டிரம்ப் அறிவித்த வெளிவிவகார கொள்கைகள் என்ன? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மெக்சிக்கோ மீது 25வீத வரிகளை விதிக்கப்போவதாகவும்,சர்வதேச காலநிலை உடன்படிக்கையிலிருந்து விலகப்போவதாகவும் ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் டிரம்ப் வர்த்தக யுத்தம் டிக்டொக் குறித்தும் கருத்து தெரிவித்த டிரம்ப் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நீடிக்கும் என்ற நம்பிக்கை தனக்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகுவது உட்பட உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் தொடர்பிலான பல உத்தரவுகளில் கையெழுத்திட்ட பின்னர் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ளும் டிரம்பின் முடிவினால் எதிர்கால பெருந்தொற்றுகளிற்கு எதிரான போராட்டம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவிலிருந்து உருவான கொவிட்19 உட்பட ஏனைய சுகாதார நெருக்கடிகளை உரிய முறையில் உலக சுகாதார ஸ்தாபனம் கையாளத்தவறியமை காரணமாகவும்,உடனடி சீர்திருத்தங்களை முன்னெடுக்க தவறியமையினாலும் அமெரிக்கா அந்த அமைப்பிலிருந்து விலகுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அதிகளவு நிதியை வழங்கும் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வெளிநாட்டு அபிவிருத்தி உதவிகளை வழங்குவதை 90 நாட்களிற்கு இடைநிறுத்தி வைப்பதற்கான உத்தரவையும் டொனால்;ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டனயாகுவிற்கான ஒரு விட்டுக்கொடுப்பாக மேற்குகரையில் உள்ள யூத குடியேற்றவாசிகளிற்கு எதிராக ஜோ பைடன் விதித்ததடைகளை டிரம்ப் இரத்து செய்துள்ளார்.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் மணிநேரத்தில் முடிவுகளும் தீர்மானங்களும் உத்தரவுகளும் வேகமாகவும் சீற்றத்துடனும் வெளியாகின.
இது டொனால்ட் டிரம்பின் அமெரிக்க நலன்களிற்கு முன்னுரிமையளிக்கும், அமெரிக்காவிற்கு முதலிடம் அளிக்கும், வெளிவிவகார கொள்கையின் கீழ் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைகள் எவ்வாறு மிகவும் கூர்மையான தனித்துவமான மாற்றத்தை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
டிக்டொக் மீதான தடை, மூன்று வருடகால உக்ரைன் யுத்தம் குறித்து ரஸ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை குறித்தும் டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் யுத்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் புட்டினை மிகவிரைவில் சந்திக்கப்போவதாக தெரிவித்ததுடன் ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட மறுப்பதன் மூலம் புட்டின் ரஸ்யாவை அழிக்கின்றார் என தெரிவித்தார்.
ஹமாஸ் இஸ்ரேல் யுத்த நிறுத்தம் தொடருமா என்ற கேள்விக்கு எனக்கு அந்த நம்பிக்கையில் அது அவர்களின் யுத்தம் எங்களின் யுத்தமில்லை என டிரம்ப் தெரிவித்தார்.