‘இரும்பு காலம் தமிழகத்தில் இருந்து தொடங்கியது, 5,300 ஆண்டுகளுக்கு முன்பே…’ – ஸ்டாலின் கூறியது என்ன?

 மு.க. ஸ்டாலின், இரும்பு காலம்

பட மூலாதாரம், MK Stalin / DIPR

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என்றும், 5300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பு உருக்கு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வின் வாயிலாகத்தான் தான் இதை கூறுவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

கீழடி – கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு இன்று (ஜன. 23) முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘இரும்பின்’ தொன்மை என்ற நூலை வெளியிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அப்போது பேசிய அவர், தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என கூறினார். அவருடைய உரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது.

5300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பு உருக்கு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற அகழாய்வுகள், காலக் கணக்கீடுகள் இரும்பின் காலத்தை 4,000 ஆண்டுகளின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புனே, ஆமதாபாத் ஆகிய இடங்களிலும் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வகங்களிலிருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முடிவுகளை கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, கதிரியக்கக் காலக்கணக்கீடு அடிப்படையில், கி.மு. 3345ல் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகி உள்ளது எனத் தெரிகிறது.

இந்த முடிவுகள் எல்லாவற்றையும் தொகுத்துதான் இன்று ‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிடப்படுகிறது. தொல்லியல் அறிஞர்களின் கருத்துகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறும் ஆய்வுகளுக்கு இந்த முடிவுகள் சான்றாக இருக்கும்.

கொடையாகஇந்த முடிவுகளால் தமிழகத்துக்கும் தமிழ் நிலத்துக்கும் பெருமை. மானுட இனத்துக்கு தமிழகம் வழங்கும் மாபெரும் இதை கம்பீரமாக கூறலாம்.

இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்பட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ‘இரும்பின் தொன்மை’ புத்தகத்தை தொல்லியல் துறையை சேர்ந்த கே. ராஜன், ஆர். சிவானந்தம் ஆகியோர் தொகுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாடு

முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களின் மீது நடத்தப்பட்ட காலக் கணிப்புப் பரிசோதனைகளின்படி, தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததாக, தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்திருந்தது.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் இரும்புப் பயன்பாடு குறித்து கங்கை சமவெளி உள்பட பல்வேறு பகுதிகளில் கணக்கிட்ட ஆய்வுகளைப் பார்க்கும்போது மயிலாடும்பாறையில் கிடைத்த 4,200 ஆண்டுகள் என்பவை காலத்தால் முற்பட்டவை என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கக்கூடிய விஷயமாகும்” என்று கூறியிருந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு