ஷிப்பை தொடக்கத்திலேயே உடைத்திருந்தால், நிச்சயமாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கக்கூடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு