திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு உண்ட விவகாரம்: நவாஸ் கனி எம்.பி மீது பாஜகவினர் புகார் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட நவாஸ் கனி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தனது கட்சியினருடன் சென்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவாஸ் கனி எம்.பி. இந்துக்களின் புனித தலமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தனது உடன் வந்தவர்களுடன் அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். மலை மீது ஏறும்போது அங்கிருந்த போலீஸாரை மிரட்டும் தொனியில் அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிடலாமா, அசைவ உணவு மேலே கொண்டு வருபவர்களை தடுக்கக் கூடாது என பேசியுள்ளார்.
மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தன்மையை கெடுத்துள்ளார். மத நல்லிணக் கத்தை கெடுக்கும் வகையில் அவர் செயல்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாகக் கருதக்கூடிய இந்த மலை ஒரு குடைவரைக் கோயிலாகும். முருகப் பெருமானின் திருமேனி அந்த மலையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது. அந்த மலையின் மகத்துவத்தை வேண்டுமென்றே குறைத் திருக்கிறார். மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நவாஸ் கனி எம்.பி. மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.