‘அமைச்சர் சேகர் பாபுவின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது!’ – சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டம் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து வீரியம் குறையாத அளவுக்கு அரசுக்கு எதிரான விமர்சனங்களை எடுத்து வைத்து வருகிறார் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். “திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட்டுகள் இல்லை என்று சொல்லி இருக்கும்” அவர் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து…
தமிழகத்தில் நெருக்கடி நிலை இருப்பது போல் தெரிகிறது என கே.பாலகிருஷ்ணன் சொன்னதை நீங்களும் ஆமோதிக்கிறீர்களா?
எத்தகைய சூழ்நிலையில் அவர் அப்படி கூறினார் என்பதை பார்க்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ச்சியாக போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வந்தது. அதன் தொடர்ச்சியாக, எங்கள் கட்சியின் மாநில மாநாட்டு பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ச்சியாக காவல்துறையின் அணுகுமுறையில் இருந்து வெளிப்பட்ட கோபத்தில் இருந்து வந்த கருத்து அது. காவல்துறை எதற்கெடுத்தாலும் அனுமதி மறுப்பது என்ற மனநிலையில் இருந்ததால் இப்படியான கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.
கட்சி தலைமையையே மாற்றும் அளவுக்கு கூட்டணிக் கட்சிகளை அடிமைகளாக நடத்துகிறது திமுக என்கிறதே அதிமுக?
இதில் கடுகளவும் உண்மை கிடையாது. திமுக ஆட்சியின் மக்கள் நல திட்டங்களை நாங்கள் வரவேற்று ஆதரித்தோம். மக்களுக்கு எதிரான திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வந்த போது எதிர்த்திருக்கிறோம். எனவே, இப்போதுதான் நாங்கள் புதிதாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம், அதனால் தான் பாலகிருஷ்ணனை மாற்றிவிட்டார்கள் என்பதிலெல்லாம் துளியும் உண்மை கிடையாது. குறிப்பிட்ட வயது, குறிப்பிட்ட காலம் பதவி வகித்தால் பதவியில் தொடர முடியாது என்பது எங்கள் கட்சியின் விதி. எனவே, பாலகிருஷ்ணனை மாற்றியது என்பது வழக்கமான ஒன்று.
பாலகிருஷ்ணனின் தேவை என்னவென்று தெரிந்தால் அதை சரி செய்யலாம் என அமைச்சர் சேகர் பாபு சொன்னதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அமைச்சர் சேகர் பாபுவின் கருத்து உள்நோக்கம் கொண்டது. கடும் கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சிக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்ட நீங்கள், கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவுக்காவது நிறைவேற்றிவிட்டதாக நிம்மதி கொள்கிறீர்களா?
கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவுக்கு நிறைவேற்றி உள்ளனர். சட்டசபையில் பேசிய முதல்வர் “நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி உள்ளோம். சிலவற்றை நிறைவேற்ற வேண்டி உள்ளது” என தெரிவித்துள்ளார். 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என முதல்வர் தெரிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். நிச்சயமாக 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம்.
இத்தனை காலம் அமைதியாக இருந்துவிட்டு கூட்டணிக் கட்சிகள் இப்போது கொந்தளிப்பது பேர அரசியல் என்று சொல்வது உங்கள் காதில் விழுந்ததா?
இப்படிக் கொந்தளிப்பதால் அவர்கள் ஒன்றும் வாரிக் கொடுக்கப் போவதும் இல்லை நாங்களும் அதிகமாக கேட்கப் போவதும் இல்லை. இரண்டாவது, மக்கள் மத்தியில் இருந்து வரக்கூடிய கருத்துகள், அவர்களது தேவைகள், குறைகள் தீர்க்கப்படவில்லை என்பதுதான். இன்னும் ஓராண்டுதான் ஆட்சி உள்ளது.
அதற்குள் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் திமுகவுக்கே நல்லது. அப்போது தான், அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியும். மக்கள் எங்களிடம் சொல்வதை நாங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். மற்றபடி, தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இப்படி செயல்படுவதாகச் சொல்வது கொஞ்சம் கூட சரியில்லை.
அரசுக்கு எதிராக சிபிஎம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதும் அரசு நிர்வாகம் செம்மையாகவே நடப்பதாக சிபிஐ முத்தரசன் சர்டிஃபிகேட் கொடுக்கிறாரே..?
அது அவரது கண்ணோட்டமாக இருக்கலாம். இது குறித்து நீங்கள் முத்தரசனிடம் தான் கேட்க வேண்டும்.
அதிமுக வலுவிழந்து கிடப்பதால் தான் இன்னமும் திமுக-வை சார்ந்திருக்க வேண்டியிருப்பதாக நினைக்கிறீர்களா?
அதிமுக பலவீனம் அடைந்திருப்பது உண்மைதான். ஆனால், அதற்கும் திமுக-வின் நல்ல நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. திமுக-வை நாங்கள் சார்ந்திருப்பதற்கு முக்கியமான காரணம், மத்தியில் ஆளும் பாஜக-வால் வகுப்புவாத, சாதி வெறி, மத வெறி போன்ற நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், இன்றைக்கு பாஜக-வை தீவிரமாக எதிர்க்கும் உறுதியான சக்தியாக தமிழகத்தில் இருப்பது திமுக தான். ஆகவே, பாஜக-வை எதிர்க்கும் போராட்டத்தில் திமுக-வுடன் சிபிஎம் தொடர்ந்து பயணிக்கும்.
2026 தேர்தலில் அதே 6 தொகுதிகளில் தான் சிபிஎம் போட்டியிடப் போகிறதா?
2026 சட்டசபை தேர்தல் குறித்து இப்போதைக்கு நாங்களும் பேசவில்லை. அவர்களும் (திமுக) பேசவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எல்லா கட்சிகளும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதைத்தான் விரும்புவார்கள். சிபிஎம்-மும் அதையே தான் விரும்பும்.
சிபிளம் உட்பட கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றிலுமே திமுக-வுக்கு ஆதரவான ஒரு அணி இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அப்படி ஒன்றும் இல்லை. சிபிஎம் கட்சியை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக மாநில செயற்குழு என்ன முடிவு எடுக்கிறதோ அதைத்தான் ஒவ்வொருவரும் கடைபிடிப்பார்கள். இதில் திமுக-வுக்கு ஆதரவு அணி, அதிமுக-வுக்கு ஆதரவு அணி என்ற பேச்சுக்கே இடமில்லை.
இடதுசாரி இயங்கங்களை ஒன்றிணைப்பது சாத்தியமா.. அதற்கான முயற்சிகள் எந்த அளவில் உள்ளது?
இடதுசாரி அமைப்புகள், இடதுசாரி கட்சிகள், இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை ஒருங்கிணைத்து ஒரு இடதுசாரி ஜனநாயக அணியை உருவாக்குவது என்பது எங்களுடைய மாநில மாநாட்டின் முக்கியமான முடிவுகளில் ஒன்று. எனவே, அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். கட்சியின் அகில இந்திய மாநாடு முடிந்த பிறகு, இவ்விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.
ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறுவது ஏன்?
முதலாளித்துவ கட்சிகள் அமைக்கும் ஆட்சியில் சிபிஎம் எப்போதும் பங்கேற்காது. கேரளாவைப் போல இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், இடதுசாரி அணி ஆகியவற்றோடுதான் நாங்கள் ஆட்சியில் பங்கேற்போம்.
திமுக முதலாளித்துவக் கட்சி என்றால் அந்தக் கட்சியுடன் இடதுசாரிகள் கூட்டணி வைப்பது கொள்கை முரண்பாடு ஆகாதா?
இதில் ஒன்றும் கொள்கை முரண்பாடு கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அரசியல் பிரச்சினை என்பது முன்னுக்கு வருகிறது. 2021 தேர்தலின் போது பாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கமாக இருந்தது. அதற்கு ஏற்ப நாங்கள் எங்களுடைய தேர்தல் அணுகுமுறையை மேற்கொண்டோம். எனவே, அதில் பெரிய முரண்பாடு ஒன்றும் கிடையாது.
அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
ஓரளவுக்கு திருப்தி அளிக்கிறது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தார்கள். நீதிமன்றத்தின் மேற்பார்வையில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. என்றாலும், எஃப்ஐஆர் லீக் ஆனதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அதை மத்திய தகவல் ஆணையம் தாங்கள்தான் வெளியிட்டோம் என்ற முறையில் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் கூறும் தொழில்நுட்பக் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் அமலுக்கு வந்து நாடு முழுவதும் பதிவான ஆயிரக்கணக்கான எஃப்ஐஆர்-கள் லீக் ஆகாத நிலையில், இந்த வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் மட்டும் லீக்கானது எப்படி? இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
கம்யூனிஸ்ட்டுகள் குறித்தான திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் பேச்சுக்கு இடதுசாரிகள் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லையே?
கடுமையாக எதிர்வினை ஆற்றினோம். அவர் எங்களைப் பார்த்து சுயநலவாதிகள் என்கிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் நீர்த்துப் போய்விட்டதாகச் சொல்கிறார். தோழமைக் கட்சியில் உள்ள ஒரு மூத்த தலைவர் அவர். அப்படி பேசி இருக்கக்கூடாது. எங்களை பார்த்து சுயநலவாதிகள் என கூறிய ஒரே நபர் ராசா தான். பாஜக-வினர் கூட எங்களைப் பார்த்து சுயநலவாதிகள் எனக் கூறியது கிடையாது. அவர் கூறியது போல் நாங்கள் நீர்த்து விடவில்லை. இன்றைக்கும் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாங்கள்தான் முதலில் களத்தில் நிற்கிறோம்.