பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே கொடுக்கும் ஆண் – பூச்சிகள், பறவைகளில் என்ன நடக்கிறது?
ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் பரிசைப் பிரிக்கும்போது அதில் வண்ணமயமான காலுறைகளை நீங்கள் காணும்போது, ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தால், நீங்கள் ஒரு பெண் ஈயாக இல்லை என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள்ளுங்கள்.
ஒரு பெண் ஈ (scorpion fly) அதன் இணையிடம் இருந்து உமிழ்நீரைப் பரிசாக எதிர்பார்க்கலாம். ஒரு வேளை அதில் ஏமாற்றம் அடைந்தால், அந்தப் பெண் ஈ அதன் சாத்தியமான இணைகளிடம் இருந்து வரும் சின்னச்சின்ன அன்பளிப்புகளை பெற்றுக் கொள்கிறது.
நத்தைகள், மண்புழுக்கள் போன்ற பல்வேறு இனங்களில் உள்ள ஆண் விலங்குகள் தங்களது அன்பைத் தெரிவிக்க மற்றும் இனச்சேர்க்கையின் போது பெண்களுக்கு ஊட்டச்சத்து கொண்ட பரிசுகளை வழங்குகின்றன.
பறவைகளும் பரிசுகளை வழங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஆண் சாம்பல் பருந்து குருவி சிறிய உயிரினங்களைப் பிடித்து முட்கள் அல்லது கிளைகளில் சொருகுவதன் மூலம் தங்கள் துணையை ஈர்க்கின்றன. பின்னர் அதை பெண் குருவிகளுக்கு அன்பளிப்பாக வழங்குகின்றன.
சுவாரஸ்யமாக, இந்த பழக்கம் பூச்சிகள் மற்றும் சிலந்திகளிடையேயும் காணப்படுகிறது. உதாரணமாக, ஆறு புள்ளிகள் கொண்ட ஆண் அந்துப்பூச்சிகள் தங்கள் விந்தணுவின் மூலம் ரசாயனத்தை தங்கள் பெண் கூட்டாளிக்கு கொடுக்கின்றன.
மறுபுறம், நாற்றங்கால் வலை சிலந்திகள் தங்கள் இணையை ஈர்ப்பதற்காக பட்டு நூல்களில் சுற்றப்பட்ட இரையை பெண் சிலந்திகளுக்கு வழங்குகின்றன. அந்த நூலை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு ரசாயனங்களைச் சேர்க்கின்றன.
பெண் சிலந்தி மறுத்தால், ஆண் சிலந்தி அதிக ரசாயனங்களைச் சேர்த்து மீண்டும் பரிசு வழங்குகிறது.
சில நேரங்களில், ஆண் நாற்றங்கால் வலை சிலந்திகள் பெண் சிலந்திகளுக்கு தரம் குறைந்த இரையை அல்லது அரைகுறையான உணவைக் கொடுத்து ஏமாற்ற முயல்கின்றன.
பெண் சிலந்தி பரிசை பிரித்துப் பார்க்கும் முன்பே, ஆண் சிலந்தி அதனுடன் இணைகிறது. பெண் சிலந்தி கவனிக்கும் முன் ஆண் சிலந்தி தப்பித்து விடுகிறது. ஆண் நாற்றங்கால் வலை சிலந்திகள் கொடுக்கும் பரிசுகளில் 70 சதவீதம் வரை போலியானவை என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
“ஏமாற்ற முயற்சிக்கும் ஆண் சிலந்திகள் உள்ளன. அவை பழைய, உலர்ந்த பூச்சியின் கால்களையோ அல்லது வேறு ஏதாவது ஒன்றையோ பரிசாக கொடுக்கக் கூடும்” என்று கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தின் நடத்தை சூழலியல் நிபுணர் டாரில் க்வின் கூறுகிறார்.
போலிப் பரிசுகள்
“என் வீட்டுக்கு அருகில், வசந்த காலத்தில், ஒரு அழகான நிகழ்வு நடக்கிறது. ஆண் ஈக்கள் (male dancing flies) ஆற்றிற்கு வெளியே வந்து நீர்வாழ் பூச்சிகளைப் பிடிக்கின்றன” என்று க்வின் கூறுகிறார்.
“அவை இரையைப் பரிசுகளாக கொண்டு செல்கின்றன. பெண் பூச்சிகள் இரையைப் பெற போட்டியிடுகின்றன. ஏன் என்றால் அவற்றால் இரைகளை பிடிக்க இயலாது. முட்டைகளை உற்பத்தி செய்ய பெண் பூச்சிகளுக்கு ஊட்டச்சத்து தேவை. ஒரு சந்தர்ப்பத்தில், விதையிலிருந்து வரும் வில்லோ பஞ்சை ஒரு ஆண் பூச்சி பெண் பூச்சியிடம் வழங்க முயற்சி செய்தது,” என்கிறார் க்வின்.
பயனற்ற பரிசுகளை வழங்குவது குறுகிய காலத்திற்கு மட்டுமே ஆண் பூச்சிகளுக்கு பயனளிக்கும். பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவுடன், அந்த ஆண் பூச்சியை நிராகரித்து விடும். எனவே அந்த ஆண் பூச்சியால் பெண் பூச்சியுடன் சிறிது காலம் மட்டுமே இணைந்திருக்க முடியும்.
பெண் பூச்சிகள் பெரும்பாலும் பல ஆண் பூச்சிகளுடன் இணைவதால், ஏமாற்றிய ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் முட்டைகளை கருத்தரிப்பதற்கான குறைந்த வாய்ப்பைக் கொண்டிருக்கும். இதன் விளைவாக தனது விந்தணுக்களைத் திறம்பட கடத்தும் வாய்ப்பை அந்த ஆண் பூச்சிகள் இழக்க நேரிடும்.
சில பூச்சிகள் பெண் பூச்சிகளுடன் இணை சேர தங்களையே தியாகம் செய்து கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆண் சேஜ்பிரஷ் பூச்சி, இனச் சேர்க்கையின் போது, பெண் பூச்சி தனது பின் இறக்கைகளைக் கடித்து, அதன் ஹீமோலிம்பை (பூச்சியின் ரத்தத்தை) உறிஞ்சவும் அனுமதிக்கிறது.
ஆண் பூச்சிகள் இந்த ‘காதல் கடியை’ சகித்துக் கொள்வதால், அதற்கு மற்றொரு துணையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால் மீண்டும் காதல் முயற்சிகளைத் தொடர அதற்கு ஆற்றல் இருப்பதில்லை என ஒரு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண் ரெட்பேக் சிலந்தி பின்னோக்கிச் சென்று, பெண்ணின் தாடைகளுடன் மோதுகிறது. பெண் சிலந்தி இறுதியில் ஆண் சிலந்தியின் வயிற்றுப் பகுதியை மெல்ல உட்கொள்ளும் வரை அதன் அடிவயிற்றின் நுனியை மென்று கொண்டிருக்க ஆண் சிலந்தி அனுமதிக்கிறது.
“ஒரு வகையில், ஆண் சிலந்தி தனது உயிரை துறப்பதால் அதற்கு அநீதி இழைக்கப்பட்டதாக தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்” என்று வைன் கூறுகிறார்.
மகிழ்விக்க வழங்கப்படும் பரிசுகள்
“ஒரு டார்வினிய கண்ணோட்டத்தில், ரெட்பேக் சிலந்திகளுக்கு இனச்சேர்க்கைக்காக ஒரு பெண் சிலந்திகளைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான மற்றும் அதிர்ஷ்டமான நிகழ்வாகும். உணவின் மூலம் பெண் சிலந்தியை திசை திருப்பி, உடலுறவை நீட்டித்து, அதிக விந்தணுக்களை வெளியிட ஆண் சிலந்தி அனுமதி பெறுகிறது. இதன் விளைவாக, ஆண் சிலந்தி நிச்சயமாக அதிக சந்ததிகளைப் பெறும்,” என்கிறார் வைன்.
2022ஆம் ஆண்டில், சீனாவில் உள்ள ஜியாங்சு அகாடமி ஆஃப் அக்ரிகல்ச்சர் சயின்ஸின் பூச்சியியல் வல்லுநர் சுஃபேய் டாங் மற்றும் அவரது நண்பர்கள் 99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூச்சிகள் பரிசுகள் வழங்கும் நிகழ்வை பசையால் பாதுகாக்கப்பட்ட தொன்மத்தின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
பழங்கால பசையின் உள்ளே, அலவேசியா இனத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பூச்சி தனது கால்களுக்கு இடையில் வழுவழுப்பான திரவத்தால் செய்யப்பட்ட வெற்று நுரை பலூனை வைத்திருக்கிறது.
இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் இணை சேர பெண் பூச்சிகளை ஈர்ப்பதற்காக ஆண் பூச்சிகள் வழங்கும் பரிசுகளாகும். பொதுவாக, இந்த பரிசுகள் ஊட்டச்சத்தானவையாக உள்ளன. எனவே பெண் பூச்சிகளும் பயனடைகின்றன.
விலங்குகள் சில நேரங்களில் தங்கள் விருப்பத்திற்குரியவரை மகிழ்விப்பதற்காக பரிசுகளை வழங்குவதாக அறியப்படுகிறது.
டால்பின்கள் மனிதர்களுக்கு ஈல், ட்யூனா மற்றும் ஆக்டோபஸ் போன்றவற்றை பரிசாக வழங்குவதை பார்க்க முடியும். அதேபோன்று, காகங்கள் தங்களுக்கு உதவிய மனிதர்களுக்கு பரிசுகளை வழங்குவதையும் காணலாம்.
“பழக் கொட்டைகள், ஆலிவ், பீர் பாட்டில் மூடிகள் மற்றும் ஒயின் கார்க்ஸ் உள்ளிட்டவற்றை காகங்களிடமிருந்து நான் பரிசாகப் பெற்றுள்ளேன்,” என்கிறார் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு அறிவாற்றல் பேராசிரியரான நிக்கோலா கிளேட்டன்.
மகிழ்ச்சிக்காக வழங்கப்படும் பரிசுகள்
காக குடும்பத்தைச் சேர்ந்த யூரேசியன் ஜேய் பறவைகள் தங்கள் இணைகளுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக பரிசுகளை வழங்குகின்றன.
கிளேட்டன் மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், ஆண் பறவைகள், அவற்றின் இணை அந்துப்பூச்சிகள் அல்லது புழுக்களை உண்பதை பார்த்து மகிழ்வதை கண்டறிந்துள்ளனர்.
தங்கள் இணைகளுக்கு சுவையான உணவு கொடுக்க வாய்ப்பு கொடுக்கப்பட்ட போது, ஆண் பறவைகள் தொடர்ந்து வெவ்வேறு உணவுகளைத் தேர்ந்தெடுத்தன.
எளிமையாகக் கூறுவதானால், பெண் பறவைகள் ஒரே மாதிரியான உணவுகளுக்கு பதிலாக புதிய உணவுகளை விரும்புகின்றன என்பதை ஆண் பறவைகள் புரிந்து கொண்டுள்ளன.
உதாரணத்திற்கு, “ஜேய் பறவைகள் தாங்கள் விரும்புவதைப் பொருட்படுத்தாமல், தங்களின் இணைகள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குகின்றன” என்கிறார் கிளேட்டன்.
மனிதர்களின் மரபணுவில் 99%-ஐ பகிர்ந்து கொண்டிருக்கும் போனோபோஸ் எனும் ஒரு பெரிய குரங்கு இனம், பரிசுகளை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.
2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மனிதர்களைப் போலவே போனோபோஸ் சில சமயங்களில் அந்நியர்களுக்கு வெளிப்படையாக பரிசுகளை வழங்குவதாகக் கண்டறியப்பட்டது.
விலங்குகள் ஏன் பரிசுகளை கொடுக்கின்றன?
இவை அனைத்தும் விலங்குகள் ஏன் ஒன்றுக்கொன்று பரிசுகளை வழங்குகின்றன என்று நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
இந்த நடத்தை வெவ்வேறு இனங்களில் பரிணாமம் அடைந்து வருவதால், இது ஆண் மற்றும் பெண் இருவரின் இனப்பெருக்க திறனையும் மேம்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
“ஆண் பறவை ஒரு பெண் பறவைக்கு உணவை வழங்குகிறது, அதன்மூலம் தனது இனப்பெருக்க பாதைக்கு வாய்ப்பு ஏற்படுத்துகிறது” என்று க்வின் கூறுகிறார்.
பரிசுகளை வழங்குவது மிகவும் இனிமையாகத் தோன்றாவிட்டாலும், காகங்கள் போன்ற மற்ற விலங்குகளும் பரிசு கொடுக்கும் எளிய செயலால் மகிழ்ச்சி அடைகின்றன என்பதை அறிவது மகிழ்ச்சி அளிக்கிறது.
“பூச்சி உலகில், ஆண் பூச்சி பரிசு கொடுக்கிறது. அதனால் பெண் பூச்சியுடன் இணைகிறது. ஆனால் ஜேய் பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு பறவைக்கு மட்டும் துணையாக இருக்கின்றன. எனவே அவை வழங்குவது லஞ்சம் அல்ல, இது ஒரு பரிசு” என்று கிளேட்டன் கூறுகிறார்.
“ஜேய் பறவைகள் மிகவும் புத்திசாலிகள். அவை நீண்ட காலம் வாழ்கின்றன. நமக்குத் தெரிந்தபடி, ஒரு உறவைப் பெறுவது சாதாரண விஷயம். ஆனால் பல ஆண்டுகளாக அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். எனவே, பரிசுகள் நன்றியுணர்வின் அடையாளமாகும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
யூரேசியன் ஜேய் போன்ற காகங்களின் விஷயத்தில், பரிசுகளை வழங்குவதற்குப் பின்னால் உள்ள அவற்றின் விருப்பம் மனிதர்களைப் போலவே இருக்கும். அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் சமூக பிணைப்புகளை வலுப்படுத்துதலின் அடையாளமாக அவை பரிசுகளை வழங்குகின்றன.
பரிசு வழங்குவது ஒரு இனிமையான மற்றும் மகிழ்ச்சியான உணர்வு அல்லவா?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.