கல்கிசையில் நேற்று (19) பதிவான துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு பாதாள உலக பிரமுகர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறின் விளைவாகும் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் கல்கிசை சிறிபால மாவத்தையில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தற்போது டுபாயில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் பிரபல பாதாள உலக பிரமுகர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சந்தேக நபர் மற்றுமொரு பிரபல பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட் என்பன கல்கிசை அத்திடிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கல்கிசை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இரு பாதாள உலக பிரமுகர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இரு கும்பல்களுக்கிடையிலான தகராறு காரணமாக நேற்றைய கொலையுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினர்.