குறுகிய அரசியல் வெற்றிக்காக பொய்யுரைத்ததை ஜனாதிபதி பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார் பல பொய்களை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டு குறுகிய அரசியல் வெற்றிக்காக தான் பொய்யுரைத்ததை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்தோம் என்று குறிப்பிடும் தார்மீக உரிமை ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக குறிப்பிடும் ஜனாதிபதி கடந்த காலங்களில் நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்புக்கு வருகைத் தந்த போது நிதியமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினர்.
பொருளாதார மீட்சிக்கான நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.