அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சலுகைகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.சி. சானக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. ஜனாதிபதி செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சியின் உறுப்பினர் டி.சி சானக கடந்த அரசாங்கத்தை காட்டிலும் இந்த அரசாங்கம் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சலுகைகளை அதிகரித்துள்ளது. என்று குறிப்பிட்டார்.இதற்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டி.வி.சானக குறிப்பிடும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச செலவுகளை இயலுமான வகையில் குறைத்துக் கொண்டுள்ளோம். கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு 3 வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன.அதனை 2 ஆக குறைத்துள்ளோம். அதேபோல் 2250 லீற்றர் டீசல் விநியோகம், 950 ஆக லீற்றராக குறைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஒருவரின் சாரதிக்கு 200 மணித்தியாலங்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு 180 மணித்தியாலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதி அமைச்சரின் சாரதிக்கும் 180 மணித்தியாலத்துக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் சாரதிகள் நடுத்தர நிலையில் உள்ளவர்கள். அவர்களின் பொருளாதார நிலையை கருத்திற் கொண்டு மேலதிக கொடுப்பனவு சமப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.