by sakana1

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (31) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  அதிகாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து, தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதல் கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 பேரையும் ஆஜர்படுத்தியபோது தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (31) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான், மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்படி, 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனவர்கள்  தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத இழுவை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு ரோலர் படகுகளோடு கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்