by sakana1

கொழும்பு துறைமுக நகரில் விலாசமான மாநாட்டு மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு சீனா நன்கொடை வழங்க இணக்கம் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்துக்கு இணையாக கொழும்பு துறைமுக நகரில் விலாசமான மாநாட்டு மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு நன்கொடை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

இந்திய விஜயத்தைத் தொடர்ந்து சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டேன். கிராமிய அபிவிருத்தி, பொது அபிவிருத்திக்காக சீனா 20 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கியுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்துக்கு இணையாக கொழும்பு துறைமுக நகரில் விலாசமான மாநாட்டு மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு சீனா நன்கொடை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும்.

அம்பாந்தோட்டை பகுதியில் 3.7 பில்லியன் டொலர் நேரடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எரிபொருள் பரிமாற்றத்துக்கு தூதுவராயல மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியுடையவர்களுக்கு மாத்திரம் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வழங்கப்படும்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு 6000 ரூபா வழங்கப்படுவதை போன்று 300 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபா நிவாரணம் வழங்கப்படும். நாங்கள் மக்களுக்காகவே செயற்படுகிறோமே, தவிர ஒரு சில ஊடகங்களுக்கும், வர்த்தகர்களுக்கும், பொறுப்புக் கூற வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளினால் ஒருசிலர் கலக்கமடைந்துள்ளார்கள். அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருசில பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் பல கோடி ரூபா வரி செலுத்தவில்லை. உடனடியாக வரி அறவிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்