by wp_shnn

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரச இல்லங்களை விட்டு வெளியேறுமாறு பிரத்தியேகமாக குறிப்பிட தேவையில்லை. வெட்கம் என்பதொன்று இருக்குமாயின் வெளியேற வேண்டும். இருப்பவர்களுக்கும்  வெட்கமில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை.  பெற்றோரை அவர்களின் பிள்ளைகளே பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சுமையை மக்கள் மீது சுமத்த கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் உட்பட பல கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் செய்யாத பல விடயங்களை நாங்கள் செய்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும்  முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து நாட்டு மக்களை விலக்கியுள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை தற்போது செயற்படுத்தியுள்ளோம். பொருளாதார நெருக்கடியில் இருந்தும், பொருளாதார சுமையில் இருந்தும் நாட்டு மக்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு கொழும்பு -05 பகுதியில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டது. இந்த  வீட்டின் நடைமுறை சந்தை பெறுமதி  2598.5 மில்லியன் ரூபாவாகும்.நடைமுறை வாடகை கட்டணம் 12 இலட்சம் 75 ஆயிரம் ரூபா பெறுமதியானது. இந்த வீட்டில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ வெளியேறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க கொழும்பு -7 பெஜ்ஜட் பகுதியில் வழங்கப்பட்டிருந்த வீடு 3132 மில்லியன் ரூபா பெறுமதியானது. இதன் நடைமுறை சந்தை மாத  வாடகை கட்டணம் 29 இலட்சம் ரூபாவாகும். இந்த வீட்டில் இருந்துமுன்னாள் ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாச கொழும்பு 07 இல் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான வீட்டில் வசித்தார். தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு -07 பகுதியில்  1005.5 மில்லியன் பெறுமதியான வீடு வழங்கப்பட்டது. இவர் இன்றும் இந்த வீட்டில் தான் வசிக்கிறார்.அந்த வீட்டின் நடைமுறை சந்தை மாத வாடகை 9  இலட்சம் ரூபாவாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தை வீடு தொடர்பில் குறிப்பிட்டதன் பின்னர் ‘ மஹிந்தவின் வீட்டை பாதுகாக்போம் ‘என்று அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த வீடு 1 ஏக்கர் 13.8  பேர்ச்சஸ் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   3128 மில்லியன் ரூபா பெறுமதியானது.  46 இலட்சம் ரூபா மாத வாடகை பெறுமதியானது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வசிக்கும் வீட்டின் பெறுமதி மதிப்பிடப்படவில்லை. அவர் நாடு திரும்பியதும் வீட்டை மதிப்பிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.ஆகவே வெகுவிரைவில் அந்த வீட்டின் பெறுமதி தொடர்பான விபரங்களை பாராளுமன்றத்துக்கு அறிவிப்போம்.

முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் வீடுகளை பராமரிப்பதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும் மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கு பெருமளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு  33 இலட்சம் ரூபா, 2022 ஆம் ஆண்டு 3.இலட்சம் 45 ஆயிரம் ரூபா,  2023 ஆம் ஆண்டு 18.மில்லியன் ரூபா, 2024 ஆம் ஆண்டு 9 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்  பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் வசித்துள்ளார்.இக்காலப்பகுதியில் மாத்திரம் அந்த வீட்டை பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் 430 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ஏன் முன்னாள் ஜனாதிபதிகளையும்,அவர்களின் குடும்பத்தாரையும் பராமரிப்பற்கு  செலவழிக்க வேண்டும்.  வெட்கம் என்பதொன்று இருக்குமாயின் இவர்கள் இந்த வீடுகளை விட்டு வெளியேற வேண்டும். வீடுகளில் இருப்பவர்களுக்கும் வெட்கமில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். ஒருவர் கடற்படையில் இருந்ததாகவும், பிறிதொருவர்  விஞ்ஞானி என்றும் குறிப்பிடப்படுகிறது. பெற்றோரை பார்த்துக் கொள்ளும்  பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு. ஆகவே முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களின் பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரச இல்லங்களை விட்டு வெளியேறுமாறு பிரத்தியேகமாக குறிப்பிட தேவையில்லை. வெட்கம் என்பதொன்று இருக்குமாயின் வெளியேற வேண்டும்.   உலக நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிக்க இந்தளவுக்கு பாரிய நிதி செலவழிக்கப்படுவதில்லை. முறையற்ற கலாச்சாரத்தை மாற்றியமைப்போம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்