அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமான ஆம்புலன்ஸ், குழந்தை நோயாளியுடன் சென்றபோது நடந்த விபத்து

அமெரிக்கா: மீண்டும் ஒரு விமான விபத்து, வெடித்துச் சிதறிய விமானம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Citizen.com

அமெரிக்காவின் வட கிழக்கு, ஃபிலடெல்ஃபியாவில் சிறிய விமானம் ஒன்று கட்டடங்களின் மீது மோதி வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் வீடுகள், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. விமானம் மோதியதில் தரையில் இருந்தவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை மாலை இந்த விமான விபத்து நிகழ்ந்தது. அந்த விமானத்தில் பலர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்பு மற்றும் அவசரக்கால குழுவினர் மாலை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, விபத்து நடந்த இடத்திலிருந்து பொதுமக்கள் விலகிச் செல்ல வலியுறுத்தினர்.

இந்த விபத்துக்கான காரணம், விமானத்தில் இருந்தவர்கள் யார், அவர்களில் எத்தனை பேர் உயிர் பிழைத்துள்ளார்கள் என்பன போன்ற விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பென்சில்வேனியா நகரின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் அமைந்திருந்த மூன்று மாடி வணிக வளாகமான ரூஸ்வெல்ட் மாலுக்கு சற்று தொலைவில் இந்த விபத்து நடந்ததாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளி நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதி, மொட்டை மாடிகளுடன் கூடிய வீடுகள் மற்றும் கடைகள் நிரம்பியது.

இணையத்தில் பகிரப்பட்ட இந்தச் சம்பவத்தின் வீடியோவில், விமானம் விரைவாகக் கீழ்நோக்கி விழுவதையும், விரைவாகத் தீப்பிடித்து வெடித்ததையும் காட்டியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

விமானத்தில் பயணித்தவர்கள் யார்?

வெள்ளிக்கிழமை மாலை மருத்துவப் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த ஜெட் விமானத்தில் நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை நோயாளி மற்றும் நோயாளியின் துணைப் பணியாளர்கள் இருந்ததாக மருத்துவ விமான நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் ஆம்புலன்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மெக்சிகோவின் டிஜுவானாவுக்கு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், ஜெட் ரெஸ்க்யூ ஏர் ஆம்புலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் ஷாய் கோல்ட் என்.பி.சி செய்தி சேனலிடம் தெரிவித்துள்ளார்.

விமானத்தில், சிறுமியுடன், அவரது தாயார், ஒரு விமானி, ஒரு துணை விமானி, ஒரு மருத்துவர், துணை மருத்துவர் ஆகியோர் இருந்ததாக செய்தித் தொடர்பாளர் ஷாய் கோல்ட் தெரிவித்தார்.

அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமானம், குழந்தை நோயாளியுடன் சென்றபோது விபரீதம் - நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Pennsylvania Representative Jared Solomon

அந்தக் குழந்தையின் சிகிச்சைக்கான செலவுகளை ஒரு தன்னார்வ நிறுவனம் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் என்.பி.சி.யிடம் தெரிவித்தார்.

மேலும், “சிகிச்சையின்போது உயிர் பிழைப்பதற்கு அவர் மிகவும் போராடினார். இப்போது துரதிர்ஷ்டவசமாக வீட்டிற்குச் செல்லும் வழியில் இந்த சோகம் நிகழ்ந்துவிட்டது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

விபத்தின்போது என்ன நடந்தது?

“இதுவொரு மோசமான பேரழிவு. இதில் இழப்புகள் இருக்கும்,” என்று பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ விபத்து நடந்த இடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஃபிலடெல்பியா மேயர் செரெல் பார்க்கர், “இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நகர மக்கள் பிரார்த்திக்க வேண்டுமென்றும்” கூறியுள்ளார்.

மேலும், “எங்காவது விமானத்தின் பாகங்களைக் கண்டால், எதையும் தொடாமல், அவசர உதவி எண்ணான 911ஐ அழைக்கவும்,” என்று நகர மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஓர் அறிக்கையில், தனது நிர்வாகம் இதுகுறித்து கவனித்து வருவதாகவும், “பென்சில்வேனியாவின் ஃபிலடெல்பியாவில் விமானம் விபத்துக்கு உள்ளானதை அறிந்து மிகவும் வருந்துவதாகவும்” கூறியுள்ளார்.

இந்த விபத்தில் இருந்து வெளிப்பட்ட சிறு துண்டுகள் கார்களை சேதப்படுத்தியதாகவும், தெருக்களில் விமானத்தின் பாகங்கள் எரிந்தபடி சிதறி விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.

அமெரிக்கா: மீண்டும் ஒரு விமான விபத்து, வெடித்துச் சிதறிய விமானம் – என்ன நடந்தது?

லியர்ஜெட் 55 என்ற விமானம், வடகிழக்கு ஃபிலடெல்ஃபியா விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி மாலை 6:30 மணியளவில் புறப்பட்டு, நான்கு மைல்களுக்கு குறைவான தூரமே பயணித்த நிலையில், விபத்துக்கு உள்ளானதாக ஃபெடரல் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விமானம் மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது.

ஃபெடரல் விமானப் போக்குவரத்து அமைப்பு, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகிய அமைப்புகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்தப் பகுதியில், மேகமூட்டமாகவும் மழை பெய்யும் மாலை நேரமாகவும் இருந்ததாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்துள்ளன. மணிக்கு 10 முதல் 20 மைல் வேகத்தில் காற்று வீசியதாகவும் காட்டுகின்றன.

அமெரிக்கா ஃபிலடெல்ஃபியா விமான விபத்து

பட மூலாதாரம், City of Philadelphia Office of Emergency Management.

இந்த விமானம் வெடித்துச் சிதறியபோது, “வானம் முழுக்க நெருப்புப் பந்து போலக் காட்சி அளித்ததாக,” நேரில் பார்த்த ஒருவர் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

“ஒரு விமானம் கட்டடத்தின் மீது மோதி வெடித்ததை நான் பார்த்தேன். அப்போது வானமே ஒளிர்ந்தது. அது மிகவும் மோசமாக இருந்தது,” என்று உள்ளூர் ஊடகமான டபுள்யூ.பி.வி.ஐ தொலைக்காட்சி சேனலிடம் அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து ஏற்பட்டபோது நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போல தான் உணர்ந்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.

தி ஃபிலடெல்பியா இன்க்வைரரிடம் பேசிய 23 வயதான ரியான் தியான், தான் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வானத்தை ஆரஞ்சு நிறமாக மாற்றிய ஒரு “பெரிய நெருப்புப் பந்தை” பார்த்ததாக விவரித்துள்ளார்.

“நாங்கள் தாக்கப்படுவதாக நினைத்தேன்” என்று அவர் கூறினார். மக்கள் தப்பியோடத் தொடங்கியதைக் கண்டதும், தானும் “அங்கிருந்து வெளியேற” முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, தனது எக்ஸ் பக்கத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், “சிறிய தனியார் விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதைக் கையாள அனைத்து வளங்களையும் வழங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் டிசியில் ஒரு விமானமும் ஒரு ராணுவ ஹெலிகாப்டரும் மோதி பெரிய விபத்து ஏற்பட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் இருந்த 67 பேரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு