சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி முடிவடைந்த நிலையில், நூல் மொழிப் பெயர்ப்புக்காக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனுடன் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் 105 நூல்களையும் வெளியிட்டார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னையில் 2023ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3-வது ஆண்டாக சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜன.16ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதன் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் 30 மானிய மொழிப் பெயர்ப்பு புத்தகங்கள் உட்பட தமிழக பாடநூல் கழகம் தயாரித்த 105 நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுதவிர விழாவில் உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தகக் காட்சி சிறப்பு விருது ரியாத் புத்தகக் காட்சிக்கும், பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா, பேராசிரியர் அருள்சிவன் ராஜு ஆகியோருக்கும், நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது கிறிஸ்டியன் வியிஸ் மற்றும் கே.எஸ்.வெங்கடாசலத்துக்கும், கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பதிப்பகத்துக்கும், பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது துருக்கியின் டிஇடிஏ நிகழ்ச்சிக்கும், புத்தக ஊக்குவிப்பு விருது மங்கோலியா மேஜிக் பாக்ஸ், இத்தாலி கியூண்டி ஓடியன் புத்தக விற்பனை நிலையங்களுக்கும், உலகளாவிய இலக்கிய ஆதரவுக்கான விருது பொலானா குழந்தைகள் புத்தகக் காட்சிக்கும், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது ஏசியன் பதிப்பாளர்கள் சங்கம் உட்பட 4 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறு, குறு ,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, காங்கிரஸ் எம்பி சசி தரூர், அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் ஹிடோஸி ப்ருக்ஸ்மா, பள்ளிக் கல்வித் துறை செயலர் மதுமதி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே நடப்பாண்டு பன்னாட்டு புத்தகக் காட்சியில் அமெரிக்கா, மலேசியா, துருக்கி, தான்சானியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உட்பட 60-க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மொத்தம் 78 அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 2023ம் ஆண்டு 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2024ல் 40 நாடுகள் பங்கேற்று 752 ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. நடப்பாண்டு அந்த எண்ணிக்கை உயர்ந்து 1,125 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் தமிழில் இருந்து அயலக மொழிகளுக்கு 1,005 ஒப்பந்தங்களும், அயலக மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழக பள்ளிக்கல்வித் துறையின் தனித்துவ முன்னெடுப்பான சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா புதிய மைல்கற்களை அடைந்துள்ளது. 2023ல் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடங்கி, 2024ல் 752 என வளர்ந்து தற்போது 2025ம் ஆண்டில் 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது எழுத்தாளர்கள் ஞானபீடம் அல்ல, நோபல் பரிசே பெற உயர்வுள்ளுவோம். இந்த வியத்தகு சாதனைக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும், துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.