அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திரத்தை அரசாங்கம் இரத்து செய்யவில்லை அரசாங்க அதிகாரிகளுக்கு அல்லது தேவையான தகைமைகளைக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான பேராசிரியர் அணில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தி எம்பி நஜித் இந்திக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நஜீப் இந்திக்க எம்பி தமது கேள்வியின் போது; தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் இந்த விவகாரம் தொடர்பில் புதிதாக பேசுவதற்கு இடமளித்துள்ளது.
அந்த வகையில் தொழில்சார் தரப்பினர் மத்தியில் இந்த வாகன இறக்குமதி பிரச்சனை தொடர்பில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
நாட்டில் கார் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.உயர்மட்ட அரச அதிகாரிகளுக்காக வாகனங்களை பெற்றுக் கொள்வதற்காக அது வழங்கப்படுகிறது.
கடந்த 5 வருட காலங்களாக 2020 ஆம் ஆண்டு முதல் அதன் மூலம் அவர்கள் வாகனங்களை கொள்வனவு செய்யவில்லை.
இந்த வருடத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்தை வைத்து வாகன இறக்குமதி தொடர்பில் பேசப்படுவதுடன் அது தொடர்பில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாகன அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்வதாக கருத்துக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தமது கேள்வியின் போது கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நாட்டின் பொருளாதார நிலையைக் கவனத்தில் கொண்டே வாகன இறக்குமதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2025 ஆம் ஆண்டு கடினமான ஒரு காலம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க நாம் செயற்படவேண்டியுள்ளது. அவற்றுள் அதிகமான மட்டுப்படுத்தல்கள் காணப்படுகின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அந்த வகையில் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தேவையான தகைமை உள்ளவர்களுக்கான வாகன அனுமதி பத்திரங்களை இரத்துச் செய்வதற்கான எந்த நிலைப்பாட்டையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.
அது தொடர்பில் அரசாங்கம் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.
முன்னுரிமை வழங்குதல் தொடர்பிலேயே பிரச்சினைகள் காணப்படுகின்றன அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றார்.