சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு – வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க வைரஸ் பரவல் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் ஆஸ்துமா நோய் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளமையால் ஆஸ்துமா நோயாளர்கள் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு ஆளான சிறுவர்கள் குறித்தும் பெற்றோர் அவதானத்துடன் செயல்படுவதுடன் நோய் தீவிரமடையும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு களுபோவில போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை (22) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சி.பி.டி. என அழைக்கப்படும் நாட்பட்ட சுவாச நோய்களால் நாட்டில் உள்ள பலர் பாதிப்புக்குள்ளாகின்றனர். இலங்கையில் மட்டுமல்லாது உலகளவில் வளி மாசு, வைரஸ் கிருமிகளின் தொற்று மற்றும் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக சுவாச நோய்களுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் உறிஞ்சிக் கூடிய மருந்துகளை அனேகமானோர் உரிய முறையில் பயன்படுத்துவதில்லை. மருந்துகளை வைத்திய பரிந்துறைக்கமைய எடுத்துக் கொள்ளாமையால் உலகளவில் பல மில்லியன் கணக்கானோர் உயிரிழப்பதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆகையால் பொதுமக்கள் வைத்திய ஆலோசனைக்கமைய மருந்துகளை உள்ளெடுப்பது அவசியம். ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்திக்கொள்ள போலி நம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதே சிறந்தது. வைரஸ் பரவல் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் ஆஸ்துமா நோய் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஆகையால் ஆஸ்துமா நோயாளர்கள், ஆஸ்துமா நோய்க்கு ஆளான சிறுவர்கள் குறித்தும் பெற்றோர் கவனத்தில் கொள்வது அவசியம். நோய் தீவிரமடையும் பட்சத்தில் உடனடியாக தாமதிக்காது அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுவது நல்லது
நாட்டில் உள்ள 2 வயதுக்கும் குறைவான சிறுவர்களும் ஆஸ்துமா நோய்க்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவயதில் இவ்வாறான நோய்களுக்கு ஆளாகுவதால் அவர்களின் நித்திரைக்கு இடையூறு ஏற்படுவதுடன் இதனால் உடல் வளர்ச்சியும் பாதிப்படையலாம். எதிர்காலத்தில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதிலும் இடையூறு ஏற்படலாம். 50 வீதமான சிறுவர்கள் வளி மாசடைதல், மரபணு ரீதியாக ஆஸ்துமா நோய்க்கு ஆளாகுகின்றனர்.
இதேவேளை சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரிஷிகேசவன் தெரிவிக்கையில்,
சுவாச நோய் விசேட வைத்திய நிபுணர்களுக்கான மாநாடு 15 வது தடவையாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளது. வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் 40 வீதமான நோயாளிகளுக்கு சுவாச நோய்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் எவ்வயதினருக்கும் ஏற்படலாம். உரிய சிகிச்சைகளை பெறும் பட்சத்தில் சுவாசநோயால் ஏற்படக்கூடிய மரணங்களை தவிர்க்கலாம்.
உலகளவில் ஆஸ்த்து காரணமாக அதிக உயிரிழப்புகள் பதிவாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 10 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 10 தொடக்கம் 14 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களில் 15 சதவீதமான சிறுவர்களுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அத்தோடு உலகளாவிய ரீதியில் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோய்களின் பட்டியலில் நாட்பட்ட சுவாச நோய் 7 வதாக தரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.