வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் மாயஜாலப் பந்துவீச்சு, அபிஷேக் சர்மாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஜன. 22) நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
பேஸ் பால் வியூகத்துக்கும், ஸ்கைபால் வியூகத்துக்கும் இடையிலான ஆட்டமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டி ஒருதரப்பாகவே முடிந்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்து வென்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகமான பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி சேஸ் செய்துள்ளது. இதற்கு முன் 2012ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற டி20 போட்டியில் 13 பந்துகள் மீதமிருக்கையில், இந்திய அணி சேஸ் செய்திருந்தது, இந்த ஆட்டத்தில் 43 பந்துகள் மீதமிருக்கையில் சேஸ் செய்துள்ளது.
இந்திய அணியில் அதிரடியாக பேட் செய்த தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதத்தையும் 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி, 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இவர்கள் இருவரின் ஆட்டமும் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.
ஆட்டத்தின் நடுப்பகுதியில் கேப்டன் ஜாஸ் பட்லர், லிவிங்ஸ்டன், ஹேரி ப்ரூக் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, வருண் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதிலும், வருண் வீசிய 8-வது ஓவரில் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவருமே ஆட்டமிழந்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
டாஸ் வென்றது உத்வேகம்
வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “டாஸ் வென்றபின் எங்களுக்குக் கிடைத்த உத்வேகம் தளத்தை அமைத்துக் கொடுத்தது. பந்துவீச்சாளர்களுக்கென தனித்திட்டம் இருந்தது, அதை சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். அதேபோல, பேட்டர்களும் அவர்களுக்குரிய திட்டத்தின்படி ஆடினர். தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் செய்த அதே விஷயங்களை இங்கும் மாற்றவில்லை” என்றார்.
மேலும் பேசிய அவர், “புதிய பந்தில் பொறுப்பெடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீசினார், அதனால் கூடுதல் சுழற்பந்துவீச்சாளருடன் ஆடமுடிந்தது. வருண் சக்ரவர்த்தி சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளார், அர்ஷ்தீப் வெற்றிக்கான தளத்தை அமைத்துக் கொடுத்தார். அதிகமான சுதந்திரத்தை வீரர்களுக்குக் கொடுத்திருந்தோம், அதை சிறப்பாக வித்தியாசமாக வெளிப்படுத்தினர். ஃபீல்டிங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தவேண்டும்” எனத் தெரிவித்தார்
அர்ஷ்தீப் சிங் மைல்கல்
கொல்கத்தா மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும், அர்ஷ்தீப் சிங் பவர்ப்ளே ஓவருக்குள்ளாகவே 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சிக்கலில் தள்ளினார்.
அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே லென்த்தில் வீசிய பந்து பில் சால்ட் பேட்டில் எட்ஜ் எடுத்து விக்கெட் கீப்பர் சாம்ஸனிடம் கேட்ச்சானது. 3வது ஓவரில் பென் டக்கெட் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தி சிக்கலை ஏற்படுத்தினார். இந்த விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்தியபோது டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்று யஜூவேந்திர சஹல் சாதனையான 96 விக்கெட்டுகளை முறியடித்தார்.
வருண் சக்ரவர்த்தி மாயஜாலம்
நடுப்பகுதி ஓவர்களில் வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து ஆட்டத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்தனர். அதிலும், வருண் சக்ரவர்த்தி தனது மிகத்துல்லியமான லைனால், லென்த்தில் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை கட்டிப்போட்டார். வருணின் பந்துவீச்சு ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் என்ற ரீதியில் இருந்ததால், இங்கிலாந்து பேட்டர்கள் சிறிய தவறு செய்தாலும் விக்கெட்டை இழக்க நேரிடும் என்ற நிலை இருந்தது. ப்ரூக், லவிங்ஸ்டோன் இருவருக்கும் வருண் வீசிய பந்து நிச்சயமாக ஆடுவதற்கு மிகக்கடினமானது, என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் விக்கெட்டை இழந்தனர்.
சுழற்பந்துவீச்சில் அதிலும் கைமணிக்கட்டில் வீசப்படும் பந்துகளை ஆடுவதற்கு இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவார்கள் எனக் கூறப்பட்டது உண்மையானது. வருணின் பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது, சரியான லென்த்தில் பந்தை பிக் செய்து ஷாட் அடிப்பது எனத் தெரியாமல் லிவிங்ஸ்டன், ப்ரூக் இருவரும் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.
ஜாஸ் பட்லர் ஐபிஎல் ஆடிய அனுபவம் என்பதால், வருண் பந்துவீச்சை ஓரளவுக்கு கணித்து ஆடினார், ஆனாலும், அவரால் துல்லியமான பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் கேட்ச் கொடுத்து பட்லர் வெளியேறினார். 24 பந்துகளை வீசியவரும் சக்ரவர்த்தி 14 டாட் பந்துகளை வீசினார், 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அபிஷேக் அதிரடி தொடக்கம்
சாம்ஸன், அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரை நிதானமாக ஆடிய சாம்ஸன், அட்கின்சன் வீசிய 2வது ஓவரை வெளுத்து வாங்கினார். அட்கின்சன் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களை விளாசினார். ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் அபிஷேக் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 10 ரன்கள் சேர்த்தார்.
ஆர்ச்சர் வீசிய 5வது ஓவரில் ஸ்லோ பாலில் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், வந்தவேகத்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட் கீப்பர் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். பட்லர் வீசிய 5வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
மார்க் உட் வீசிய 6வது ஓவரை வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்திருந்தது.
அதில், ரஷித் வீசிய 8-வது ஓவரை அபிஷேக் சர்மா, 2 சிக்ஸர்கள், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். ஓவர்டன் வீசிய 9-வது ஓவரில் சிக்ஸர் விளாசி 20 பந்துகளில் அரைசதத்தை அபிஷேக் எட்டினார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.
அட்கின் வீசிய 11-வது ஓவரை குறிவைத்த அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸர் பவுண்டரியும், திலக் வர்மா ஒரு பவுண்டரியும் என 16 ரன்கள் விளாசினர். ரஷித் வீசிய 12 ஓவரில் சிக்ஸர் விளாசிய அபிஷேக் அதே ஓவரில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும்.
இரு கேட்ச் வாய்ப்புகள்
அபிஷேக் சர்மாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இரு கேட்சுகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். பெத்தல் ஒரு கேட்சையும், அதில் ரஷித் ஒரு கேட்ச் என இரு கேட்சுகளை அபிஷேக்குக்கு தவறவிட்டதை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
அதன்பின், ஹர்திக் பாண்டியா(3), திலக் வர்மா(19) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 12.5 ஓவர்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
மோசமான இங்கிலாந்து பேட்டிங்
பயிற்சியாளர் மெக்கலத்தின் பேஸ்பால் வியூகத்தால் இங்கிலாந்து பல அணிகளையும் மிரட்டி வந்ததால், இந்திய அணிக்கு எதிராகவும் அதிரடியாக பேட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு பயந்து தோல்வியை தழுவினர்.
பில் சால்ட், டக்கெட், ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தெல் என பெரிய பேட்டிங் பட்டாளமே இருந்தும் ஒருவரும் ஜொலிக்கவில்லை. கேப்டன் பட்லருக்கு ஐபிஎல் விளையாடிய அனுபவம் இருந்ததால் எளிதாக இந்தியப் பந்துவீச்சை கையாண்டு அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமே பட்லர் அடித்த 68 ரன்களும், ப்ரூக் 17, ஆர்ச்சர் 12 ஆகியவைதான், இந்த 3 வீரர்களும்தான் இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் சொற்பமாக ஆட்டமிழந்தனர்.
இதே ஈடன் கார்டன் மைதானத்தில்தான் கடந்த 2016ம்ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் ஃபைனலில் இங்கிலாந்து அணி கோப்பையை இழந்தது.
அதன்பின், 2024 டி20 உலகக் கோப்பையில் கயானாவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோற்று இங்கிலாந்து வெளியேறியது. குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சேர்ந்து 11 ஓவர்கள் வீசி 58 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீழ்ச்சிக்குக் காரணமாகினர்.
அப்போதிருந்து, சுழற்பந்துவீச்சை கண்டு பயப்படும் இங்கிலாந்து பேட்டர்கள் அதற்கு ஏற்றார்போல் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த ஆட்டத்திலும் 12 ஓவர்கள் சுழற்பந்து வீசப்பட்ட நிலையில், 5 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள்தான் இங்கிலாந்து அணி சேர்த்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு