வருண் சக்ரவர்த்தி வித்தியாசமான சாதனை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த ‘மோசமான முடிவுகள்’

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டது.
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும், ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டத்திலும் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது இங்கிலாந்து அணி.

ராஜ்கோட் மைதானத்தில் கடைசியாக 2017ம் ஆண்டு டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் இப்போது தோற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய மண்ணில் தொடர்ந்து 10 டி20 போட்டிகளாக வெற்றி நடை போட்டுவந்த இந்திய அணி, 446 நாட்களுக்குப் பின் தோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து திக்குமுக்காட வைத்து 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருதுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் 2வது முறையாக ஆட்டநாயகன் விருதை வருண் பெற்றுள்ளார்.

வருண் சக்ரவர்த்தியின் கணிக்க முடியாத பந்துவீச்சில் சிக்கி இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. 140 ரன்களுக்குள் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் லியாம் லிவிங்ஸ்டோனின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி கூடுதல் ரன்களை சேர்த்தது.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா ஹாட்ரிக் வெற்றியை தவற விட்டது ஏன்?

ராஜ்கோட் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து வர்ணனையாளர் முரளிகார்திக் கூறும் போதுகூட ” என் தலை எவ்வாறு வழுக்கையாக இருக்கிறதோ அதுபோன்று இந்த ஆடுகளம்” என்றார். பேட்டர்கள் முதலில் நிதானமாக ஆடி, களத்தில் நிலைத்துவிட்ட பிறகு பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியும். இங்கிலாந்து அணி இங்கு சேர்த்த 171 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் சேர்க்கப்பட்ட சராசரி ஸ்கோரைவிட குறைவுதான்.

அப்படி இருக்கையில் இந்திய அணியின் பேட்டர்கள் எளிய ஸ்கோரை கூட சேஸ் செய்யாமல் தோற்றதற்கு பேட்டர்களின் பொறுப்பற்ற செயல்தான் காரணம். சாம்ஸன்(3), அபிஷேக் சர்மா(24), கேப்டன் சூர்யகுமார்(14), திலக் வர்மா(18), துருவ் ஜூரெல்(2), பாண்டியா(40) அக்ஸர் படேல்(15), வாஷிங்டன் சுந்தர்(6) என 8 பேட்டர்கள் வைத்திருந்தும் 171 ரன்களை சேஸ் செய்ய முடியவில்லை.

ஹர்திக் பாண்டியா(40), தவிர மற்ற எந்த பேட்டரும் 25 ரன்களைக் கடக்கவில்லை, ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்த டி20 தொடரிலேயே இந்திய அணி சார்பில் இருவர் மட்டும்தான் அரைசதம் இதுவரை அடித்துள்ளனர்.

சாம்ஸன் தொடர்ந்து 3 டி20 போட்டிகளிலும் ஆர்ச்சர் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளார். சாம்ஸனின் பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அவரின் மார்பு உயரத்துக்கு பவுன்ஸர் போடும்போது அதை தூக்கி அடிக்க முற்பட்டு ஒரே மாதிரியாக ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம்ஸனின் பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அவரின் மார்பு உயரத்துக்கு பவுன்ஸர் போடும்போது அதை தூக்கி அடிக்க முற்பட்டு ஒரே மாதிரியாக ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த ‘மோசமான முடிவுகள்’

கேப்டன் சூர்யகுமார் ஃபார்மின்றி தவிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் ஸ்கே ஒற்றை இலக்க ரன்னில்தான் ஆட்டமிழந்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே அவரது பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவுக்கும், ஸ்கோரும் பெரிதாக எடுக்கவில்லை.

கேப்டன் பொறுப்பு அவரின் இயல்பான பேட்டிங்கிற்கு சுமையாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தத் தொடரிலும் களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முற்பட்டுதான் சூர்யகுமார் விக்கெட்டை இழந்துள்ளார். ஓரளவு நிலைத்து பேட் செய்திருந்தால் நடுவரிசை ஸ்திரப்பட்டு ரன்கள் வந்திருக்கும்.

பவர்ப்ளே முடிவதற்குள்ளே இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பேட்டர்களும் ஓரளவு பொறுப்புடன் பேட் செய்திருக்கலாம். திலக் வர்மா கடந்த 5 இன்னிங்ஸ்களாக நாட்அவுட் முறையில் இருந்தே அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற நிலையில், அடில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

2024, நவம்பர் 10ம் தேதியிலிருந்து திலக் வர்மா பங்கேற்ற போட்டிகளில் நாட்அவுட் முறையில்தான் ஆடி வருகிறார், இந்த இடைப்பட்ட காலத்தில் 336 ரன்கள் சேர்த்துள்ளார், ஒரு சதம் மற்றும் அரைசதமும் அடித்த நிலையில் நடுவரிசையில் அவரின் மீது சுமையை ஏற்றுவதுதவறாகும்

அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தரைவிட சிறந்த பேட்டரான துருவ் ஜூரெலை 8வது வீராகக் களமிறக்கி நெருக்கடியில் தள்ளினர். இடது,வலது பேட்டர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் வரிசையை குழப்பி, முறையான பேட்டரை நடுவரிசையில் களமிறக்காமல் 8-வது வரிசையில் களமிறக்கி அவரை வீணடித்தனர்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருவ் ஜூரெலை 8வது வீராகக் களமிறக்கி நெருக்கடியில் தள்ளினர்.

தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால்தான் அடுத்தடுத்து வரும் வீரர்களுக்கு சுமை, அழுத்தம் குறையும். ஆனால், கடந்த 3 போட்டிகளிலும பவர்ப்ளே ஓவர்களுக்குள் தொடக்க வீரர்களில் யாரேனும் ஒருவர் ஆட்டமிழந்துவிடும் போது, பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தும் வகையில் அடுத்துவரும் பேட்டர்கள் அதிரடி ஆட்டத்தை கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விக்கெட்டை இழக்கிறார்கள்.

ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு கடந்த 3 போட்டிகளிலும் இல்லை. யாரேனும் ஒரு வீரர்தான் வெற்றியை தோளில் சுமந்து செல்ல வேண்டிய நிலைதான் இருந்தது. கடந்த இரு போட்டிகளில் அபிஷேக் சர்மா, திலக்வர்மா தோளில் சுமந்தநிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றியை சுமக்க யாரும் முன்வராத நிலையில் தோல்வி அடைந்துள்ளது.

அதுமட்டுமல்ல இங்கிலாந்து அணி 127 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதுகூடஆட்டம் இந்திய அணியின் கைவசம்தான் இருந்தது. ரவி பிஸ்னாய் வீசிய 16வது ஓவர்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி இங்கிலாந்தின் கைஓங்கச் செய்தது. பிஸ்னாய் ஓவரில் லிவிங்ஸ்டன் அடித்த 3 சிக்ஸர் ஸ்கோரை உயர்த்தியது.

2023ம் ஆண்டுக்குப்பின் முகமது ஷமி இந்த ஆட்டத்தில் பந்துவீசியும் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது ஷமி இந்த ஆட்டத்தில் பந்துவீசியும் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

வருண் சக்ரவர்த்தி வித்தியாசமான சாதனை

டி20 தொடர் தொடங்கியதிலிருந்து வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டருக்கு புரியாத புதிர் போன்று இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஆர்ச்சர் போல்டான போது, பந்து எப்படி தனது கட்டுப்பாட்டை மீறி போல்டாகியது எனத் தெரியாமல் புலம்பிக்கொண்டே ஆட்டமிழந்து சென்றார். புதிராகப் பந்துவீசும் வருணின் உழைப்பை இந்திய அணி இந்த ஆட்டத்தில் பயன்படுத்தவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் இங்கிலாந்து ரன்ரேட்டை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளத்தை வருண் அமைத்துக்கொடுத்தார்.

இந்திய அணிக்குள் மீண்டும் வந்ததில் இருந்து வருணின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. கடந்த 10 போட்டிகளில் மட்டும் வருண் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆட்டத்தையும் சேர்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சர்வதேச டி20 போட்டியில் 5 விக்கெட் எடுப்பது இது 2-வது (ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) முறையாகும். ஆனால் அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தோல்வியடைந்த போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வித்தியாசமான சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 10 போட்டிகளில் மட்டும் வருண் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

“வெற்றியைத் தவறவிட்டோம்”

தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் ” பனியின் தாக்கம் லேசாக இருந்ததாக நினைக்கிறேன். அக்ஸர்-ஹர்திக் களத்தில் இருந்தபோது 24 பந்துகளில் 55 ரன்கள்தான் தேவைப்பட்டன. ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது என நினைத்தோம். அதில் ரஷித் எங்ளை ரன் சேர்க்கவிடாமல் கட்டிப்போட்டார். ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்கிறோம்.

127 ரன்களி்ல் 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்த நிலையில் 170 ரன்களை அடிக்க வைத்தது தவறுதான். பேட்டிங்கிலும் அதிகம் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஷமியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, வருண் கடினமாக உழைக்கிறார், அதற்கான பலன் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறுகளை கேப்டன் பட்லர் செய்யவில்லை.

இந்திய பேட்டர்களை திணறவிட்ட ரஷித்

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். நடுப்பகுதியில் ரன் ரேட்டை கட்டுப்படுத்தி இந்திய அணியை தோல்வியில் தள்ளினார். 4 ஓவர்கள் வீசி ரஷித் 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், தனது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸரைக் கூட அடிக்க ரஷித் அனுமதிக்கவில்லை. அதிலும் திலக் வர்மாவை போல்டாக்கிய ரஷித்தின் பந்துவீச்சு, மறைந்த ஷேன் வார்ன் பந்துவீச்சுக்கு ஓப்பாக அமைந்தது.

மிகக் குறைந்த 75 கி.மீ வேகத்தில் பந்தை டாஸ் செய்யும் விதம், அதை அடிக்க முடியாமல் பேட்டர்கள் திணறுவது என ரஷித்தின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு நேற்று சிம்மசொப்பனமாகவே இருந்தது. நடுப்பகுதியில் 7 முதல் 15 ஓவர்கள் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்த நிலையில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்தது.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

4 பேர் 8 விக்கெட்டுகள்

ராஜ்கோட் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் பெரிதாக ஒத்துழைக்காத நிலையில்கூட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மைதானத்தை நன்கு புரிந்து அதற்கு ஏற்றபடி பந்துவீசினர். அதுமட்டுமல்லாமல் இந்திய பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்துடன் களமிறங்கி கட்டம்கட்டி தூக்கினர்.

குறிப்பாக சாம்ஸனுக்கு பவுன்ஸர் பந்துவீச்சு எரிச்சலைத் தரும் என்பதைத் தெரிந்து ஆர்ச்சர் தொடர்ந்து பவுன்ஸராக வீசி விக்கெட்டை வீழ்த்தினார். மார்க் உட்டின் 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்துவீச்சு, சூர்யகுமார் விக்கெட்டை பதம் பார்த்தது. இந்தத் தொடரில் அறிமுகமாகிய பிரென்டன் கார்ஸ், ஓவர்டன் என இருவரும் இந்திய பேட்டர்களுக்கு சரியான லைன் லென்த்தில் வீசி திணறவிட்டனர்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து அணியில் டக்கெட் அரைசதம் அடித்திருந்தார்.

இங்கிலாந்து வெற்றிக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து அணியினர் இந்திய பேட்டர்கள் ஒவ்வொருக்கும் ஒரு திட்டத்துடன் வந்து அதை களத்தில் சரியாகப் பயன்படுத்தினர். கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறுகளை கேப்டன் பட்லர் செய்யவில்லை.

எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்யலாம், எந்த பேட்டருக்கு எவ்வாறு பீல்டிங் அமைக்கலாம் எனத் தெரிந்து அதை சரியாக அமைத்தார். சூர்யகுமார் யாதவுக்கு அதிவேகமாக பந்துவீசினால் சிக்ஸர் அல்லது விக்கெட் இழப்பார் எனத் தெரிந்து மார்க் உட்டை பந்துவீசச் செய்தார். சாம்ஸனுக்கு விரித்த வலையில் அவரி எளிதாக வீழ்ந்தார். இதுபோல் ஒவ்வொரு வீரரையும் கட்டம்கட்டி இங்கிலாந்து அணி தூக்கியது.

இங்கிலாந்து அணியிலும் எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. டக்கெட் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். பட்லர் 24 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் லிவிங்ஸ்டோன் பிஞ்ச் ஹிட்டராக ஆடியவிதம் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது.

இந்த மைதானத்தில் 171 ரன்கள் எளிதாக சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் அதை சேஸ் செய்யவிடாமல் இங்கிலாந்து அணியினர் தங்களின் திட்டமிட்ட பந்துவீச்சால் டிபெண்ட் செய்துள்ளார்கள் என்பதில்தான் அவர்களது வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு