வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்!

by sakana1

  29.12.2024 அன்று காலை….

வழமையில் ‘அலாரம்’ வைத்து அது அடிக்கும்போதெல்லாம் நிறுத்திவிட்டுத்      தூங்கி இறுதியில் அம்மாவின் திட்டுக்களுடன் எழுந்து நாளை ஆரம்பிக்கும் நான்,    இன்று அது அடிப்பதற்கு முன்னரே எழுந்து தயாரானது எனது வாழ்க்கையில் என்றுமே நடந்திராத ஒரு அதிசயம்.

அதையும் தாண்டி நடந்த அடுத்த அதிசயம் புலர்காலைப்பொழுதில் குளித்துத்தயாராகி நிகழ்வுகளில் பங்கேற்க உரிய நேரத்துக்கு முன்பே ஆயத்தமாக நின்றது.

அந்தளவிற்கு அன்றைய நாளில் இடம்பெறவிருந்த `வேர்களைத்தேடி …` பண்பாட்டுப் பயணத்தின் தொடக்க விழாக்காணும் அவாவும் விழா நிறைவில் திருச்சிக்குப் பயணம் செய்ய இருக்கிறோம் என்ற ஆவலும் என்னை மாற்றியிருந்தது.

எனது பாடசாலைக்காலத்திலிருந்து பணிக்குச் சென்றுகொண்டிருக்கும் இன்றைய காலம்வரை எனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல அம்மா எனும் மகாசக்தி எனக்கு உந்து சக்தியாகத் தொழிற்பட்டிருக்கிறது. இன்று அம்மாவும் அருகிலில்லை. அவரது   குரலும் காதுகளில் விழவில்லை.

இப்படி தனித்து இயங்குவதுகூட ஒரு நல்ல ஆரம்பம்தான் என என்னையே நான் தட்டிக்கொடுத்துக் கொண்டேன். எனினும் அம்மாவின் குரலை கேட்க வேண்டுபோல் இருந்தது…. திடீரென தொலைபேசி மணியோசை செவிவழிவந்து என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அழைப்பில் அம்மா.

“பாரதி எப்படி இருக்கின்றாய்? இப்போது என்ன செய்கின்றாய்…? சாப்பிட்டியா….? எனக் கரிசனையோடு கேள்விக்  கணைகளை தொடுத்துச் சென்றார்…

”நன்றாக இருக்கிறேன். இன்னும் சாப்பிடவில்லை…..” என்று கூறிக்கொண்டிருக்கையில் இணைப்பாளர் சாப்பிட அழைப்பதாக சகோதரி துளசி கூறினார்.

“உங்களுடன்  நான் பிறகு கதைக்கிறேன் அம்மா. இப்போது சாப்பிடப்போகிறோம்.” எனக் கூறி அவசர அவசரமாக          தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டு சகோதரி துளசியுடன் இணைந்து சாப்பாட்டு அறைக்கு விரைகிறேன்.

காலை உணவு நாம் தங்கியிருந்த ‘ரமடா’ ஹோட்டலிலேயே தயாராகவிருந்தது.’வுபே’ முறையில் சாப்பாட்டு மேசை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. நவீன உணவுகளுடன் தமிழகத்தின் பாரம்பரிய கலாசார உணவுகளும் எமது பசிதீர்க்கக் காத்துக் கிடந்தன.

அவைகளில் தமிழகத்தின் சிறப்பு உணவுகளைத் தேர்ந்தெடுத்து, உண்பதற்காக இருக்கைதேடி அமர்ந்தோம்.அவ்வேளை அங்கு உணவு உட்கொண்டு கொண்டிருந்த பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த ஏனைய சகோதர சகோதரிகளுடன் அளவளாவும் வாய்ப்புக்கிடைத்தது.

சுய அறிமுகத்தோடு வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தொலைபேசி இலக்கங்களையும் பரிமாறிக்கொண்டோம்.

பங்கேற்பாளர்கள் அவ்வேளை எங்களை நாடிவந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார் கனடாவிலிருந்து வருகைதந்திருந்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப்பொறுப்பாளர் திரு இராஜரத்தினம் அவர்கள்.

பங்கேற்பாளர் ஒவ்வொருவரைப் பற்றியும் அவர் தனித்தனியாக நலன் விசாரித்து உளரீதியாக எம்மை ஒருவரோடொருவர் நெருங்கிவரச் செய்தார்.கனடாவில் வதியும் அவர் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என அறிந்தபோது மனதில் இனம்புரியா ஒரு பற்றுதல் ஏற்பட்டது.

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப்பொறுப்பாளர் திரு இராஜரத்தினம் இன்னும் சிலநிமிடங்களில் விழா தொடங்கவிருப்பதாகவும் அனைவரும் மண்டபத்துக்கு வருமாறும் இணைப்பாளர் அழைத்ததைத் தொடர்ந்து நாம் மண்டபத்தை நோக்கி விரைந்தோம்.

மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கு தமிழக அரசின் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தின் அதிகாரிகள், இணைப்பாளர்கள் பிரமுகர்கள் பங்கேற்பாளர்கள்என அனைவரும் கூடியிருந்தார்கள். ‘

”வேர்களைத்தேடி….. ”பண்பாட்டுப் பயணத்தின் தொடக்கவிழா மாண்புமிகு ஆணையர் திரு. கிருஷ்ண மூர்த்தி, துணை இயக்குனர் திரு ரமேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி சியாமளாதேவி மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு. இராஜரத்தினம்` ஆகியோரின் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் ஆணையர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புன்னகைத்த முகத்துடன் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடலொன்றை நிகழ்த்தினார். பங்கேற்பாளர்களை நோக்கி அவர் ” எதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் ? என்ற கேள்வியை எழுப்பினார்.

ஒவ்வொருவரும் எழுந்து நின்று தமிழகத்துக்கும் தமக்கும் உள்ள பந்தத்தையும் தமது வேர்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்துகொள்வதில் தமக்குண்டான பற்றுதல்களையும் தமிழகத்தின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தரிசிப்பதில் தமக்குண்டான ஆர்வத்தையும் அதன் தூண்டுதல்களால் வருகை தந்ததாகவும் கூறினர்..

எனது முறை வந்தபோது “உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களை ஒன்றுசேர்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இதனைக் காண்கிறேன். இதில் பங்குபற்றுவதன் மூலம் எமது மூதாதையரின் பண்பாட்டு விழுமியங்களை அறிந்து நெகிழும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். இந்த அரிய வாய்ப்பினை எனக்குக் கிடைந்த பெரும் பேறாக கருதுகின்றேன்….நான்  ஊடகத்துறையில் பணியாற்றுவதால் இங்கு வருகை தந்திருக்கும் ஏனைய பங்கேற்பாளர்களை விட எனக்கு இத்திட்டம் குறித்து வெளியுலகிற்கு தெரிவிக்கவேண்டிய தலையாயப் பொறுப்பு உள்ளதாக உணர்கின்றேன். உண்மையில் தமிழக அரசு தமிழ் நாட்டின் தொன்மையினையும், தமிழர் பெருமையினையும் உலக நாடுகளுக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகளை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்…இவ்வாறு  எனது கருத்துக்களை முன்வைத்தேன். அவ்வேளை சபையில் எழுந்த கரகோஷம் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.

பங்கேற்பாளர்களில் சிலர் தமது முன்னோர் தமிழர்களாக இருந்தபோதிலும் தாம் வாழும் நாடுகளில் தமிழ்மொழி பயில வாய்ப்புகள் இன்றி தாம் இடர்களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டிருந்தது அனைவரது இதயங்களிலும் நெருடலை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக மலேசியாவிலிருந்து வருகைதந்திருந்த குமாரவேல் ஐங்கரன் அவர்களின் தமிழ்மொழி மீதான பற்றுதலும் அதனைச் சரிவரக் கற்கமுடியாமல் அடைகின்ற மனவேதனையையும் அவர் மனந்திறந்து பேசியபோது செவிமடுத்த அனைவரதும் நெஞ்சங்களும் நெகிழ்ந்தன.

குமாரவேல் ஐங்கரன் இத்தருணத்தில் தமிழர் என்ற அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து தவிக்கும் உலகத்தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்திலிருந்து வழங்கப்படும் நிகழ்நிலை தமிழ் வகுப்புகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் ஆணையர் திரு கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எமது பண்பாட்டுப் பயணத்துக்குத் தேவையான முக்கிய அறிவுரைகளை வழங்கியதோடு இப்பயண இறுதி நிகழ்வில் பங்கேற்பாளராகிய நாம் ‘கலாசாரத் தூதுவர்களாக‘ நியமிக்கப்படவுளோம் என்ற கருத்தையும் பதிவு செய்தார்.

ஈற்றில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவரவர் புகைப்படம் பொறித்த அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டதோடு தண்ணீர்ப்போத்தல், குறிப்புப் புத்தகம், பேனா மற்றும்  டி- சேர்ட் அடங்கிய பை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

விழா நிறைவில் பிரமுகர்களுடன் பங்கேற்பாளர்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நிகழ்வின் நிறைவில் சிற்றுண்டி வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்க உலகின் 10 நாடுகளிலிருந்து 38 பங்கேற்பாளர்கள் வருகைதந்திருந்தனர். பங்கேற்றவர்கள் பிரதிநிதித்துவம் செய்த நாடுகளும் அவர்களது எண்ணிக்கையும் பின்வருமாறு.

இலங்கையிலிருந்து  நான் உட்பட ஆறு பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து மூவரும்,  உகண்டாவில் இருந்து ஒருவரும், அமெரிக்காவில் இருந்து இரண்டு பேரும்,  மலேசியாவில் இருந்து 12 பேரும்,  மொறீசியஸில் இருந்து  10 பேரும் , கனடாவில் இருந்து ஒருவரும், தென்னாபிரிக்காவில் இருந்து ஒருவரும், மியன்மாரில் இருந்து ஒருவரும்,  நோர்வேயில் இருந்து ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் நிறைவில் நாம் திருச்சியை நோக்கிப் பயணிக்க ஆயத்தமானோம். ஹோட்டலை விட்டு எங்களது பயணப் பொதிகளுடன் நாங்கள் வெளியே வந்து நிற்க  ‘வேர்களைத்தேடி ‘எனப் பெயர் பொறிக்கப்பட்ட அழகிய சொகுசு பஸ் வண்டி ஒன்று எம்மைச் சுமந்து செல்லத் தயாராக நின்றது.

நாம் பயணம் புறப்படும் வேளை  வேர்களைத் தேடி திட்டத்தின் இணைப்பாளர்களான  திரு விதுகுமார், திருவாளர் செல்வம் ஆகியோரிடமிருந்து அழகிய வாழ்த்துச் செய்திகள் எமது வாட்சப் குழுவிற்கு வந்திருந்தன. அச் செய்திகள் தொடர்ந்துவரும் நாட்கள் எமக்கு எவ்வாறு அமையப்போகின்றன என்பதற்குச் சாட்சியமாய் அமைந்திருந்தன. அந்த வாழ்த்துச் செய்தியை இங்கு குறிப்பிட ஆசைப் படுகின்றேன்.

மறக்கமுடியாத தருணங்கள், அற்புதமான சாகசங்கள், மற்றும் அழகான நினைவுகளால் நிறைந்த பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணம் அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
விது குமார்

……………………………………

அன்பான பங்கேற்பாளர்களே!

உங்கள் 15 நாள் இனிய பயணம் இப்போது தொடங்குகிறது!

ஒவ்வொருநாளும் இனிமையும் இன்பமும் நிறைந்த அனுபவங்களைத் தந்து, உங்கள் மனதில் அழியாத சுவடுகளை பதியட்டும். உங்கள் மூதாதையரின் மண் வாசனையை உணர்ந்து, நெஞ்சை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கட்டும்.இந்த ஆனந்தமான பயணம் உங்கள் வாழ்வில் அழகிய பக்கங்களை எழுத வாழ்த்துகிறோம்.

அன்புடன்
செல்வம் எஸ்.

………………………………………….

எமது பயணத்தில் எம்மோடு நிகழ்வின் இணைப்பாளர்களும் காவல் அதிகாரிகளும், தாதியரும், இணைந்து பயணித்தனர். அவர்களது அன்பான பேச்சிலும் கனிவான உபசரிப்பிலும் எமது குடும்பத்தையே நாம் மறந்தோம். தேவையானபோதெல்லாம் பானங்களும் குடிநீரும் பிஸ்கட்டுகளும் வழங்கி எம்மை உற்சாகப் படுத்தியவர்களாக இணைப்பாளர்கள் எம்மோடு இணைந்திருந்தனர்.

சென்னையிலிருந்து திருச்சி புறப்பட்டுச் செல்லும் வழியில் கீதம் உணவகத்தில் எமக்காக மதிய உணவு உபசாரம் காத்திருந்தது. இரசித்துச் சுவைத்தோம். உணவுண்ட திருப்தியுடன் பயணம் தொடர்ந்தது…

பயணநேரத்தில் எமது அனுபவங்களை குடும்பத்தவருடன் பரிமாறிக்கொண்டோம். சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக திருச்சி செல்லும் வழியில் வண்டிப்பாளையம் உழுந்தூர்ப்பேட்டை என்ற இடத்தில் தேநீர் அருந்துவதற்காக எமது வண்டி நிறுத்தப்பட்டது. ஹோட்டல் ஸ்ரீ ஆரியாஸில் மசாலாத் தேநீரும் வெங்காயப்பக்கோடாவும் சுவைத்தோம். முடிவில் திருச்சிக்கான எமது பயணம் தொடர்ந்தது.

திருச்சி எனும்போது எனக்கு முதலில் ஞாபகம் வருவது ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் நடிகர் ஜெய் திருச்சி வீதியில் நின்று ஆடிப்பாடும் காட்சிகள்தான். தமிழ் சினிமாதான் தமிழகத்தை எமக்கு முதலில் அறிமுகம் செய்துவைத்தது. தமிழ் சினிமாவைப் பார்த்துத்தான் எம் இனத்தின் கலாசார பாரம்பரியங்களை கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தெரிந்துகொண்டிருந்தோம். அதன் அடிப்படையிலையே தமிழகத்துக்கான முன்னைய சுற்றுப் பயணங்களையும் மேற்கொண்டிருந்தோம். இலங்கையைப் பற்றி தமிழகத்தில் வாழும் தமிழர்கள் அறிந்து வைத்திருப்பதைவிட தமிழகத்தைப் பற்றிய இலங்கையர்களின் புரிதல் அதிகமானது. அதற்குக் காரணம் தமிழ் சினிமாதான் என்றால் அதில் மிகையேதும் இல்லை.

அடுத்து தமிழகத்துக்கும் எமக்கும் உண்டான பந்தத்தில் என்மனதில் பசுமையாகத் தோன்றுகின்ற நினைவு திருச்சியில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் மற்றும் உச்சிப் பிள்ளையார் ஆலயங்கள்தான்.

உச்சிப் பிள்ளையார் ஆலயம் என் பதின்ம வயதில் சுவிற்சர்லாந்து நாட்டிலிருந்து தமிழகம் வந்திருந்த எனது மாமா சண் தவராஜாவின் அழைப்பின்பேரில் நாங்கள் தமிழகம் சென்றதும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் மறக்கமுடியாத அனுபவங்கள்…

அன்று ஸ்ரீரங்கநாதரைத் தரிசிக்க பலமணிநேரம் காத்திருந்தும் அதிக சனக்கூட்டம் காரணமாக எம்மால் தரிசனம் காணமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதும் அன்று நிறைவேறாமற்போன விருப்பம் இப்பண்பாட்டுப் பயணத்தால் நிறைவேறப்போகின்றது என்ற நினைப்பு என்னைப் பரவசப்படுத்தியது. கூடவே உச்சிப்பிள்ளையாரைத் தரிசித்து மீண்ட இனிய நினைவுகளும் என் மனக்கண்களில் தோன்றி மறைந்தன.

உச்சிப்பிள்ளையாரை இப்பயணத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை ஆனாலும் அவர் கருணைவேண்டி மனதார பிரார்த்தித்துக் கொண்டேன். திருச்சி பற்றி மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்வது எமது பயணத்தை மேலும் அர்த்தமுடையதாக்கும் என்பதனால் அதனைப்பற்றி சில தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தேன். இத்தருணத்தில் அவற்றை இங்கு பகிர்வது பொருத்தமுடையதாகும்.

சென்னையிலிருந்து திருச்சி அண்ணளவாக 332 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.திருச்சிராப்பள்ளி என அழைக்கப்படும் இந்நகரம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.பரப்பளவு அடிப்படையில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும்.

இந்நகராட்சியில் அமைந்துள்ள பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படும் உலகின் இரண்டாவது பெரிய கோயில் எனக்கூறப்படும் ஸ்ரீரங்கநாத சுவாமி ஆலயத்தின் பிரமாண்டத்தையும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வெறும் கற்களையும் மண்ணையும் வைத்து காவிரி ஆற்றிற்கு குறுக்காக கரிகாலமன்னனால் கட்டுவிக்கப்பட்ட கல்லணையின் தொழிநுட்பத்தையும் கண்டு நாம் வியந்துநின்ற தருணங்களை எனது அடுத்த பதிவில் தர இருக்கிறேன். தமிழன் என்ற பெருமையில் நாம் இறுமாந்து நின்ற அந்தக் கணங்களை நீங்களும் அனுபவிக்க வேண்டாமா?

தொடர்புடைய செய்திகள்