டிரம்ப் தனது பதவியேற்புக்கு மோதியை அழைக்கவில்லையா? அமெரிக்க அதிபரின் உத்தி என்ன?
- எழுதியவர், ஜூபைர் அகமது
- பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி ஹிந்தி
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இரண்டாவது முறையாக அவர் அதிபர் பதவியில் அமர்ந்துள்ளார்.
2017 ஜனவரி 20ஆம் தேதி அவர் முதல் முறையாக அதிபரானார். பின்னர் அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த அவர் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு 2025 இல் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதிபரானவர் குரோவர் கிளீவ்லேண்ட். அவர் 1885 இல் முதல் முறையாக அமெரிக்காவின் அதிபரானார். பின்னர் 1889 இல் தேர்தலில் தோல்வியடைந்த அவர் 1893 இல் மீண்டும் வெற்றி பெற்றார். தற்போது டிரம்பும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டு கமிட்டி (ஜேசிசிஐசி) ஏற்பாடு செய்த இந்த பதவியேற்பு விழாவின் பாரம்பரியம் 200 ஆண்டுகள் பழமையானது. 1789ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் ஜார்ஜ் வாஷிங்டன் பதவியேற்றதிலிருந்து இது நடந்து வருகிறது.
டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் உலகின் முக்கிய தலைவர்கள், நட்பு நாடுகள் மற்றும் எதிரி நாடுகளின் தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
அதிபர் அலுவலகம் அதிகாரபூர்வமாக விருந்தினர் பட்டியலை வெளியிடவில்லையென்றாலும், பட்டியல் குறித்து பல ஊகங்கள் வலம் வந்தன.
மோதி காணப்படவில்லை
டிரம்பின் முந்தைய அரசின் தீவிர எதிர்ப்பாளரான சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“நட்பு நாடுகளாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி, அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க வேண்டும் என்ற அதிபரின் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது” என்று டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறினார்.
இருப்பினும் இதற்கு நேர்மாறாக ‘நெருங்கிய நண்பர்’ என்று டிரம்ப் முன்பு அழைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
டிரம்ப், ‘எதிர்ப்பாளர்’ என்று நம்பப்பட்டவருக்கு அழைப்புவிடுத்து ‘நண்பரை’ ஏன் புறக்கணித்தார்? என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியானா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் சுமித் கங்குலி, “எதிர்ப்பாளர்களுக்கான தன் தனிப்பட்ட தூதாண்மை முயற்சிகளின் மீது டிரம்ப் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது” என்றார்.
“இருப்பினும் கடந்த காலத்திலும் இந்த உத்தி கைகொடுக்கவில்லை. வட கொரியாவின் கிம் ஜாங் உன்னை சமாளிக்க டிரம்ப் மேற்கொண்ட சில தீவிர முயற்சிகள் அதிக பலனைத் தரவில்லை” என்று சுமித் கங்குலி கூறினார்.
சீனாவிற்கு முன்னுரிமை
ஷி ஜின்பிங் அழைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மிஷகன் ஸ்கூல் ஆஃப் இன்ஃபர்மேஷனின் பேராசிரியர் ஜோஜித் பால், ”கூட்டாளித்துவ விஷயத்தில் அமெரிக்காவிற்கு ஜின்பிங் மிக முக்கியமான தலைவர்” என்றார்.
”ஏனெனில் சீனாவுடனான வர்த்தக உறவை முற்றிலுமாக கைவிடுவது அமெரிக்காவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல இந்தியாவுடனான உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டால், வர்த்தகம் பாதிக்கப்படும். குறிப்பாக சில மருந்துகள் மற்றும் வைரங்கள் போன்றவற்றின் வர்த்தகம் பாதிக்கும்”
“இந்த இரண்டு துறைகளிலும் இந்தியா தனது அந்நியச் செலாவணி கையிருப்புக்காக அமெரிக்காவிலிருந்து வரும் வருவாயை பெரிதும் நம்பியுள்ளது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் முக்கியமாக சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்தும் என்று பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதாவது, இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், யுக்ரேன்-ரஷ்யா போர் மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.
வரும் நாட்களில் அமெரிக்க-சீன உறவுகள் டிரம்புக்கு மிகப்பெரிய சவாலாக மாறும் என்று பல அமெரிக்க ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“ஷி ஜின்பிங்கை அழைத்ததற்கான முக்கிய காரணம், உரையாடலுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக ஒரு சமிக்ஞையை அனுப்புவதாகும். சீனாவுடனான இருதரப்பு உறவுகள் ஒரு முக்கியமான விவகாரம். அதே நேரம் ஒப்பீட்டளவில் இந்தியாவுடனான உறவுகள் நன்றாக உள்ளன. எனவே இப்போது அதன் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை,” என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுப் பேராசிரியரான தேவேஷ் கபூர் கூறினார்.
விருந்தினர் பட்டியல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்படும் விருந்தினர்களின் பட்டியலை தயாரிப்பதற்கு காங்கிரஸின் கூட்டு குழு மற்றும் டிரம்ப்அதிகார மாற்ற குழு பொறுப்பாகும். அவர்கள் தூதாண்மை, செயல் உத்தி மற்றும் பொருளாதார கூட்டாண்மை விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
“அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் குழு மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் காங்கிரஸ் கூட்டு குழு, அதிபரின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்படும் விருந்தினர்கள் தொடர்பாக பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். நன்கொடையாளர்கள், அதிபரின் உதவியாளர்கள் மற்றும் அவரது குழுவினர் ஆகியோர் வெளிநாட்டு விருந்தினர்களைப் போலவே முக்கியமானவர்கள்” என்று பேராசிரியர் பால் கூறினார்.
மோதியின் பெயர் பட்டியலில் இருந்ததா இல்லையா என்பது அவ்வளவு முக்கியமில்லை என்பது சில ஆய்வாளர்களின் வாதம்.
“இந்த விஷயத்தை பெரிதாக அலச வேண்டிய அவசியமில்லை. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குவாட் உச்சி மாநாட்டின் போது மோதியும் டிரம்பும் சந்திக்க வாய்ப்புள்ளது,” என்று தெற்காசிய விவகாரங்களின் நிபுணர் மைக்கேல் குகல்மேன் கூறினார்.
“மோதி அழைக்கப்படாததை பெரிய விஷயமாக்கக் கூடாது. மோதியும் டிரம்பும் விரைவில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு நடைபெறக்கூடும். அந்தக் கண்ணோட்டத்தில் மோதியை அழைக்காதது பற்றிக்குரல் கொடுப்பது தேவையற்ற கூப்பாடு,” என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் தனது முதல் பதவிக் காலத்தின் போது இந்தியாவுடனான வர்த்தக மோதல்களால் டிரம்ப் அடைந்த விரக்தியின் அடையாளம் இந்த முடிவு என்று சிலர் கூறுகின்றனர்.
‘ஹவ்டி மோதி’ மற்றும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வுகள் ஒரு புறம் இருக்க, சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதில் இந்தியா பின்தங்கியிருப்பதாக டிரம்ப் நினைக்கக்கூடும்.
இருப்பினும் பதவியேற்பில் மோதி இல்லாதது குறித்து பேராசிரியர் சுமித் கங்குலி ஆச்சரியம் தெரிவித்தார்.
“டிரம்புக்கும் மோதிக்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதையே இது காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
“ஒட்டுமொத்தமாக இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு உள்ளது. எனவே இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளைத் தவிர இந்தியாவுடன் டிரம்ப் தீவிர பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை,” என்று பேராசிரியர் ஜாய்ஜித் பால் குறிப்பிட்டார்.
எனினும் கடந்த செப்டம்பரில் தனது அமெரிக்கப் பயணத்தின் போது பிரதமர் மோதி, டொனால்ட் டிரம்பை சந்திக்க முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மோதியை அழைக்காததற்கு இரண்டாவது காரணம் என்ன?
“டிரம்ப் எதையும் மறப்பதில்லை. அது உண்மை. குவாட் உச்சி மாநாட்டிற்காக மோதி அமெரிக்கா வந்தபோது தன்னை புறக்கணித்ததாக டிரம்ப் உணர்ந்திருப்பார் என்பதை மறுக்க முடியாது,” என்று குகல்மேன் கூறினார்.
“ஆனால் அது வெறும் ஊகம் என்று நான் நினைக்கிறேன். பதவியேற்பு விருந்தினர் விவகாரம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு பதிலாக சீனாவை மையப்படுத்திய விவகாரமாகத் தெரிகிறது,” என்றார் அவர்.
“இது சீனாவிற்கு அனுப்பப்பட்ட சமிக்ஞையாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். மோதி மற்றும் பிற தலைவர்களை பற்றியதாக இது கருதப்படக்கூடாது.” என்றார்.
இருப்பினும் விழாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன துணை அதிபர் ஹான் ஜெங் மற்றும் பல நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஷி ஜின்பிங் டிரம்பின் அழைப்பை நிராகரித்தார் என்றே சொல்லலாம்.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குவாட் உச்சிமாநாட்டின் போது டிரம்புடனான உறவை மேம்படுத்த மோதிக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.
வெளிநாட்டுத் தலைவர்களை குறிப்பாக வலதுசாரித் தலைவர்களாக பிரபலமாக உள்ளவர்களை அழைத்தது, டிரம்பின் செயல் உத்தியில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது என்று அனைத்து நிபுணர்களிடையேயும் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து உள்ளது.
சித்தாந்த ரீதியாக டிரம்பிற்கு நெருக்கமான தலைவர்களுடனான கூட்டணியின் அடையாளம் இது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு