by guasw2

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் பெருந்தோட்டப் பகுதியில் இன்றும் லயன் அறைகளில் தான் மக்கள் வாழ்கிறார்கள். முதலில் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை  பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் தொடர்பான  சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த   திட்டத்தின் உள்ளடக்கம் என்னவென்பதில் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு மத்தியில்  பிரச்சினை காணப்படுகிறது.

நாட்டை தூய்மைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு  பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படுகின்றன. இதுவே பாரதூரமான பிரச்சினை. உதிரிபாகங்களை அகற்ற வேண்டுமாயின் முதலில் காலவகாசம் வழங்க வேண்டும். அதேபோன்று அவற்றை இறக்குமதி செய்வதையும் தடுக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எட்கா மற்றும் சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தகம்  ஆகிய வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு எதிராகவே செயற்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் இந்த ஒப்பந்தங்களில் இருந்து கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை அமுல்படுத்துங்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து மதுபான சாலை அனுமதிப் பத்திரங்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதாக அரசாங்கம் குறிப்பிட்டது.ஒருசில நபர்களின் பெயர்களின் மறைமுகமான வகையில் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை  உண்மையான பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.  விநியோகிக்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் இரத்துச் செய்யபபடவில்லை.  மதுபான சாலை உரிமையாளர்கள் அரசாங்கத்தை ஆக்கிரமித்து விட்டார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

அரிசி மாபியா, மின் மாபியா ஆகியவற்றை இல்லாதொழிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது.ஆனால் இதுவரை  எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே மாபியாக்களை இல்லாதொழிப்பதற்கு  கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்துங்கள்.

மின்கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு குறைக்க  முடியாது என்று மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை  குறைத்துள்ளது. ஆணைக்குழுவுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் அழும் வகையில் எதிர்தரப்பினர் அரசியல் தரப்பினர் தோல்வியடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். தற்போது பெரும்பான்மையுடன் அரசாங்கம் வெற்றிப் பெற்றுள்ளது. ஆகவே அழாமல் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம்  நிறைவேற்ற வேண்டும்.

பெருந்தோட்டப் பகுதியில் இன்றும் லயன் அறைகளில் தான் மக்கள் வாழ்கிறார்கள். முதலில் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை  பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் உள்ளடக்கப்படும் என்று எதிர்பாரக்கிறோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்