இந்தியாவில்புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலிஇருந்து குதித்து குறைந்தது 11 பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அருகிலுள்ள தண்டவாளத்தில் கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
ஜல்கான் மாவட்டம் பச்சுரா தாலுகாவில் உள்ள பர்தாதே ரயில் நிலையம் அருகே மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“சில பயணிகள் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி கர்நாடக எக்ஸ்பிரஸ் வண்டியில் சிக்கிக் கொண்டனர். பூசாவல் பிரதேச ரயில்வே மேலாளர் விபத்து நடந்த இடத்திற்குச் சென்றார். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மாநில அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுக்களும் விபத்து நடந்த இடத்தை அடைந்து வருகின்றனர்” என்று ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிகாரிகளின் கருத்துப்படி, பீதியடைந்த சுமார் 30-35 பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, அவர்களில் சிலர் விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இதயபூர்வ அஞ்சலியை செலுத்துவதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எக்ஸ் பதிவில் தெரிவித்தார், “எனது சக அமைச்சர் கிரிஷ் மகாஜனும் காவல்துறை கண்காணிப்பாளரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் விரைவில் அங்கு வருவார். முழு மாவட்ட நிர்வாகமும் ரயில்வே நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு எட்டு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொது மருத்துவமனை மற்றும் பிற தனியார் மருத்துவ வசதிகள் தயாராக இருப்பதாகவும் ஃபட்னாவிஸ் கூறினார். “கண்ணாடி கட்டர்கள், ஃப்ளட்லைட்கள் போன்ற அவசர உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. முழு நிலைமையையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம், தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்துடன் நான் தொடர்பில் இருக்கிறேன்” என்று முதல்வர் ஃபட்னாவிஸ் கூறினார்.
“மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ், பர்தாதே ரயில் நிலையம் அருகே நின்றுவிட்டது. ஏனெனில், சில தண்டவாளப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. ரயில் திடீரென நின்றதும், தீப்பொறிகள் பறந்தன, சில பயணிகள் தீ விபத்து ஏற்பட்டதாக நினைத்தனர். அவர்கள் ரயிலில் இருந்து குதித்தபோது, அந்த தடண்டவாளத்தில் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி நசுங்கினர்” என்று பயணி சந்தீப் ஜாதவ் கூறினார்.
ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் கூறுகையில், “முதற்கட்ட தகவலின்படி, ஐந்து முதல் ஆறு பயணிகள் உடல் ரயில் விபத்தில் சிக்கி நசுங்கியது” என்றார்.
மத்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் ஸ்வப்னில் லிலா கூறுகையில், “எங்கள் முதற்கட்ட தகவலின்படி, புஷ்பக் எக்ஸ்பிரஸ் ஜல்கானில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே நின்றிருந்தது… இதுவரை, உயிரிழப்புகள் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. காயமடைந்த பயணிகளுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குவதே எங்கள் முதல் முன்னுரிமை” என்றார்