டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (22/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் டிரம்ப் பிறப்பித்த உத்தரவால் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப வாய்ப்புள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி கூறுகிறது.

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்ட விரோதமாக தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்துவது உள்ளிட்ட புதிய உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதனால், அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக தங்கியவர்களாகியுள்ளனர். அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் அமெரிக்க அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்ற தயாராகி வருவதாக தினமணி நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்புக்கு பிரதிபலனாக, அமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் மாணவர் நுழைவு இசைவு(விசா) மூலம் சட்டப்படி இந்தியர்கள் தங்கும் முறையை டிரம்ப் நிர்வாகம் பாதுகாக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாக அந்த செய்தி கூறுகிறது.

டாப்5 செய்திகள்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருப்பதியில் பிப்.4 முதல் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் மசால் வடை

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்ன பிரசாதத்துடன் மசால் வடை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தேவஸ்தானம் கடந்த 1983ம் ஆண்டு முதல் தொடர்ந்து 42 வருடங்களாக பக்தர்களுக்கு திருமலை மற்றும் திருப்பதியில் அன்னதானம் வழங்கி வருகிறது. அன்னதானத்தில் நாள்தோறும் வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், சட்னி, சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பரிமாறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசால் வடை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு வெங்காயம், பூண்டு இல்லாமல் மசால் வடைகளை தயாரித்து சோதனை முறையில், 5 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கினர். இதற்கு பக்தர்கள் திருப்தி தெரிவித்ததை தொடர்ந்து, வரும் பிப்., 4ம் தேதி ரத சப்தமி முதல் அனைத்து பக்தர்களுக்கும் மசால் வடை பிரசாதம் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜு வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை

விஜய் நடித்த வாரிசு படத்தித்தின் தயாரிப்​பாளர் தில்​ராஜு​வின் வீடு மற்றும் அலுவல​கங்கள் என மொத்தம் 8 இடங்​களில் 55 வருமான வரித் துறை அதிகாரிகள் குழு​வினர் சோதனை​யில் ஈடுபட்டதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

பிரபல தயாரிப்​பாள​ரும், தெலங்​கானா மாநில திரைப்பட மேம்​பாட்டுக் கழகத் தலைவருமான தில்​ராஜு​வின் வீடு மற்றும் அலுவல​கங்​களில் வருமான வரித்​துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்​றனர். வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய 55 பேர் கொண்ட குழு, 8 இடங்​களில் ஒரே நேரத்​தில் சோதனை நடத்தி வருகி​றது.

தில்​ராஜு​வின் சகோதரர் சிரிஷ் மற்றும் மகள் ஹன்ஷிதா ரெட்டி ஆகியோ​ருக்​குச் சொந்​தமான பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கொண்​டாப்​பூர் மற்றும் கச்சிபவுலி ஆகிய இடங்​களில் உள்ள வீடு​களி​லும் சோதனைகள் நடத்​தப்​பட்டு வருகின்றன. இதில் வருமான வரித் துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்​றனர்.

இதுவரை ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 26 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்​யப்​பட்​டுள்ளதாக தகவல்கள் வெளி​யாகி உள்ளன. மேலும், கணக்​கில் காட்​டப்​படாத ரூ. 200 கோடிக்​கும் அதிகமான சொத்​து​களின் ஆவணங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்ள​தாகக் கூறப்​படுகிறது.

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

சத்தீஸ்கர் வனப்பகுதியில் என்கவுன்ட்டர்: 27 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் ஒடிஷா எல்லையை ஒட்டியுள்ள கரியாபந்து மாவட்ட வனப்பகுதியில் 27 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

80-க்கும் மேற்பட்ட நக்சல்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஒடிசா காவல் துறையை சேர்ந்த 3 சிறப்பு படைகள், சத்தீஸ்கர் காவல் துறையின் 2 சிறப்பு படைகள், சிஆர்பிஎப் பிரிவை சேர்ந்த 5 சிறப்பு படைகள் கடந்த திங்கள்கிழமை அந்த இடத்தை சுற்றி வளைத்தன. அன்றைய தினம் பிற்பகலில் இருதரப்புக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. நக்சல் தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே திங்கள்கிழமை இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

கடந்த இரு நாட்களாக பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 27 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் நக்சல் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரெட்டி (60) என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

“தொடர்ந்து என்கவுன்ட்டர் நடைபெறுவதால் நக்சல் தீவிரவாதிகளின் உயிரிழப்பு அதிகரிக்கும். பாதுகாப்புப் படையில் ஒரு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.” என்று சத்தீஸ்கர் காவல்துறை வட்டாரங்கள் கூறுவதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், VIRAKESARI WEBSITE

உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக வீரகேசரி இணையதள செய்தி கூறுகிறது.

கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஊடாக (TVET) தரமான கல்வி அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் போது பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு பலதரப்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு TVET இனை பிரதான கல்வியுடன் இணைப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

வேலைத்தளங்களில் பாலின சமத்துவம் என்ற சிக்கலுக்குரிய விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான தலையீடு மற்றும் ஒத்துழைப்பு கட்டமைப்புகளின் தேவை குறித்தும் இரு தரப்பும் தமது அங்கீகாரத்தை சுட்டிக்காட்டியது. கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான நிலையான தீர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இலங்கை மற்றும் உலக வங்கியின் பரஸ்பர உறுதிப்பாடு இந்த கலந்துரையாடலின் ஊடாக வலுப்படுத்தப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.