2026 ஜனவரிக்குள் WHO விலிருந்து முறையாக வெளியேறும் அமெரிக்கா!

by wamdiness

இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து ஐ.நா. சபை முறையான கடிதத்தைப் பெற்றதை அடுத்து, 2026 ஜனவரி 22 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

இது தொடர்பில் ஐ.நா.வின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் வியாழன் (24) அன்று தெரிவிக்கையில்,

ட்ரம்ப் ஜனவரி 20 ஆம் திகதி தனது முதல் நாள் பதவியில் – WHO இலிருந்து அமெரிக்காவை விலக்கி கொள்வதாகவும், அமைப்பின் எதிர்கால நிதியுதவிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் உறுதிளித்ததன் விளைவாக ஐ.நா.வின் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுவது குறித்த அமெரிக்க கடிதத்தை இப்போது நாங்கள் பெற்றுள்ளோம்.

2025 ஜனவரி 22 திகதியிடப்பட்ட இந்தக் கடிதம், நேற்றிலிருந்து (22) ஒரு வருடம் அதாவது எதிர்வரும் 2026 ஜனவரி 22 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.

இதனிடையே, WHO உடன் பணிபுரியும் அனைத்து அமெரிக்க அரசாங்க ஊழியர்களையும் வொஷிங்டன் திரும்ப அழைத்துள்ளது மற்றும் தொற்றுநோய்களைக் கையாள்வதில் WHO தலைமையிலான உலகளாவிய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை நிறுத்துமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுவதால், அமைப்பு, அதன் மிக முக்கியமான நிதி ஆதரவாளரை இழக்கும்.

2024 மற்றும் 2025 க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 261 மில்லியன் டொலர்களாக இருந்த நிறுவனத்தின் நிதியுதவியில் சுமார் 18 சதவீதத்தை அமெரிக்கா வழங்குகிறது.

உலக சுகாதார அமைப்பின் முக்கிய நன்கொடையாளரின் இழப்பு, காசநோய் முதல் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் உலகளாவிய தொற்றுநோய்கள் வரையிலான பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் உலகளாவிய சுகாதார நிறுவனத்தின் திறனை பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்ரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் கொவிட்-19 தொற்றுநோயை WHO தவறாகக் கையாண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், 2020 ஜூலை மாதம் அமைப்பிலிருந்து விலகும் கோரிக்கையை அனுப்பியிருந்தார்.

2020 ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் ஜோ பைடனிடம் தோற்றதால், அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் ட்ம்ப் பதவிக்கு வந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து உடனடியாக வெளியேறும் உத்தரவினை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்