by guasw2

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடி தொடர்புடைய 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களை இல்லாதொழித்து நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அண்மைய நாட்களாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த 10 ஆம் திகதி முதல் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கமைய 172,872 தனிநபர்களும் 64,258 வாகனங்களும் சோதனைக்குட்படுத்த்பபட்டன.

இந்நிலையில் குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புடைய 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த 2561 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த 10 நாட்களுக்குள் 3 ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 3 கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த காலப்பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய 452 கிலோ  கேரள கஞ்சா, 15 கிலோ குஷ் போதைப் பொருள் மற்றும் 8 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் குற்றச் செயல்களை இல்லாதொழித்து நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்குடன் அனைத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்