by adminDev2

போக்குவரத்தை தனியார் மயமாக்க அரசு முயற்சி – அதிமுக, பாமக கண்டனம் சென்னையில் தனியார் மினி பேருந்து இயக்குவது, போக்குவரத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை என அதிமுக, பாமக கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவை யில் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தனியார் மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கி.மீ பயணிக்கவும் மற்றும் சேவை உள்ள இடங்களில் 4 கி.மீ இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந் தது. தற்போது, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கி.மீ கூடுதலாக இயக்க மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்கள், பொதுமக்கள், மினி பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் கடந்த ஜூலை 22-ம் தேதி கருத்துகளைக் கேட்டு தமிழக அரசிடம் போக்குவரத்துத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிகளின்படி சென்னை உள்ளிட்ட இடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியானது.

வழக்கு தொடர்வோம்: இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி விடுத்த அறிக்கையில், ‘‘சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதித்திருப்பதை, போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இதுதொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் எதிர்ப்பையும் மீறி தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன? ஒருவேளை சென் னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான உரிமங்கள் எற்கெனவே வழங்கப்பட்டிருந் தால் அது சட்டவிரோதம் ஆகும்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரும்’’ என தெரிவித்துள்ளார். அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன் விடுத்த அறிக்கையில், ‘‘அதிமுக ஆட்சியில் அரசு சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டன.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மினி பேருந்துகளின் இயக்கம் வெகுவாக குறைந்துள்ள துடன், குக்கிராமங்களில் உள்ளவர்கள் மினி பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மக்களின் நலனைக் கருதி தனியாருக்கு மினி பேருந்துகளை தாரைவார்ப்பதை கண்டிப்பதுடன், நேரடியாக அரசே மினி பேருந்துகளை இயக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

பேருந்து உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு: இதற்கிடையே, மினி பேருந்து உரிமையாளர்களிடம் கேட்டபோது, ‘‘போக்குவரத்து சேவையில்லா இடங்களில் பயணிக்கும் தொலைவை 15 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும். பழைய மினி பேருந்துகளுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுமட்டுமின்றி, பெருங்குடியில் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பேருந்து நிலையம் இல்லை.

எனவே, பேருந்து நிலையம் இருக்கும் திருவான்மியூர் வரை பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும். பேருந்து நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்றனர். போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிய மினி பேருந்து விரிவாக்க திட்டம் தொடர்பாக அரசு விரைவில் முடிவை வெளியிடும்’’ என்றனர்.

தொடர்புடைய செய்திகள்