பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய வாத்துக்கள் பெலிகன்கள்?
பெய்ரா ஏரியின் கரைகளில் வாத்துக்களும் பெலிகன்களும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள நிலையில் சுத்திரிகரிப்பு நோக்கத்திற்காக நீரில் இரசாயன பொருட்களை கலந்தமையால் பறவைகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமையும் வியாழக்கிழமையும் 25க்கும் மேற்பட்ட வாத்துக்களும் பெலிகன்களும் இறந்தநிலையில் கரையொதுங்கியமை அதிகாரிகளிற்கும் பொதுமக்களிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பறவைகள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
கொழும்பு மாநகரசபை ஆணையாளர்பாலித நாணயக்கார தான் இது குறித்து அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள அதேவேளை பறவைகள் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஏரியை சுத்தப்படுத்தும் நோக்கத்துடன் கொழும்புமாநகரசபை ஊழியர்கள் நீரில் கலந்த பொருட்களே பறவைகளின் இறப்பிற்கு காரணம் என வெளியாகும் தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.
பெய்ரா ஏரியின் சூழல்பாதுகாப்பில் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு மாநகரசபை ஊழியர்கள் என கருதப்படும் சிலர் புதன்கிழமை பெய்ரா ஏரிக்கு சென்று சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளிற்காக சிலவகை பொருட்களை தூவிச்சென்றதை அந்த பகுதியில் பணியாற்றும் சிலர் அறிந்துள்ளனர் என அதிகாரியொருவர் டெய்லிமிரரிற்கு தெரிவித்துள்ளார்.