வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 19 000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 10ஆம் திகதி முதல் ஆரம்பமான சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலேயே அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் 127 பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட 5821 குடும்பங்களைச் சேர்ந்த 19 032 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. 10 வீடுகள் முழுமையாகவும் 438 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 25 சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளன. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாயம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டினை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாரத்ன, வடகிழக்கு பருவ மழைக் காலநிலை பெப்ரவரி வரை காணப்படும். எவ்வாறிருப்பினும் எதிர்வரும் வாரங்களில் மழை வீழ்ச்சி குறைவடையும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா, சில சந்தர்ப்பங்களில் மத்திய மாகாணத்திலேயே இந்த காலநிலை தாக்கம் செலுத்தும். மார்ச் – ஏப்ரல் காலப்பகுதியில் சாதாரண மழையுடனான காலநிலை காணப்படும் என்றார்.