by smngrx01

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐயால் மட்டும்தான் சரியான நீதியை பெற்றுத்தர முடியும் – எல்.முருகன் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐயால் மட்டும்தான் சரியான நீதியை பெற்றுத்தர முடியும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரை மேலூர் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே 2017 முதல் கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன்பிறகு இந்த விவகாரம் வேகம் எடுக்கத் தொடங்கியது. திமுக அரசு ஒருமுறை கூட இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை. மாநில அரசு நில அளவை செய்து, பல்வேறு தகவல்களை அளித்ததன் அடிப்படையில்தான் ஏலம் விடுவது என மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்பின், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய அரசு இத்திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பேராசிரியர் ராம. சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் எடுத்த தொடர் முயற்சி தான் இதற்கு முழு காரணம். இதில் திமுகவுக்கு எவ்வித பங்கும் இல்லை.

ஆனால் இந்த உண்மையை மறைத்துவிட்டு தமிழக முதல்வர் மதுரைக்கு சென்று ஒரு நாடகம் நடத்தி விட்டு வந்திருக்கிறார். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதையும், டங்ஸ்டன் சுரங்கத் தொழிற்சாலை அமைப்பதையும் ஒன்றாக இணைத்து பார்க்க கூடாது. அது வேறு, இது வேறு.

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுக்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் தொடர்ந்து பாஜக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக அரசு இதை திசைதிருப்பும் விதமாக, பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் அரசாக மாறிவிட்டது.

மாநில அரசு இந்த வழக்கை சரியாக கையாளவில்லை. பட்டியலின மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். சிபிஐயால் மட்டும்தான் சரியான நீதியை பெற்றுத்தர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்