தமிழ்நாட்டை விஞ்சிய உத்தர பிரதேசம்: மாணவர்களின் கல்வித் திறன் பற்றிய ஆய்வில் தகவல் – இன்றைய செய்திகள்
இன்றைய (ஜனவரி 29, 2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்திகளின் தொகுப்பு.
தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அறிக்கை ஒன்று கூறுவதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 35% பேருக்கும் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 64% பேருக்கும் இரண்டாம் வகுப்பு புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று வருடாந்திர கல்வி நிலை குறித்த அறிக்கை (ASER survey) தெரிவிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 876 கிராமங்களில் மூன்று வயது முதல் 16 வயதிலான 28,984 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உத்தராகண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட முன்னேறி இருப்பதாகவும், கர்நாடகாவும் தெலங்கானாவும் தமிழ்நாட்டை விட பின்தங்கி இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
டிஜிட்டல் கல்வியறிவு குறித்து செய்யப்பட்ட ஆய்வில், 14 வயது முதல் 16 வயதிலான சிறுவர்களில் 90% பேர் தங்களுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்த இயலும் என்று தெரிவித்துள்ளனர். இது தேசிய சராசரியை ஒத்ததாக உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த செல்போன்களை கல்வி கற்று கொள்வதற்காக பயன்படுத்தும் விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. எனினும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்துள்ளதற்கான விகிதம் தேசிய சராசரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. சமூக ஊடக கணக்குகளை பிளாக் செய்யவும், ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்கவும் அவர்களுக்கு தெரிந்துள்ளது.
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் – என்ன நடந்தது?
பஞ்சாபில் தாக்கப்பட்ட தமிழக வீராங்கனைகள் வீடு திரும்பியதாகவும், அப்போது பஞ்சாபில் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்ற முழு விவரத்தை அவர்கள் தெரிவித்ததாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பல்கலைக்ககங்களுக்கான மகளிர் கபடி போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 3 பல்கலைககழக மாணவிகள் தனித்தனி அணிகளாக பங்கேற்றனர். கடந்த 24-ந் தேதி நடைபெற்ற போட்டியில் தமிழக வீராங்கனை ஜெயஸ்ரீயை பீகார் மாநில வீராங்கனைகள் தாக்கி உள்ளனர்.
இதை தட்டிக்கேட்டபோது தமிழக அணி பயிற்சியாளர் பாண்டியராஜன் மற்றும் சில மாணவிகள் தாக்கப்பட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய தமிழக வீராங்கனைகள் இரவோடு, இரவாக அங்கிருந்து புறப்பட்டு கடந்த25-ந் தேதி காலை டெல்லியில் உள்ள தமழக அரசு இல்லத்துக்கு சென்றனர்.
பஞ்சாபில் தாக்கப்பட்ட வீராங்கனை ஜெயஸ்ரீ சென்னையில் நிருபர்களிடம் பேசும் போது, “எதிர் அணி வீராங்கனைகள் எங்களை தாக்க முற்பட்டபோது, தற்காப்புக்காக தடுக்க முயற்சி செய்தோம். நாங்கள் தடுக்க முயற்சி செய்ததை தாக்கியதாக கூறுகின்றனர். பஞ்சாப் போலீசார் பயிற்சியாளர் பாண்டியராஜனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். எங்களை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க சொன்னார்கள்.” என்றார்.
சீர்காழியில் என்.ஐ.ஏ சோதனை
சீா்காழி அருகே திருமுல்லைவாசலில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டதாக தினமணி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக போலீஸாா் வீட்டின் வெளியில் பாதுகாவலில் ஈடுபட என்.ஐ.ஏ. குழுவினா் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 7 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் சில இடங்களில் லேப்டாப்கள், கைப்பேசிகள், பென்டிரைவ்கள், ஆவணங்களைக் கைப்பற்றினா் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனை நடைபெற்ற 15 இடங்களில் சில இடங்களில் விசாரணைக்கு உட்பட்டவா்களை வரும் 31-ம் தேதி சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுவதையும் அதிகாரிகள் வீடியோ பதிவு செய்துள்ளனா்.
இதனிடையே திருமுல்லைவாசல் அல்பாசித் என்பவரை சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனா். இவா் திருமுல்லைவாசல் சொக்கலிங்கம் நகரை சோ்ந்தவா், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவரது வீட்டில் கடந்த 2022 அக்டோபா் மாதம் கோவை காா் குண்டுவெடிப்பு தொடா்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றி சென்றனா். அதன்பின்னா் அல்பாசித் சென்னையில் தங்கி ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறாா்.
இவா் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடா்பில் இருந்ததாகவும், தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு குழுவை உருவாக்கி அதில் திருமுல்லைவாசல் பகுதியை சோ்ந்த சிலரை இணைத்து சில தகவல்களை பதிவிட்டதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் இரவு 11 மணிக்கு மேல் தியேட்டரில் சிறுவர்களுக்கு தடை
தெலங்கானாவில் சிறுவர்கள் இரவு 11 மணி முதல் காலை 11 மணி வரை திரையங்குகளுக்கு வர அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த டிசம்பர் மாதம் அதிகாலை நேரம் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்திருந்த அல்லு அர்ஜூனை பார்க்க பெருமளவு கூட்டம் கூடியது. இதில் ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் வந்திருந்த 8 வயது மகன் படுகாயம் அடைந்தான். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அல்லு அர்ஜூன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெங்கானா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நேற்று முன்தினம் நீதிபதி விஜய்சென் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ”16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ இரவு, அதிகாலை காட்சிகளில் தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது” என தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தெலங்கானா மாநில அரசுக்கும் உத்தரவிட்டார்.
இலங்கை : பேரீச்சம் பழத்துக்கு வரி குறைப்பு
இலங்கையில் பேரீச்சம் பழத்துக்கான பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பேரீச்சம் பழத்துக்கான விசேட பண்ட வரி குறைத்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போது அமுலில் இருக்கும் 200ரூபா விசேட பண்டவரி ஒரு ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரி குறைப்பு செவ்வாய்க்கிழமை 28ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதிவரை செல்லுபடியாகும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இந்நாட்டு முஸ்லிம் மக்களின் பாவனைக்காக சவூதி அரேபியா 50 டெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இவ்வாறு சவூதி அரேபியாவால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்கள் தற்போது நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்துள்ளார். அவை நாட்டில் இருக்கும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு