பெயர் மாற்றம்:விசுவாசிகளிற்கும் சீற்றம் !

by guasw2

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் நெருங்கிய இந்திய அரச விசுவாசிகளும் எதிராக குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

அந்நடவடிக்கையானது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உரித்தாக்கப்பட்டு இரண்டு வருடங்கள்கூடக் கடக்காத நிலையில் அம்மக்களின் அபிப்பிராயங்கள் எதுவும் பெறப்படாது யாழ்ப்பாண கலாசார நிலையம் திருவள்ளுவர் கலாசார நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண கலாசார நிலையம் யாழ். மாநகரசபைக்கு உரித்தான காணியில் இந்திய அரசின் நன்கொடையில் உருவானது.

அதற்கான உடன்படிக்கையில் யாழ். கலாசார நிலையத்தை முகாமைத்துவம் செய்கின்ற குழுவில் யாழ் மாநகரசபையினதும் வடமாகாண சபையினதும் சார்பில் ஒவ்வொருவர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சபைகளினதும் கலந்தாலோசிப்புகளின்றி இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது.

கோட்டாபய அரசாங்கம் யாழ். கலாசார நிலையத்தின் பெயரை மாற்றுமாறு முன்னர் அழுத்தங்களைப் பிரயோகித்தபோது மாநகரசபையின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

இப்போது, இரு சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் திடுதிப்பென்று நிகழ்ந்த இப்பெயர் மாற்றம்  இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை இந்தியா நாசுக்காக நிறைவேற்றிக்கொடுத்துள்ளது என்றே எண்ணவைத்துள்ளது.

பெயர் மாற்றப்பட்டிருப்பதன் மூலம் அதன் தனித்துவம் ஒரு படி கீழிறங்கியுள்ளது என்பதே நிதர்சனம். அது மட்டுமல்ல, இப்பெயர் மாற்றத்தின் மூலம் ஈழத்தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையிலும் ஒரு படி கீழிறங்கியுள்ளது“ எனவும் ஜங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்