அரச சொகுசு வீடுகளில் வசிக்கின்ற முன்னாள் ஜனாதிபதிகள் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் உடனடியாக வெளியேற வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ ! on Thursday, January 23, 2025
”அரச சொகுசு வீடுகளில் வசிக்கின்ற முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்” என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”மகிந்த ராஜபக்சவின் மாளிகையை காப்பாற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் குரலெழுப்பி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகளும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் மகிந்த ராஜபக்ச வசிக்கும் இந்த வீடு ஒரு ஏக்கர் மற்றும் 13.8 பேர்ச் கொண்டது.
3128.4 மில்லியன் பெறுமதியான வீடாகும். இரண்டு பேர் வசிப்பதற்குதான் இவ்வளவு பெரிய வீடு. மாதம் இந்த வீட்டுக்கு 46 இலட்சம் வாடகையை செலுத்த வேண்டும் என அரச மதிப்பீட்டு திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.
இந்த வீட்டை காப்பாற்றதான் மகிந்த மற்றும் சஜித்தின் ஆதரவாளர்கள் சபையில் கூச்சலிடுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசிக்கும் வீட்டை பராமரிக்க மாத்திரம் கடந்த சில வருடங்களாக 19 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்காக 16ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தான் மக்கள் பணத்தில் இவர்கள் வாழ்கின்றனர்.
இந்த சுமையை மக்கள் மீது எவ்வாறு செலுத்த முடியும். மக்கள் இந்த சுமையை சுமந்துக்கொள்வது நியாயமா? சந்திரிக்காவின் வீடு இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை. அவர் லண்டனில் இருப்பதாக கூறியுள்ளார். அவரது வீடு குறித்தும் மதிப்பீடு செய்யப்படும். இவர்களுக்கு வெட்கம் இல்லையா? வெட்கம் இருந்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்” இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.