‘திரும்பிச் செல்வதை தவிர வேறு வழியில்லை’ – டிரம்பின் எல்லைக் கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் வேதனை
- எழுதியவர், வில் கிராண்ட்
- பதவி, பிபிசி நியூஸ்
கடும் குளிரிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மட்டுமல்ல, தனது அடையாளத்தை மறைப்பதற்காகவும் மார்க்கோஸ், சற்றே நடுங்கிக்கொண்டே தனது ஹூடியை நன்றாக தலைக்கு மேல் இழுத்துவிட்டுக்கொள்கிறார்.
ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு பதினாறே வயதான சமயத்தில், மெக்ஸிகோவில் தனது சொந்த மாகாணமான மிச்சோஅகானில் (Michoacán) வலுக்கட்டாயமாக போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றில் சேர்க்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
தனக்கு நேர்ந்த கொடூரத்தையும் அதிலிருந்து தப்பி வந்த கதையையும் கூறும் மார்க்கோஸ் (அவரது உண்மையான பெயரல்ல) அவரும் அவரது குடும்பத்தினரும் மிச்சோஅகானிலிருந்து உடுத்திய உடையுடன் வெளியேறியதாக சொல்கிறார்.
ஒரு மாலை வேளையில் தனது தாயின் பல்வலிக்கு வலி நிவாரணிகளை வாங்குவதற்காக மருந்துகடைக்கு சென்ற போது திடீரென ஆயுதம் தாங்கிய நபர்களுடன் வந்த நான்கு பிக்-அப் டிரக்குகள் தம்மை சூழ்ந்துகொண்டதாக அவர் கூறுகிறார்.
“உள்ளே ஏறு, இல்லாவிட்டால் உன் குடும்பத்தை கொன்றுவிடுவோம் என அவர்கள் உத்தரவிட்டார்கள்”.
அவருடைய நிலையிலேயே மேலும் பல இளைஞர்கள் இருந்த ஒரு குடிசைக்கு தம்மை இழுத்துச் சென்றதாக மார்கோஸ் குறிப்பிடுகிறார்.
தமக்கு விருப்பமே இல்லாத ஒரு சண்டையில் கட்டாயப்படுத்தப்பட்டதால் பல மாதங்கள் ஈடுபட்டதாக சொல்லும் அவர், அந்த கும்பலில் தம்மீது இரக்கம் காட்டிய ஒருவரின் உதவியுடன் தப்பித்ததாகவும் கூறுகிறார்.
அமெரிக்காவில் தஞ்சமடைவதற்கு அந்நாட்டு அதிகாரிகளிடம் தனது விஷயத்தை எடுத்துச்சொல்ல, மார்கோஸ் மெக்ஸிகோ எல்லை நகரங்களில் ஒன்றான டிஜுவானாவில் ஒரு புலம்பெயர்வோர் முகாமில் பல மாதங்களை கழித்துள்ளார்.
அமெரிக்காவில் தஞ்சமடைய அந்நாட்டு குடியேற்ற நீதிமன்றங்கள் கேட்பதுபோல், மெக்ஸிகோவில் தாம் கொடுமைப்படுத்தப்படுவதற்கும், தன் மீது வழக்கு தொடரப்படுவதற்கும் நம்பகமான காரணங்கள் இருப்பதை தம்மால் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மார்கோஸ் இருந்தார்.
ஆனால், டிரம்பின் உத்தரவுகளால் அமெரிக்காவில் குடியேறலாம் என்ற மார்க்கோஸுன் நம்பிக்கை சிதைந்துள்ளது
அதிபர் பதவிக்கு திரும்பிய சில மணி நேரங்களிலேயே, குடியேற்றத்தையும் அமெரிக்க எல்லையில் தஞ்சமடைவோர் எண்ணிக்கையையும் குறைப்பேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதிபர் மாளிகையிலிருந்து பல உத்தரவுகளில் டிரம்ப் திங்கள்கிழமை மாலை கையெழுத்திட்டார்.
சில போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும், எல்லையில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்கு அனுமதியளிக்கும் உத்தரவிலும், மக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்
அந்த உத்தரவு, போதைப்பொருள் கும்பல் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி ஓடும் புலம்பெயர்வோருக்கான முகாம் ஒன்றின் இயக்குநரான கிறிஸ்தவ போதகர் ஆர்பர்ட் ரிவேராவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிபரின் செயல் உத்தரவின் அடிப்படையிலேயே முரண்கள் இருப்பதாக அவர் சொல்கிறார்.
“இந்த மக்கள் போதைப்பொருள் கும்பல்களிடமிருந்து தப்பியோடுபவர்கள் என்று சொல்லாமல் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பியோடுகிறார்கள் என இப்போது சொல்வீர்களென்றால், அவர்கள் தஞ்சம் கோருவதில் முன்பைவிட நியாயம் அதிகமிருக்கிறது என்றுதானே பொருள்,” என அவர் வாதிடுகிறார்.
”அவர்கள் ஒவ்வொரு நபரின் சூழ்நிலையையும் பார்த்து,தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். தேவைப்படுபவர்களுக்கு உதவிகளைச் செய்ய டிரம்ப் மனம் இறங்குவார்” என்கிறார் எல்லையில் காத்திருக்கும் மார்க்கோஸ்.
தெற்கு கலிஃபோர்னியாவில் எல்லையின் மறுபக்கம் உள்ள டிரம்பின் ஆதரவாளர்களை பொறுத்தவரை இந்த கடுமையான நடவடிக்கைகளுக்கான விளக்கம் தேவையற்றவை.
“அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான மக்கள் வெளியேற்றம்” திட்டத்தை செயல்படுத்த புதிய அதிபர் திட்டமிட்டிருப்பது “பெரிய நிம்மதியாக இருக்கும்” என்கிறார் சான் டீகோ கவுன்டி குடியரசுக் கட்சியின் தலைவர் பாவ்லா விட்செல்.
“உள்ளே வரும் இந்த மக்களின் சுமையால் சான் டீகோ கவுன்டியின் அமைப்புகள் மீதான பாரம் மிகவும் அதிகரித்துள்ளது. அதை சமாளிக்கும் வகையில் அது உருவாக்கப்படவில்லை. இதை தொடர்ந்து சமாளிக்கும் வகையில் இந்த கவுன்டி இல்லை,” என்ற வாதத்தை முன்வைக்கிறார்.
இந்த நடவடிக்கைகள் குடியேற்றத்திற்கு எதிரானவை அல்ல என வலியுறுத்தும் அவர், “இது இன்னமும் குடியேறியவர்களின் நாடுதான். அமெரிக்காவில் உள்ள தரவுகளற்ற குற்றவாளிகள் மற்றும் எல்லைதாண்டி மக்களை கடத்தும் கும்பல்களை வெளியேற்றுவதற்காகவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்” என்கிறார்.
இனி எல்லையைக் கடப்பது சாத்தியமா?
ஆனால் எந்த குற்றமும் செய்யவில்லை, தஞ்சமடைவதற்கு நியாமான காரணங்கள் இருப்பதாக கூறி மெக்ஸிகோவில் காத்திருக்கும் மக்களைப் பொறுத்தவரை டிரம்பின் நடவடிக்கை விரைவான பரந்துபட்ட விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிபர் பதவியேற்றுக்கொண்ட அன்று காலை, தஞ்சம் கேட்கும் தங்கள் கோரிக்கை குறித்து அமெரிக்க பாதுகாப்பு படையினரிடம் பேசுவதற்காக, சுமார் 60 புலம்பெயர்ந்தோர், டிஜுவானாவில் உள்ள சாப்பரல் எல்லையில் காத்திருந்தனர்.
ஆனால் அவர்களை முகாம்களுக்கு திரும்ப அழைத்துச் செல்வதற்கான பேருந்துகளுக்கு செல்லும்படி மெக்ஸிகோ அதிகாரிகள் கூறியதால், அவர்களுக்கு அமெரிக்க அதிகாரிகளிடம் பேசும் வாய்ப்பே கிட்டவில்லை.
பைடன் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் பரப்புரையில் டிரம்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சிபிபி ஒன் (CBP one) செல்போன் செயலி முடக்கப்பட்டுவிட்டது.
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் தஞ்சம் கோருவதற்கு ஒரே சட்டரீதியான வழியாக இந்த செயலி இருந்தது. அது நீக்கப்பட்டுவிட்டதால் எல்லையை கடப்பது என்பது சாத்தியமில்லை.
ஒரு சிலருக்கு இத்தோடு எல்லாம் முடிந்தது என தோன்றுகிறது.
அமெரிக்க எல்லையிலிருந்து நடக்கும் தொலைவில், ஒரு நைலான் கொட்டகைஅ மைத்து அதில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்துவந்தார் ஒரலியா.
தானும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அச்சுறுத்தல்களுக்கு பயந்து மிச்சோஅகானிலிருந்து ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லும் அவர், தனது 10 வயது மகனுக்கு வலிப்பு நோய் இருப்பதாக சொல்கிறார்.
தனது மகனுக்கு பாதுகாப்பாக அமெரிக்காவில் எங்காவது மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு என்கிறார் அவர்.
ஆனால் சிபிபி ஒன் செயலி இல்லாமல், தனது கோரிக்கை கேட்கப்படும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை என்கிறார் ஒரலியா.
“இப்போது திரும்பி சென்று ஒன்றும் நடக்காது என கடவுளை நம்புவதை தவிர எங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை” என கூறுகிறார்.
அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்ளின் விளைவுகள் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கும்படி புலம்பெயர்வோர் உரிமைகளுக்காக வாதாடும் உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் அவரை அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் ஒரலியா தனது முடிவை எடுத்துவிட்டார்.
அவர் பெட்டி படுக்கைகளுடன் தயாராகிவிட, கடந்த ஆண்டில் அவர் வீடு என சொல்லிக்கொண்ட கொட்டகை அடுத்த குடும்பத்திற்கு காத்திருக்கிறது.
“நடந்தவை எல்லாம் நியாயமற்றவையாக இருக்கின்றன,” என்கிறார் ஒரலியா, கண்ணீரை துடைத்துக்கொண்டே.
“அந்த நாட்டினரை (அமெரிக்கா) மெக்ஸிகோ எந்த குறையும் சொல்லாமல் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அது மறுமார்க்கத்தில் செயல்படுவதில்லை. எங்களைப் போலவே ஏராளமான குடும்பங்கள் இருக்கின்றன. கடவுள் அவரை (டிரம்ப்) மாற்றுவார் என நம்புகிறேன்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு