பதுளை மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை! பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, லுனுகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவிக்கிறார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் அடைமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் ஓடைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பனிமூட்டத்துடன் கூடிய குளிரான காலநிலை நிலவி வருகிறது.
பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்த அபாய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்போர் மண்சரிவு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல்களை பின்பற்றி மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் எமது அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.