வேங்கைவயல், சிபிசிஐடி அறிக்கை, தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது(கோப்புப் படம்)
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்துவிட்டதாக வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், வேங்கைவயல் மக்களும் பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இதை ஏற்கவில்லை.

அதே ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றில், நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த சி.பி.சி.ஐ.டி, இதுதொடர்பான நிலை அறிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தின் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி வெளியான பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க. ஆகியவை சி.பி.சி.ஐ.டி. சொல்வதை ஏற்க முடியாது என்றும் வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரியுள்ளன. வேங்கைவயல் மக்களும் இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கின் பின்னணி என்ன?

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதியில் இருந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்தது, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அங்கு வந்து ஆய்வு நடத்தினர்.

இந்த விவகாரம் மாநிலம் தழுவிய அளவில் சர்சையான நிலையில், காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியது. குடிநீர்த் தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.

வேங்கைவயல், சிபிசிஐடி அறிக்கை, தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதை சி.பி.சி.ஐ.டியின் துணை கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான 35 பேர் கொண்ட குழு விசாரிக்கத் தொடங்கியது. இந்தக் குழு பலரிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளை மேற்கொண்டது.

இதற்கு நடுவில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. 2023 செப்டம்பர் மாதத்தில் அந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த பால்பாண்டி மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பி. கல்பனா தத் நியமிக்கப்பட்டார். மொத்தமாக 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளும் ஐந்து பேரிடம் குரல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன. இருந்தபோதும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இதற்கு நடுவில் இந்த விவகாரத்தை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி 2023ஆம் ஆண்டில் வழக்கறிஞர்கள் கே. ராஜ்குமார், மார்க்ஸ் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

3 பேர் மீது வழக்குப் பதிவு

வேங்கைவயல், சிபிசிஐடி அறிக்கை, தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமையன்று நீதிபதிகள் கே.ஆர். ஸ்ரீராம், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே. ரவீந்திரன், இந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது சி.பி.சி.ஐ.டி. நிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், வேங்கைவயலைச் சேர்ந்த ஜே. முரளிராஜா (33), பி. சுதர்சன் (21), கே. முத்துகிருஷ்ணன் (23) ஆகியோர் மீது 277, 427, 201, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள எஸ்.சி./எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 20ஆம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் ஜி.எஸ். மணி காவல் துறை தெரிவித்துள்ள தகவல்கள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் சாதி குறிப்பிடப்படாததையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றமாக இதைக் காட்டாமல், உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவரின் கணவருக்கும் இந்த மூன்று பேருக்கும் இடையிலான பகையால் இந்த விவகாரம் நடந்ததைப் போலக் காட்ட காவல்துறை முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, குற்றவியல் நடவடிக்கைகளில் உயர்நீதிமன்றம் ஒவ்வொரு கட்டத்திலும் தலையிட முடியாது என்றும், மனுதாரர் விரும்பினால், நிலை அறிக்கைக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, விரிவான மனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென வழக்கறிஞர் மணி கோரினார். அதையடுத்து, வழக்கு மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டியின் நிலை அறிக்கையில் உள்ள தகவல்கள் என்ன?

வேங்கைவயல், சிபிசிஐடி அறிக்கை, தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, இந்த வழக்கு ஜனவரி 14ஆம் தேதி சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது (கோப்புப் படம்)

பஞ்சாயத்துத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா என்பவருக்கும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்துக்கும் இடையிலான மோதலே, இந்தச் சம்பவத்திற்கு இட்டுச் சென்றதாக சி.பி.சி.ஐ.டியின் நிலை அறிக்கை குறிப்பிடுகிறது.

“வேங்கைவயலைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தன்னுடைய 6 வயது மகள் காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டதாக டிசம்பர் 24ஆம் தேதி புகார் அளித்தார். அந்த ஊரில் மேலும் நான்கு பேரும் இதேபோல பாதிக்கப்பட்டனர்.

டிசம்பர் 26ஆம் தேதி தங்களுக்கு வரும் தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாகச் சிலர் கூறினர். இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தண்ணீர் தொட்டியின் மீது ஏறிப் பார்த்தனர். அதில் மனிதக் கழிவுகள் இருந்ததைப் பார்த்த அவர்கள், அதைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினர்,” என்று அந்த நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 26ஆம் தேதி கனகராஜ் அளித்த புகாரின் பேரில் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி 14ஆம் தேதி சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் பின்வரும் தகவல்கள் தெரியவந்ததாக நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“வேங்கைவயலை உள்ளடக்கிய முத்துக்காடு பஞ்சாயத்தின் தலைவரான எம். பத்மா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் ஆபரேட்டரான சண்முகத்தை வேலையிலிருந்து நீக்கினார். சண்முகத்திற்கு வேங்கைவயல்காரர்களின் ஆதரவு இருந்தது.

பத்மாவின் கணவரான முத்தையாவிடம், சண்முகத்தை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும்படி வேங்கைவயல்காரர்கள் கோரியும் அந்த வேண்டுகோள் எடுபடவில்லை. அதுதவிர, தங்கள் ஊரின் குடிநீர்த் தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாதது குறித்தும் வேங்கைவயல்காரர்களுக்கு அதிருப்தி இருந்தது.”

வேங்கைவயல், சிபிசிஐடி அறிக்கை, தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, வேங்கைவயலில் மலம் கலக்கட்ட குடிநீர்த் தொட்டி (கோப்புப் படம்)

மேலும், “கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் முத்தையாவுக்கும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் தந்தையான ஜீவானந்தத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முத்தையாவை பழிவாங்குவதற்காக குடிநீர்த் தொட்டியிலிருந்து வரும் தண்ணீரில் துர்நாற்றம் வருவதாகக் கூறிய முரளிராஜா, டிசம்பர் 26ஆம் தேதி முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோரோடு குடிநீர் தொட்டியின் மீது ஏறினார். இவர்கள் மூவரும் சேர்ந்து இந்தக் குற்றத்தைச் செய்தனர்,” என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு, “இந்த வழக்கிற்கென உருவாக்கப்பட்ட புலனாய்வுக் குழு 397 சாட்சியங்களை விசாரித்தது. 196 பேரின் மொபைல் போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன், முத்தையா ஆகியோரின் போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த போன்களில் பல படங்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவற்றை மீட்டு, ஆராய்ந்ததில் இந்த மூவரும் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இறையூர் ஐயனார் கோவிலுக்குள் வேங்கைவயல் மக்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் இறையூரில் உள்ள தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது. இந்த இரு விவகாரங்கள் தொடர்பாகவும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது” என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐடி. தாக்கல் செய்த நிலை அறிக்கை கூறுகிறது.

அரசியல் கட்சிகள் கண்டனம்

வேங்கைவயல், சிபிசிஐடி அறிக்கை, தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, இப்போது வேங்கைவயலுக்குள் வெளியாட்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது (கோப்புப் படம்)

மாநிலத்தையே அதிரவைத்த இந்த விவகாரத்தில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் என்று தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களே குற்றம் சாட்டப்பட்டிருப்பதற்கு வேங்கைவயல் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், “பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சி.பி.சி.ஐ.டி. சமர்ப்பித்திருக்கும் நிலை அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது” எனவும் கூறியிருக்கிறார்.

அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

“சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் ஒருவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகத் தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்குக் காரணம் என்பது சரியல்ல” எனத் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.

வேங்கைவயல் மக்கள் கடும் எதிர்ப்பு

வேங்கைவயல், சிபிசிஐடி அறிக்கை, தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, வேங்கைவயலைச் சேர்ந்த முருகன் (கோப்புப் படம்)

சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த இந்த நிலை அறிக்கையை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள் வேங்கைவயல் மக்கள்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய வேங்கைவயலைச் சேர்ந்த முருகன், “இது மிக மிக மோசமான நடவடிக்கை. இதை எதிர்த்து உண்ணாவிரதத்தைத் துவங்கியிருக்கிறோம். தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். பல்வேறு அரசியல் கட்சிகளோடு இணைந்து போராடப் போகிறோம். நீதிமன்றத்தையும் நாடுவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். “எப்படி பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக இருக்க முடியும்? சில அரசியல் தலைவர்கள் ஊர்த் தலைவரின் கணவரான முத்தையாவுக்குச் சாதகமாக இருக்கிறார்கள். அதனால்தான் காவல்துறையும் இப்படி நடந்து கொள்கிறது.

நாங்களே மலத்தை அள்ளிப்போட்டு, நாங்களே அந்தத் தண்ணீர் குடிப்போமா? இதுதவிர, நிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, கிராமசபைக் கூட்டத்தில் சண்டை போட்டது முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் அல்ல, சதாசிவம் என்பவரும் ரத்தினசாமி என்பவரும்தான். முரளிராஜாவை குற்றவாளியாக்க ஜீவானந்தம் பெயரை இழுக்கிறார்கள்” என்கிறார் முருகன்.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சண்டை போட்டதாக முருகன் குறிப்பிடும் சதாசிவத்திடம் கேட்டபோது, “அன்றைய கிராமசபைக் கூட்டத்திற்கு 12.15 மணியளவில் நான் போனேன். அதற்கு முன்பே அங்கே ஜீவானந்தம் வந்திருந்தார். ஆனால், அவர் எதுவுமே பேசவில்லை. அந்தக் கூட்டத்தில், வேங்கைவயல் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுக்கப்பட்டதாக நோட்டீஸ் அடித்து எல்லோருக்கும் கொடுத்தார்கள்.”

வேங்கைவயல், சிபிசிஐடி அறிக்கை, தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, வேங்கைவயலைச் சேர்ந்த சதாசிவம் (கோப்புப் படம்)

“நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். எங்களுக்கு எப்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் கொடுத்தீர்கள், அதற்கான ஆவணத்தைக் காட்டுங்கள் என்று கேட்டேன். கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தார். அவரிடமும் போய், ‘இதற்கான ஆதாரம் எங்கே என்று காட்டுங்கள். நீங்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறீர்களா?’ எனக் கேட்டேன். அவர் எதுவும் பேசவில்லை. பிறகு எழுத்தர் வைத்திருந்த தீர்மான நோட்டைப் பிடுங்கினேன். உடனே தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்து கூட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசியவர், “அப்போதும் ஜீவானந்தம் பேசாமல்தான் இருந்தார். நான்தான் அவரிடம் போய், நீ கூட்டத்திற்கு எனக்கு முன்பே வந்துவிட்டாயே, இதைக் கேட்காமல் உட்கார்ந்திருக்கிறாயே எனக் கேட்டேன். அதற்குள் மங்களத்து முருகையன், மொசக்குட்டி அஞ்சப்பன் ஆகிய இருவரும் தலைவரை காரில் அழைத்துச் சென்றுவிட்டார்கள். இதையெல்லாம் சிபிசிஐடியிடம் வாக்குமூலமாகக் கொடுத்தேன். இருந்தாலும் சிபிசிஐடி நாங்கள் சொன்னதைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் இதுபோன்ற ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது” என்கிறார் சதாசிவம்.

இப்போது நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், முத்தையா தரப்பினரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முரளிராஜா, ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இப்போது வேங்கைவயலுக்குள் வெளி ஆட்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று போராட்டம் நடத்தவிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு