கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே உசிதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாம் கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே உசிதமானது. அவருக்கு மாத்திரமின்றி ஏனைய சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இது பொறுந்தும். விரைவில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சகல முன்னாள் ஜனாதிபதிகளதும் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
1986ஆம் ஆண்டு 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அங்கத்துவம் வகிக்காவிட்டாலும், அதன் பின்னர் பல பாராளுமன்றங்களில் பல தசாப்தங்களில் அவர் உறுப்பினராக அங்கத்துவம் வகித்திருக்கின்றார்.
அது மாத்திரமின்றி இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய ஜனாதிபதியாகவும் அவர் பதவி வகித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது அவர் திருமணம் செய்து கொண்டவருக்கு உத்தியோகபூர்வமாக இல்லமொன்று வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் அவர்கள் வசிக்கும் அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லத்துக்கு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கினை செலுத்த வேண்டும் என்று குறித்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகின்றேன். எனவே நாம் கூறும் வரை காத்திருக்காமல் அவர் வெளியேறத்தான் வேண்டும். அவ்வாறில்லை என்றால் குறித்த இல்லத்துக்கான வாடகையை செலுத்தி அங்கு வசிக்கவும் முடியும். அதனை விட அவருக்கு வளர்ந்த புதல்வர்கள் மூவர் இருப்பதால் அவர்கள் அவரைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணுகின்றோம். நாமல் ராஜபக்ஷவும் அரசியலமைப்பை நன்கு பார்க்க வேண்டும்.
இந்த சட்டம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமின்றி சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொறுந்தும். அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகளை நீக்கி, அவர்களால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைப்பதற்கான ஆணையே எமக்கு கிடைத்திருக்கின்றது. இதுவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இல்லம் தொடர்பான மதிப்பாய்வு மாத்திரமே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க உள்ளிட்ட ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்படும்.
அந்த சட்ட ரீதியான நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும். எவ்வாறிருப்பினும் நடவடிக்கை எடுக்க முன்னர் அவர்கள் தாமாகவே வெளியேறுவது சிறப்பாக இருக்கும். நாட்டில் கொழும்பு மற்றும் கண்டியிலுள்ள இரு ஜனாதிபதி மாளிகைகளை மாத்திரமே நிர்வகித்துச் செல்வதே எமது எதிர்பார்ப்பாகும். ஏனையவற்றை சுற்றுலா, கல்வி மற்றும் நூதனசாலை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்காக பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.