அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள் ஆசிரியர்கள்.
‘ஆசிரியர் மனசு’ திட்டத்திற்காக திருச்சியில் தனி அலுவலகம் ஒன்றைத் தொடங்கி வைத்த அமைச்சர் மகேஸ், திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இடைநிலை ஆசிரியரான ‘சிகரம்’ சதீஷ் என்பவரை நியமித்தார். இவரை மையப்படுத்தித்தான் இப்போது சர்ச்சைகளும் வெடித்துள்ளன. செல்வாக்கு, பணம் பலம், லாபி செய்யும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் மட்டுமே கவனிக்கப்படுகிறது. இதனால் இந்தத் திட்டத்தின் நோக்கமே திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெயர் வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் இதுகுறித்து பேசிய ஆசிரியர்கள், “இந்தத் திட்டம் தொடக்கத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டது. ஆனால், போகப் போக நோக்கம் சிதைந்து தொய்வடைந்து விட்டது. சம்பளம், பதவி உயர்வு, பணி மாறுதல், பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. அதேசமயம், செல்வாக்கான ஆசிரியர்களுக்கு மட்டும் ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தில் கேட்டதெல்லாம் கிடைக்கிறது.
தற்போது கல்வித்துறையில் எந்த அதிகாரியை எங்கு பணிக்கு அமர்த்துவது என்பதை முடிவு செய்யும் அதிகார மையமாகவே ‘சிகரம்’ திகழ்கிறது. சங்கங்களை உடைத்து புது சங்கங்களை உருவாக்குகிறது. ஜனவரி 5-ம் தேதி திருச்சியில், ‘தமிழ்நாடு கல்வித் துறை தட்டச்சர்கள் சங்கம்’ என்று ஒரு புது சங்கம் தொடங்கப்பட்டது. இதில், ‘சிகரம்’ சதீஷும் அமைச்சர் அன்பில் மகேஸும் பங்கேற்றனர்.
அமைச்சருக்கு நெருக்கமானவராக இருப்பதால் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளே சதீஷைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆசிரியர்களின் பிரச்சினைகளைச் சொல்லத்தான் ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆனால், அந்தத் திட்டத்திலேயே இத்தனை குறைகள் என்றால் எங்கு போய் சொல்வது?” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்டச் செயலாளர் சி.ஆரோக்கியராஜ், “இத்திட்டத்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கோ, பள்ளிகளுக்கோ எந்த நன்மையும் கிடையாது. திட்ட ஒருங்கிணைப்பாளரான ‘சிகரம்’ சதீஷ் தனியார் பள்ளிகளின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறார். தன்னை அழைத்து விழா நடத்தும் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். மற்றபடி ஆசிரியர், மாணவர் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினையையும் அமைச்சர் கவனத்துக்கு இவர் கொண்டு செல்வதில்லை.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் சதீஷை திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து மாற்றிவிட்டு தகுதியான வேறொருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். பணி நிரவலில் திருப்பைஞ்ஞீலிக்கு வந்த ஒரு தலைமை ஆசிரியர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒரே மாதத்தில் பணி மாறுதல் பெற்றுச் செல்கிறார்.
இப்படி செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சமூக அமைப்பா இது? இதில் நானே நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திலிருந்து லால்குடி ஒன்றியத்துக்கு என்னை பணி மாறுதல் செய்தனர். ஒன்றரை ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராடி, மீண்டும் மண்ணச்ச நல்லூர் ஒன்றியத்தில் பணிக்கு திரும்பினேன்.
இதனால் எனது சீனியாரிட்டி பாதிக்கப்பட்டுள்ளது. என்னைப் போல் இன்னும் எத்தனையோ ஆசிரியர்கள் குமுறிப்போய் உள்ளனர்” என்றார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ‘ஆசிரியர் மனசு’ திட்ட ஒருங்கிணைப்பாளர் ‘சிகரம்’ சதீஷிடம் விளக்கம் கேட்டோம். “இந்தத் திட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் மனுக்கள் ஒன்றுகூட நிலுவையில் இல்லை. சிபிஎஸ் ரத்து போன்ற அரசின் கொள்கை சார்ந்த விஷயங்கள் தொடர்பான மனுக்கள் தான் நிலுவையில் இருக்கின்றன. எந்தவித பிரதிபலனும் பாராமல் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தொகுத்து அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கும் போஸ்ட் மேன் வேலையை மட்டுமே நான் செய்கிறேன். அதிகார மையமாக செயல்பட்டதில்லை.
சிறு சிறு சங்கங்களை சார்ந்துள்ள ஆசிரியர்களுக்கு இந்தத்திட்டம் பெரிய வடிகாலாக உள்ளது. இதை பொறுக்க முடியாத சிலர் என் மீதும், திட்டத்தின் மீதும் வீண் பழியை சுமத்துகின்றனர். கீழ்நிலையில் உள்ள ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களை கேட்டால் இத்திட்டத்தின் செயல்பாடுகள் நன்கு தெரியும். எந்த அதிகாரியையும் பணியில் அமர்ந்தும் அதிகாரம் எனக்குக் கிடையாது.
இது அதிகாரப் பதவி அல்ல. ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு. காரியம் சாதிக்க முடியாத சில ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுகின்றனர். வேறு என்ன சொல்ல” என்றார். ஆயிரம் தான் இருந்தாலும் நெருப்பின்றி புகையாது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த விவகாரத்தை இனியும் உரிய முறையில் விசாரிக்காவிட்டால் ‘ஆசிரியர் மனசு’ திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே திசை மாறிப் போய்விடும் என ஆதங்கப்படுகிறார்கள் ஆசிரியர்கள்!